

இன்ஸ்டகிராம் இன்ஃபுளூயன்சர்கள் பலவிதம். அதில் ஃபிட்னெஸ் சார்ந்தவர்கள் ஒருவிதம். வெறுமனே ஜிம் செல்வது மட்டுமல்லாமல் தன்னுடைய ஃபிட்னெஸ் பயணத்தை இன்ஸ்டகிராமில் பதிவிடுவது, பிறருக்குப் பயிற்சியளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பரபரப்பாக இயங்கிவருகிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷரண்யா.
பாட்மிண்டன் வீராங்கனை
‘ஃபிட் வித் ஷரண்யா’ என்கிற பெயரில் இயங்கும் இன்ஸ்டகிராம் பக்கத்தைத் திறந்தால் ‘மசில் அப்’, ‘20 நொடிகள் ஹேண்ட் ஸ்டாண்ட்’, ‘15 கிலோ பிஸ்டல் ஸ்குவாட்’, ‘25 கிலோ புல் அப்’, ‘132 கிலோ டெட் லிஃப்ட்’ என ஃபிட்னெஸ் வட்டத்தில் சவாலானதாகக் கருதப்படும் ‘மூவ்’களை அசாதாரணமாக இவர் செய்யும் காணொளிகள் கொட்டிக்கிடக்கின்றன.
பல நாள் பயிற்சியும் விடாமுயற்சியுமே இவற்றைத் திறம்படச் செய்வதற்கு முக்கியக் காரணிகள் என்கிறார் ஷரண்யா. “சிறு வயது முதலே பாட்மிண்டனில் ஆர்வம் அதிகம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு ஏறக்குறைய 7, 8 ஆண்டுகள் தொழில்முறை பாட்மிண்டன் வீராங்கனையாக ஆடியுள்ளேன்.
மாநில அளவில் சாதிக்கத் தொடங்கும்போது முழுநேர வேலைக்குச் செல்லவேண்டி வந்தது. அப்போது கரோனா காலக் கட்டம். வீட்டில் முடங்கவேண்டிய சூழல். இதனால் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள்ளேயே பயிற்சிகளை மேற்கொண்டேன்.