

கடந்த அத்தியாயத்தில் குழந்தைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் மிகைவிருப்பம் (Obsession) குறித்துப் பேசியிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய பெற்றோரிடம் இருக்கும் சில முரண்பாடுகள் பற்றி அலசுவோம். இன்றைய பெற்றோருக்கு உள்ள பெரிய சிக்கலே அவர்களிடம் இருக்கும் நூற்றுக்கணக்கான வாய்ப்புகள்தான் (Options)!
பெருமையா, பயமா?
குழந்தைகளுக்கு உடை வாங்குவதில் தொடங்கி, விளையாட்டுப் பொருள்கள், பள்ளிகள் என ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் செய்யும் ஆராய்ச்சியை வைத்து ஒரு திரைப்படமே எடுத்துவிடலாம். ஒரு காலத்தில் அரசுப் பாடத்திட்டம், தமிழ்வழி, ஆங்கிலவழிக் கல்வி என்று தேர்வுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. இன்று மாநிலப் பாடத் திட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி என்று பட்டியல் நீள்கிறது.
‘நான் பார்க்காத உலகத்தை என் மகனோ மகளோ பார்க்க வேண்டும்!’ என்கிற பெற்றோரின் இந்த ஆசை வரவேற்கத்தக்கதுதான். ஆனால், சிக்கல் எங்கே தெரியுமா? அந்த உலகத்தை நாம் பார்க்கும் பார்வையிலேயே அவர்களும் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கல்வியின் முக்கியமான பணிகளில் ஒன்று சிந்தனையைத் தூண்டுவது. சிந்தனை வளர்ந்தால் கேள்விகளும் வரும்.
“என் நண்பன் வேறு சாதி என்றால் என்ன?” “நான் ஏன் என் சாதியில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?” “திருநங்கைகள் மீது ஏன் சிலருக்கு இவ்வளவு ஒவ்வாமை?” இப்படிக் குழந்தைகள் கேள்வி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
“நீ என்ன பெரிய மனுஷன் கணக்கா பேசுற?” என்று சில பெற்றோர் வாயை அடைக்க முயல்கிறார்கள். பள்ளியில் ‘கிரிட்டிக்கல் திங்கிங்’ வேண்டும் என்கிறோம்.