ஐ.டி. அண்ணாச்சியின் அலப்பறைகள்!

ஐ.டி. அண்ணாச்சியின் அலப்பறைகள்!
Updated on
2 min read

‘ஐ.டி. மேனேஜர் அண்ணாச்சி’ நகைச்சுவைக் கதாபாத்திரம் யூடியூபில் மிகப் பிரபலம். ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களைப் பகடி செய்து கிச்சுகிச்சு மூட்டும் இந்த நகைச்சுவைகளுக்குச் சொந்தக்காரர் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் நடராஜன். பல ஆண்டுகளாகப் பார்த்துவந்த ஐ.டி., வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, முழு நேர ஸ்டாண்ட் அப் காமெடியனாகக் களம்கண்டு கலக்கி வருகிறார்.

எல்லாம் வைரல் ரகம்: சிறு வயது முதலே மேடைப் பேச்சுகளிலும், நகைச்சுவையிலும் ராம்குமார் கில்லாடி. பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஐ.டி., துறையில் நுழைந்தார். கணினி முன் எட்டு மணி நேரம் உட்கார்ந்துகொண்டு வேலை செய்துவந்தார்.

வீடு, அலுவலகம் என்று வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் அவருக்குள் இயல்பாக இருந்த நகைச்சுவை அவரைவிட்டு சிறிது சிறிதாக ஒதுங்கிப்போனது. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அலுவலக நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் காமெடி தர்பாரைத் தட்டிவிட, கூடியிருந்தவர்கள் சிரிப்பலையில் மூழ்கிக் கைதட்டி ரசித்து மகிழ்ந்தனர்.

அந்தக் கணம் தொடங்கி நண்பர்களின் உந்துதலால் மீண்டும் நகைச்சுவையைக் கையில் எடுத்தார். இன்று தமிழ் ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளர்களில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்திருக்கிறார் ராம்குமார்.

“2020ஆம் ஆண்டு ஒரு ஸ்டாண்ட் அப் நிகழ்ச்சியில் நான் பேசிய நகைச்சுவைத் துணுக்குகள் சமூக வலைத்தளத்தில் வைரலாயின. மெல்ல வளர்ந்துவந்த என்னுடைய ஸ்டாண்ட் அப் காமெடி வாழ்க்கை கரோனா பெருந்தொற்றால் முற்றிலும் முடங்கிப்போனது.

வீட்டிலிருந்த நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது செய்யலாம் என்கிற எண்ணம் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. எனக்குப் பழக்கப்பட்ட ஐ.டி துறையில் நடக்கும் அலப்பறைகளை நகைச்சுவையாகப் பேசி சமூக வலைத்தளத்தில் பகிர ஆரம்பித்தேன். என்னுடைய காணொளிகள் வைரலாயின” என்று பெருமையோடு சொல்கிறார் ராம்குமார்.

நகைச்சுவை பலவிதம்: கரோனா கால ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருந்த பலருக்கும் இந்த நகைச் சுவைக் காணொளிகள் பொழுது போக்காக இருந்திருக்கின்றன. இந்த வரவேற்பைத் தவறவிடக் கூடாது என்று முடிவுசெய்த ராம்குமார், தொடர்ந்து காணொளிகளை உருவாக்கிப் பதிவேற்றினார்.

அவை எல்லாமே பார்வையாளர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற, அதன் தொடர்ச்சியாக ஸ்டாண்ட் அப் காமெடி வாய்ப்புகளும் வரத் தொடங்கின. தற்போது சென்னையில் பிரபலமான ‘ஓபன் மைக்’ நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கிறார் ராம்குமார்.

தமிழ் ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அரசியல் பகடி, வாழ்வியல் நகைச்சுவை, அனுபவப் பேச்சு எனப் பல வகை உண்டு. இதில் பெரும்பாலான நேரம் தன்னை ‘ஐ.டி. அண்ணாச்சி’யாக அடையாளப்படுத்திக்கொள்ளும் ராம்குமார், ஐ.டி. நகைச்சுவைகள், பணியிடம் சார்ந்த பகடிகள் போன்றவற்றை பற்றிச் சிறப்பாகப் பேசக்கூடியவர்.

ஒரு ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளராக இருப்பதில் பல சவால்கள் உள்ளன. ராம்குமார் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? “மேற்கத்திய நாடுகள், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் ஸ்டாண்ட் அப் காமெடிக்கு வரவேற்பு அதிகம். ஆனால், தென்னிந்தியாவில் அந்த ஆதரவு மிகவும் குறைவுதான்.

என்றாலும் சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெரிய நகரங்களைத் தவிர்த்துச் சிறு நகரங்களிலும், ஊர்களிலும் மேடைபோட்டு நிகழ்ச்சி நடத்த முயன்று வருகிறோம். நேரடியாக மக்களைச் சென்றடையும் முன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

முன்பு வார இறுதியில் நடைபெறும் நேரலை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு போன்று ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் கிடைக்க இன்னும் சிறிது காலம் ஆகலாம். சமூக வலைதளத்தில் பிரபலமடைவது என்பது தற்காலிகம்தான். டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியைப் பார்க்க வரும் கூட்டத்தைப் பார்த்தால்தான் இதில் உண்மையான உத்வேகம் கிடைக்கும்” என்கிறார் ராம்குமார்.

பாராட்டு vs விமர்சனம்: பொதுவாக ஸ்டாண்ட் அப் நகைச்சுவை யாளர்கள் சீரியஸான, முக்கியமான விஷயங்களையும் பகடி செய்கிறார்கள் என்கிற விமர்சனம் உண்டு. ஆனால், ஸ்டாண்ட் அப் காமெடியன்களுக்கு பொறுப்புணர்வு அவசியம் எனச் சொல்லும் ராம்குமார், சமூக வலைதள விமர்சனங்களுக்கு எல்லையேயில்லை என்கிறார்.

“நகைச்சுவை காணொளிகளை ரசிப்பவர்களின் பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், பிடிக்காதவர்கள் பெரும்பாலும் வசைச் சொற்களால் கமென்ட் பாக்ஸை நிரப்பிவிடுவார்கள்.

திட்டித்தீர்க்கும் விமர்சகர்கள் கொஞ்சம் கருணை காட்டினால் பரவாயில்லை. சில வேளை விமர்சனங்களால் மன உளைச்சல்கூட ஏற்படும். என்றாலும், விமர்சனங்கள் தெரிய வருவதால்தான் அடுத்த முறை நிகழ்ச்சிக்குத் தயாராகும்போது குறைகளைத் திருத்திக்கொள்ளவும் முடிகிறது” என யதார்த்தத்தை உணர்ந்தவராக இருக்கிறார் ராம்குமார்.

காணொளியைக் காண: https://bit.ly/3KnN3wb

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in