

நமது ஒவ்வொரு நாளையும் ஒரு விளையாட்டை விளையாடுவதுபோல எதிர்கொண்டால் எப்படி இருக்கும்? விளையாட்டின் பரபரப்புகள், அமைதி, உற்சாகம், வெற்றி, தோல்வி தரும் பாதிப்பு, அவை தரும் பாடங்கள். அப்படி ஒரு நாள் தந்த அனுபவம் இது.
சற்றும் அறிமுகம் இல்லாத ஒருவன், அவனுக்குச் சிறிதும் தொடர்பில்லாத என் வீட்டினுள் என் அனுமதி யின்றியும், எனக்குத் தெரியாமலும், சட்டவிரோதமாகவும் நுழைந்து அவனுக்கு உரிமையில்லாத என் பொருள்களை, என் ஒப்புதலின்றி, அவனுடைய உடைமையாக்கிக்கொண்டு, என்னிடம் கூறாமலும், எனக்குத் தெரியாமலும் சென்றுவிட்டான்.
இந்த வரிகளின் உள்கருத்து, என் வீட்டில் திருடுபோய்விட்டது. திருடன் வந்தான், வென்றான், சென்றான்! அதிகாலையில் பார்த்தால், பக்கத்து அறையில் பீரோ திறக்கப்பட்டிருந்தது. பின்வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ‘எனக்கு மட்டும் ஏன்?’ என்கிற ஆத்ம விசாரணையுடன் அந்த நாள் கொடூரமான புன்னகையுடன் பிரம்மாண்டமாக நின்றது.
நாள்களுடன் சாதாரணமாக விளையாடுகிறோம். ஒரு சாதாரண நாள் என்று நம்பிக்கொண்டிருக்கையில் அந்த நாள் சட்டென அசாதாரணமான நாளாக மாறி, அப்பாவியாக விளையாடிக்கொண்டிருக்கும் நம்மை, எடுத்த எடுப்பிலேயே நிலைகுலைய வைத்துவிட்டால், நாம் என்ன செய்ய முடியும்? நான் சிறப்பாக விளையாடத் தயாராக இல்லாதபோது, நீ வெகுசிறப்பாக விளையாடுகிறாயே என்று நாள்களிடம் கோபிக்கவும், நழுவவும் நமக்கு விதிகள் இல்லை.
சதுரங்கத்தில் அதிக சக்தி வாய்ந்தது ‘ராணி’. இந்த ராணி காய் ஒரு யானை, மந்திரி, சிப்பாய், ராஜா ஆகியோரின் பலத்தை உள்ளடக்கியது. ஒரு ராணி உங்களுடன் இருந்தால், மறைமுகமாகக் குறைந்தபட்சம் இத்தனை காய்களின் பலத்தையும் கொண்டிருக்கிறீர்கள். இந்நிலையில் எதிராளிக்கு இரண்டு ராணிகள் இருந்து விட்டால்? ஒரு ராணியைச் சமாளிப்பதே சிரமம்.