Published : 15 Apr 2016 12:54 PM
Last Updated : 15 Apr 2016 12:54 PM

பொருள்தனைப் போற்று! 12 - முதலில் வந்தது முதல்!

'ஐயா. நீங்கதான் தலைவரா இருந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்'.

'அதெல்லாம் சரி. எப்படி நடத்தணும்னு திட்டம் போட்டு வெச்சிருக்கீங்க?

'நாங்க என்னய்யா திட்டம் போடறது? நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே பண்ணிக்கலாம்யா'.

'அதுக்கு இல்லப்பா. ஒரு காரியம் பண்ணனும்னு இறங்கறீங்க. அதுக்கு முக்கியமா என்ன வேணும்? பணம்'.

'எவ்வளவு தேவைப்படும்? அவ்வளவையும் எப்படி கொண்டுவரப் போறோம்? எப்போ கிடைக்கும்? யார் மூலம் கிடைக்கும்? இதெல்லாம் முழுசாக் கணக்கு பண்ணிக்கிட்டுதான், காரியத்துல இறங்கணும்'.

மிகச் சரியான பேச்சு!

எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க, கொஞ்சமாகவோ நிறையவோ நிதி தேவைப்படுகிறது. நம்மிடம் உள்ள, அல்லது நம்மால் கொண்டு வர முடிகிற, நிதியின் அளவுதான் நம்முடைய செயலின் அளவும்.

எது அனைத்தையும் தீர்மானிக்கிறது? எது அனைத்துக்கும் முதலில் வந்து நிற்கிறது? தொடக்கப் புள்ளி எது? நிதி. அதாவது, முதல்.

இதுக்கு வழியில்லாமல், எந்தத் தொழில்லயும் இறங்க முடியாது. கையில பணம் இல்லாம திட்டம் போடறது, வெறும் கையில முழம் போடற மாதிரி.

ஆம். எந்தவொரு வியாபாரம் செய்வதாக இருந்தாலும் அதற்கான‌ அடிப்படை, தொடக்க முதல் (Initial Capital).

சரி. கையில் பணம் வைத்திருக்கும் ஒருவர் எதற்காகத் தொழிலில் முதலீடு செய்ய வேண்டும்?

'நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா. வட்டிக்கு வேணுமா? பணம் தர்றேன். மாசாமாசம் சொன்ன தேதிக்கு கரெக்டா வட்டி கொடுத்துடணும்'.

ஐந்து காரணிகள்

இப்படிச் சொல்பவர்களை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்? அப்படியும் சிலர் தொழில் தொடங்கிக் கொண்டிருக்கிறார்களே! எது இவர்களைத் தொழில் செய்யத் தூண்டுகிறது? ஐந்து காரணிகளைச் சொல்லலாம்.

முதலாவதாக, வட்டி மூலம் வருவதை விடவும், கூடுதல் லாபம். இரண்டாவதாக, 'தொழில் அதிபர்' என்பதால் கிட்டும் சமூக அந்தஸ்து. மூன்றாவதாக, குறிப்பிட்ட தொழிலில் உள்ள அதீத ஆர்வம். நான்காவதாக, 'என்னால எத்தனைக் குடும்பம் பிழைக்குது?' எனும் சமூகப் பொறுப்புணர்வு. ஐந்தாவதாக, 'ஜெயிச்சுக் காட்டறேன்' எனும் லட்சிய வேட்கை.

முதலாளிகளில் மூன்று வகை உண்டு. குறுகிய காலத்தில், பெரு முதலாளியாய் உயர்ந்தவர்கள். பரம்பரைத் தொழில் புரியும் முதலாளிகள். தொழிலாளியாய் இருந்து முதலாளியாய் உயர்ந்தவர்கள்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், இரண்டு, மூன்றாம் வகையினர்தான் அதிகம்.

இரும்பு, போக்குவரத்து, துணி வியாபாரம் செய்யும் பரம்பரை முதலாளிகளைப் பார்க்கலாம்.

மென்பொருள் துறை, ஊடகத் துறை, சேவைத் துறையில், புதிய முதலாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். காரணம்? இத்துறைகள் சமீப காலங்களில் உருவானவை. வளர்ந்தவை.

நல் உறவு கூட்டுறவு

ஓட்டல், பல சரக்குக் கடைகள், வாகனங்கள் பழுது பார்த்தல் போன்ற துறைகளில், தொழிலாளியாக உழைத்து, படிப்படியாய் முதலாளியாக உயர்ந்தவர்கள் மிக அதிகம்.

தொழிலுக்கான முதலீட்டை, ஒருவரேதான் கொண்டு வர வேண்டும் என்பதில்லை. ஒரு சிலர் சேர்ந்து முதல் போட்டும் தொழில் தொடங்கலாம். ஒரே ஒருவரின் முதலீட்டில் தொழில் தொடங்கினால் அது, தனி நபர் வியாபாரம். அவர் மட்டுமே முழு, தனி உரிமையாளர்.

ஒருவரின் தனிப்பட்ட முதலீட்டில் நடப்பதனால், வருகிற லாபமும் நஷ்டமும் அவர் ஒருவருக்கே. டீக்கடை, பொட்டிக் கடை, டூ-வீலர் மெக்கானிக் கடை, பழச்சாறுக் கடை, பூக்கடை, காய்கறிக் கடை போன்றவை அனேகமாக இந்த வகை.

ஒரு சிலர் சேர்ந்து, ஆளுக்குச் சிறிது முதல் போட்டு, தொழில் நடத்தினால், அது கூட்டு வியாபாரம். பொதுவாக அவரவர் போட்ட முதலுக்கு ஏற்ப, லாபம், நஷ்டத்தை பங்கு போட்டுக் கொள்வர். துணிக்கடை, நகைக் கடை, மொத்த விற்பனைக் கடைகள், இன்ன பிற தொழில்கள் இவ்வகையில் சேரும்.

பணமும் போட்டு, வியாபாரத்திலும் முனைந்து ஈடுபட்டால் அவர், 'செயல்படும்' பங்குதாரர் (working partner).

'பணம் கேட்டீங்க. கொடுத்துட்டேன். வியாபாரத்துக்கு எல்லாம் கூப்பிடாதீங்க. ஆளை விடுங்க சாமி' என்று முதல் போடுவதுடன் ஒதுங்கிக் கொண்டால் அவர், 'செயல்படா' பங்குதாரர் (dormant/sleeping partner).

கூட்டு முதலீட்டில், தனி வகை ஒன்று உண்டு. தீபாவளி சமயத்தில் ஆங்காங்கே பட்டாசுக் கடைகள் முளைக்கும் அல்லவா? ஒவ்வொருவரும் தத்தம் சக்திக்கு ஏற்பப் பணம் போட்டு, மொத்த விற்பனையில் பட்டாசு வாங்கி வந்து, சில்லறை விலையில் விற்கிறார்கள்.

தீபாவளி கடந்து விட்டதா? அதுவரை விற்றதால் வந்த பணத்தையும், விற்காமல் மீதம் உள்ள சரக்கையும், அவரவர் போட்ட பணத்துக்கு ஏற்பப் பிரித்துக் கொண்டு போய் விடுவார்கள். நன்றாக கவனிக்கவும். ரொக்கம், சரக்கு எதுவும் மீதம் இல்லாமல், எல்லாவற்றையும் பிரித்து எடுத்துக் கொண்டு போய் விடுவர். அத்துடன், அந்தப் பட்டாசுக் கடையின் இருப்பு முடிந்து விடுகிறது.

ஆம். இது, குறுகிய காலத்துக்குக் குறிப்பிட்ட வியாபாரத்துக்கு மட்டுமேயான ஏற்பாடு. இதனைக் கூட்டு முனைவு (Joint Venture) என்று அழைக்கிறோம்.

பொது இலக்கு உள்ள சிலர் சேர்ந்து, லாபத்தைப் பிரதானமான நோக்கமாகக் கொள்ளாமல் சேவையை முன் நிறுத்தித் தொழில் புரிந்தால், அதுவே கூட்டுறவு சங்கம் (கோ-ஆபரேடிவ் சொசைட்டி).

'வெளியில, மத்த கடைங்கள்ல எல்லாம், நூறு ரூபாய்க்குக் குறையாம சொல்றாங்க. அது எப்படி. 'சொசைட்டி' கடையில மட்டும், அறுபது ரூபா, எழுபது ரூபாய்க்குக் கிடைக்குது? இங்கே மட்டும் எப்படி, விலை கம்மியா இருக்கு?'. அதுதான் சங்கம் நடத்துகிற வியாபாரத்தின் சிறப்பு. அங்கே லாபம், பிரதானமாக இல்லை. ஆகவே, விலையும் மலிவாக இருக்கிறது. லாபம் குறைவு என்பது மட்டுமல்ல. வருகிற லாபமும், சங்கத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்று சேர்கிறது.

அதனால்தான் சொல்கிறோம், 'தமக்குத் தாமே உதவிக் கொள்ளுதல்' என்ற கருத்துருவில் இயங்குகிற கூட்டுறவுச் சங்கம் என்கிற வழிமுறைதான், ஆகச் சிறந்த ஆரோக்கியமான வணிக அமைப்பு.

குறைந்த விலையில் சிறந்த சேவை புரியும் கூட்டுறவுச் சங்கங்கள், மிகப் பெரிய சமூகப் பயன்பாடு கொண்டவை. அதனால்தான், 'கூட்டுறவே நாட்டுயர்வு' என்கிறோம்.

யாருக்கு எவ்வளவு பங்கு?

சிலர் சேர்ந்து, முதலீடு செய்து, ஒரு நிறுவனம் தொடங்கலாம். வரையறைக்கு உட்பட்ட பங்குகளுடன் (shares) 2 முதல் 50 பேருக்கு உட்பட்ட உரிமையாளர்களைக் கொண்டிருந்தால், அது 'பிரைவேட் லிமிடெட்'.

இதுவே, 7 பேருக்குக் குறையாத உரிமையாளர்களுடன், பொது மக்களிடம் இருந்து பங்கு முதல் (share capital) பெற்று, இயங்குகிற நிறுவனமா?

அது 'பப்ளிக் லிமிடெட்'.

இவ்வகை நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால், 'லிமிடெட்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். (கவனிக்கவும்: 'பிரைவேட்' என்கிற சொல் இல்லை).

'பங்கு வர்த்தகம்' என்று, பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வருகிற போதெல்லாம், 'இது என்ன?' என்ற கேள்வி பலருக்கும் தோன்றும். ஆனால், யாரிடமும் சென்று கேட்பதில்லை.

வணிக நிறுவனங்கள், தமக்கு வேண்டிய முதலீட்டுப் பணத்தை, சிறு சிறு அலகுகளாகப் பிரித்து, 'எங்களுக்கு யார் வேண்டுமானாலும் பணம் தரலாம்' என்று கூவிக் கூவி அழைக்கிறார்கள். ஓர் அலகு என்பது ஒரு பங்கு (share) ஆகும்.

'நமது இந்தியா லிமிடெட்' என்று ஒரு நிறுவனம். சும்மா, ஒரு உதாரணம்தான். தனது வணிகத்தில் முதலீடு செய்ய, பொது மக்களிடமிருந்து, பத்து லட்சம் ரூபாய் சேகரிக்கத் திட்டம் இடுகிறது. இதை எப்படிச் செயல்படுத்தும்?

(வளரும்)

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x