Last Updated : 21 Oct, 2016 10:54 AM

 

Published : 21 Oct 2016 10:54 AM
Last Updated : 21 Oct 2016 10:54 AM

வெள்ளச்சி காவியத்துக்கு நோபெல் விருது

‘அய்யோ போச்சே போச்சே இந்த வருஷமும் போச்சே… கொற்றவையே என்னைப் பெற்றவளே கண் திறந்து பாராயோ கைகொடுக்க மாட்டாயோ’ என்று வாய் வழியே சாதாரணத் தமிழில் புலம்பினான் வெள்ளைச்சாமி. யாரோ வெளிநாட்டில் பாட்டெழுதும் ஒருத்தருக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்காங்கன்னு கேட்டதும் நம்ம வெள்ளச்சாமிக்குப் பயங்கர கஷ்டமாயிருச்சு. சினிமாப் பாட்டு எழுதும் தனக்கு நோபெல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்த ஆண்டும் பொய்த்துவிட்டதே என்று ஆதங்கப்பட்டான்.

சமீபத்தில் அவன் எழுதிய, ‘ஆளைப் பார்த்தா ஆப்பிரிக்கா வாயைத் தொறந்தா அமெரிக்கா…’ பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போடுகிறது. சாகித்ய அகாடெமி விருது வாங்குவதற்காக எவ்வளவோ முயன்றும் வெள்ளச்சாமிக்கு அது கிடைக்கவே இல்லை. அதன் பரிந்துரைக் குழுவினரின் கால்களை எல்லாம் தமிழ்க் கவிதையால் அர்ச்சித்துப் பார்த்தான் வெள்ளச்சாமி ஆனாலும் அகாடெமியின் கதவுகள் அக்கடா என்று இருந்ததே ஒழிய இவனுக்காகத் திறக்கவே இல்லை.

வெள்ளயின் திரைப்பாடல்கள் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்தன. ஆனாலும் என்ன பண்ண தன்னை விருதுக் குழுக்கள் புறக்கணிக்கின்றனவே என அழுது புலம்பினான். அவனுடைய முதல் பாடல்:

மண் வாசம் வருதே…

மழை பொழியும் போதில்

மண் வாசம் வருதே…

வானம் அது தூற்றுகிறது

பூமியதைக் குளிப்பாட்டுகிறது…

அவன் மனைவியைப் பிரசவ மருத்துவமனையில் சேர்த்துவிட்டுப் பாட்டெழுதச் சென்றான் வெள்ளை. அவன் மனமெல்லாம் மனைவியின் கண்ணீர் நிரம்பி வழிகிறது. பாட்டோ மழை பொழியும் சூழலை வருணிக்க வேண்டியதிருக்கிறது. இவன் கண்களில் கண்ணீர்… வானத்தில் வழியுது மழை நீர். இசையமைப்பாளர் மெட்டை அமைத்துவிட்டு வெள்ளையை இறுமாப்புடன் பார்க்கிறார். வெள்ளை மவுனமாகத் தன் கிராப்புத் தலையைத் தடவிவிட்டுக்கொள்கிறான். சட்டென இரும்புக் காட்டுக்குள் கரும்புப் பூ ஒன்று பூத்ததைப் போல், மண் வாசம் வருதே… என்ற பல்லவியைப் பாட்டாகவே பாடிவிட்டான். இதென்ன நயாகராவில் சர்க்கரைப் பாகு வடிகிறது! நாளந்தாவில் பூக்களைத் தேன் வந்து தொடுகிறது என்று தோன்றியது இசையமைப்பாளருக்கு.

அதுவரை அமர்ந்திருந்த இசையமைப்பாளர் மிகச் சரியாக ஏழு அடிக்குத் துள்ளிக் குதித்து அவனைப் பாராட்டிவிட்டார். தன் மனைவி மீது கொண்ட பாசம் காரணமாக அவன், அவளுடைய பெயரான மண் கனியின் முதல் சொல்லையே தன் முதல் பாட்டின் முதல் சீராக்கினான். சீர் கொண்டு வந்த மனையாளுக்கு இப்படித்தான் அவன் சீர் செய்தான். தான் ஒரு ஏழைப் புலவன் என்பதில் வெள்ளைக்கு எப்போதும் தனிப் பெருமை. யாருக்கும் கொடுக்க என்னிடம் என்ன இருக்கிறது என் தமிழைத் தவிர என்று யார் வந்து என்ன தந்தாலும் பதிலுக்குக் கவிதை பாடி அனுப்பிவிடுவான்.

கள்ளிக் காட்டில் சுள்ளி பொறுக்கிய காலத்திலேயே வெள்ளைக்குத் தமிழ் மீது தீராக் காதல். காடுகரையெல்லாம் தமிழால் அழகு செய்து பார்ப்பான். மண் வாசம் வீசும் சொற்களைத் தந்துவிட வேண்டும் என்பதற்காகவே அவன் களிமண்ணைக் கரைத்தே எழுதிவருகிறான். வெறும் களிமண் கம்பீரக் கவிஞன் வெள்ளைச்சாமியின் கை பட்டதும் கற்பூர மணத்தைக் காகிதத்தில் கொட்டும். 12 ஆண்டுகளாக ஒரு பாட்டைப் பையில் மடித்துவைத்திருந்தான் வெள்ளை. புதிதாக வந்த இசையமைப்பாளர் ஒருவர் அதற்குப் பத்தே நிமிடத்தில் மெட்டுப் போட்டார். கொத்துப் பரோட்டாவுக்குக்கூட இதைவிட அதிக நேரமாகுமே என் இளவலே என்னே உன் மகிமை எனக் கண்ணீர் உகுத்து நின்றான் வெள்ளை. அந்தப் பாடல்: பெண்ணுக்குப் பொய் அழகு என்று தொடங்கி சாவுக்கு ஏதழகு என்று முடியும்.

பாட்டுக்கு மெட்டா, மெட்டுக்குப் பாட்டா என்று ஒருமுறை வெள்ளச்சாமியிடம் ஒரு படித்த பத்திரிகையாளர் பதமாகக் கேட்டார். கருங்காட்டில் வெள்ளை முயல் துள்ளியது போல் சிரித்தான் வெள்ளை. இரண்டும் இல்லை தோழா, செக்குக்குப் பாட்டு என்று ஒய்யாராமாய்ச் சொன்னான் அவன்.

தன் கவிதை நூல்களையும், சினிமாப் பாட்டுப் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெள்ளைச்சாமி ப்படியும் அடுத்த வருடம் நோபெல் வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறான். நோபெல் உரையைத் தயாரிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டான். அத்துடன் ஆஸ்கர் நாயகனிடம் ஒரு பரிந்துரைக் கடிதத்தையும் பெற்றுவிட்டான்.

விருதே விருதே வந்து என் வாசலில் விழாத விருதே

ஏழைப் புலவனின் புலம்பல்

உன் காதில் விழுவில்லையா?

உயிரைக் கரைத்துப் பாடல் புனையும் என்

திறமையை நீ காணவில்லையா?

உண்டென்று சொல்

இல்லை வந்தென்னைக் கொல்

விருதே விருதே வந்து என் வாசலில் விழாத விருதே…

என்பது போன்று ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி முடித்து, அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபெலுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதே வெள்ளையின் ஆசை. இல்லையென்றால் வெள்ளச்சி காவியம் படைத்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிட்டான். அந்த நாவலை எழுத அமெரிக்காவில் ஓர் ஆண்டு தங்கியிருக்க முடிவுசெய்துவிட்டான் வெள்ளைச்சாமி. அநேகமாக வெள்ளைக்குத்தான் அடுத்த நோபெல் என்பது உறுதி. அதற்குப் பின் ஹாலிவுட்டுக்கும் பாட்டெழுதுவான் வெள்ளை. நினைத்தாலே உடம்பெல்லாம் பூரித்துப்போகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x