

ஓர் ஒளிப்படத் தொகுப்பு நுாலில் போபால் நச்சுவாயுத் தாக்குதலின் கொடூரத் துயரங்களைக் காட்சிகளாக முதன்முதலில் பார்த்தபோது எனக்கு வயது 22. அந்த ஒளிப்படங்கள் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றை யார் எடுத்திருப்பார் என்று பெயரைத் தேடினேன்.
சில நாள்கள் கழித்து அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பதாக அறிந்தேன். அவருடைய ஒளிப்படத்தைத் தபால் அட்டையில் பிரிண்ட் செய்திருக்கிற தகவலையும் கேள்விப்பட்டேன். இப்படியாக மேக்னம் நிறுவன ஒளிப்படக்கலைஞர் ரகுராய் என் மனதுள் ஆழமாகக் காலுான்றினார்.
அவரைச் சந்தித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 2011இல் டெல்லியில் ஒரு நாள் இந்திய ஓவிய விழாவுக்கு முதன்முறையாகச் சென்றபோது ரகுராயைத் துாரத்தில் இருந்து பார்த்தேன்.
இன்னொரு முறை டெல்லியில் ஒளிப்படக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றபோது, இந்திய ஒளிப்பட ஆளுமைகளான பிரசாந்த் பான்சார், ராம்ரகுமான், தினேஷ் கண்ணா, ரகுராய், பேப்லோ போன்றவர்களோடு கேலரியில் பேசிக்கொண்டே நடந்துபோகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அதில் ராம்ரகுமான் ஏற்கெனவே எனக்குத் தெரிந்தவர் என்பதால் அவர்தான் என்னை ரகுராய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அகமதாபாத்தில் ஓர் ஒளிப்படப் பயிற்சிப் பட்டறை.
ரகுராய் வந்தார் என்பதால் முதல் ஆளாகச் சேர்ந்தேன். அந்தப் பயிற்சியில் அவரோடு அகமதாபாத் பழைய டவுன், மார்க்கெட் பகுதிகளில் ஒளிப்படங்கள் எடுத்தோம். அவரது ஒளிப்படங்களைப் புத்தகத்தில் மட்டுமே பார்த்த எனக்கு, அவர் நேரடியாக எடுக்கும் ஒளிப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது மலைப்பாக இருந்தது.