இளைஞர்களின் இசை மாளிகை

இளைஞர்களின் இசை மாளிகை
Updated on: 
2 min read

ஒரு வீடு என்பது சாதாரணக் கட்டிடம் மட்டுமல்ல. அங்கு வாழ்பவர்களின் எண்ணற்ற நினைவுகளையும் உணர்வுகளையும் சுமந்திருக்கும் ஓர் இடம். அந்த வகையில், நினைவுகளையே ஓர் இசை மாளிகையாகக் கட்டமைத்து, தமிழ் சுயாதீன இசைத் தளத்தில் புதுமையான முயற்சியை முன்னெடுத்திருக்கிறது ‘சியென்னார் மூவர்’ இசைக்குழு. அக்குழுவின் 11 பாடல்கள் அடங்கிய ‘நினைவு மாளிகை’ எனும் புதிய இசை ஆல்பம் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வெளியாக உள்ளது.

எல்லாம் இசை: ‘பொன்னிற மாலை’, ‘இன்னும் என்ன’, ‘பொறுப்பு’ எனப் பல சுயாதீனத் தமிழ்ப் பாடல்களை எழுதி, இசையமைத்திருக்கிறார் சியென்னார். அவரோடு அரவிந்த் முரளி, வினய் ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ‘சியென்னார் மூவர்’ எனும் இசைக்குழுவை அமைத்து, பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். தங்களை ‘Genre-fluid’ இசைக்குழு என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அப்படியென்றால்?

“கர்நாடக இசை, ராப் என ஒரு குறிப்பிட்ட இசை வகைமைக்குள் அடங்காமல் இருப்பதே ‘Genre-fluid’. எந்த வகை என்றாலும், கடைசியில் எல்லாமே இசைதான். ஓர் இசை வகைமையிலிருந்து இன்னொரு வகைமைக்கு மாறிப் பாடல்களை இயற்றுகிறோம். பல்வேறு இசை வகைமைகளைக் கலந்தும் பாடல்களை இசைக்கிறோம். எங்கள் இசைக்குழுவைப் பொறுத்தவரை இயல்பாகவே ‘Genre-fluid’ஆக அமைந்துவிட்டோம்” என்கிறார் சியென்னார்.

இடையில் அரவிந்த் இன்னொரு விளக்கம் அளித்தார்: “இசையை இப்படி வகைமைப்படுத்துவது சந்தைப்படுத்துதல் தொடர்பாக உருவாக்கப்பட்ட வரையறைகள்தான். எங்கள் வாழ்க்கையில் இசை சார்ந்தும் இசைக்கு அப்பாற்பட்டும் பல்வேறு தாக்கங்கள் இருந்திருக்கின்றன. அப்படி இருக்கும்போது, எங்களை ஏன் ஒரே ஒரு வகைமைக்குள் அடைத்துக்கொள்ள வேண்டும்? அதனால், ஒரு குறிப்பிட்ட இசை வகைமையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒலித்தன்மையை உருவாக்குவதில்தான் கவனம் செலுத்துகிறோம். அந்த ஒலி இயல்பானதாக, உண்மையானதாக, எந்தச் செயற்கைத்தன்மையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும்” என்கிறார் அரவிந்த்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in