Last Updated : 08 Mar, 2022 09:32 AM

 

Published : 08 Mar 2022 09:32 AM
Last Updated : 08 Mar 2022 09:32 AM

கதைப்போமா அறிவியல் - 25: சத்தம் போடாதே!

இரு வாரங்களுக்கு முன்பு மெக்சிகோவில் ஏகப்பட்ட கறுப்பு நிறப் பறவைகள் ஒரு தெருவில் இறந்துகிடந்தன. அங்கே பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவைப் பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. நூற்றுக்கணக்கான பறவைகள் தரையை நோக்கி வேகமாகப் பறந்துவந்து மோதுகின்றன. மோதிய வேகத்தில் சில பறவைகள் சுதாரித்து, மேலெழுந்து பறக்கின்றன. மற்றவை சில பல நொடிகளுக்குப் பிறகு பறக்கின்றன. பறக்க முடியாத அளவுக்குக் காயம்பட்ட பறவைகள் இறந்து போகின்றன.

25 செ.மீ. வரை நீளமும் சுமார் 100 கிராம் எடையும் கொண்ட அவை, மஞ்சள் தலை கரும்பறவை (Yellow-headed Blackbird) எனப் பறவை ஆர்வலர்களால் அழைக்கப்படுகின்றன. இந்தக் குறிப்பிட்ட விநோத நிகழ்வின் அறிவியலுக்குள் செல்லும் முன், பறவைகளைப் பற்றிச் சில விவரங்கள்.

நடக்க முற்பட்ட விலங்கினங்களுக்குப் பரிணாம வளர்ச்சியில் முதுகெலும்பு உருவானது போல பறக்க முற்பட்ட விலங்கினங்களுக்குக் கூடு போல உடலும் இறக்கையும் உருவானது என்கிறார்கள் பரிணாம உயிரியலாளர்கள். புத்திக்கூர்மை இல்லை என மட்டம் தட்டிப் பேச ‘பறவை மூளை’ (Bird Brain) என்கிற ஆங்கில பதம் உண்டு. இது மிகவும் தவறு. உடல் அளவு, மூளை அளவு விகிதத்தில் பார்த்தால், மனிதனைத் தவிர விலங்கினங்களில் அதிக அறிவு கொண்டவை பறவைகள்.

உலகில் 10,000 முதல் 13,000 வரை பறவை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. எண்ணிக்கை அளவில் 40,000 கோடிப் பறவைகள் இருப்பதாகத் தோராயமாகக் கணக்கிடுகிறார்கள்.

சூழலியல் சமநிலையைப் பராமரிப்பதில்பறவைகளின் பங்கு அதிகம். கட்டுமானம்,சாலைகள் அமைத்தல், மின் விநியோகத்துக் காகக் கம்பிகள் நடுவது போன்ற பணிகளின் போது பறவைக் கூடுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்கிற சட்டம் அமெரிக்காவில் (Environmental Protection Agency) உள்ளது.

இப்போது மஞ்சள் தலை கரும்பறவைகளுக்கு வருவோம். கோடையில் வட பகுதியிலிருக்கும் இப்பறவைகள் குளிர் காலத்தில் தெற்கு நோக்கிப் பறப்பதை வழக்கமாகக் கொண்டவை. மேற்சொன்ன நிகழ்வின் காணொலி வைரலானதும் பலவித கருத்துக்கள் சொல்லப்பட்டன.

l விஷ வாயு ஏதோ கசிந்து, அதைச் சுவாசித்த பறவைகள் மயங்கின.

l மின் கம்பியில் அமர்ந்திருந்தபோது, அதிக அளவில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால் விழுந்தன.

l 5ஜி அலைபேசி தொழில்நுட்பத்தின் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டன.

l வேற்றுக் கிரகத்தவர்கள் வான்வெளி யிலிருந்து லேசர் துப்பாக்கியால் சுட்டதால் வீழ்ந்தன.

இப்படி ஆளாளுக்கு ஏதேதோ சொல்ல, தெளிவான விவரம் சில நாட்களுக்குப் பின்னர் வெளியானது. கார்னெல் பல்கலைக்கழகத்தின் பறவையியல் ஆராய்ச்சித் துறையின் தலைவர் கெவின் மேக்கோவன் எழுதியிருக்கும் அறிக்கை முக்கியமானது.

நடந்தது இதுதான். “மஞ்சள் தலை கரும்பறவை போன்ற சிறிய அளவு கொண்ட பறவைகள் மந்தை மனப்பாங்கு கொண்டவை. ஒன்றின் இறகுக்கு மிக அருகே மற்றதன் இறகு இருப்பதாக வகுத்துக் கொண்டு, பறக்கும்போது உருவாக்கப்படும் காற்றழுத்த மாறுபாடு, இவற்றைக் களைப்பில்லாமல் வெகுதூரம் பறக்க வைக்க உதவுகிறது. தங்களை வேட்டையாடும் பருந்து அல்லது கழுகு போன்றவற்றைக் கண்டுவிட்டால், அவை வழக்கத்தைவிட இன்னும் நெருக்கமாகப் பறப்பது உண்டு.

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை நேரடியாகச் செயல்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட பறவையை வேட்டையாட முடியாது என்கிற பரிணாமக் குறியீடு பறவைகளுக்குள் எழுதப்பட்டிருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், வேட்டையாட வரும் எதிரியைப் பார்த்துப் பதறியபடி இப்படி மொத்தமாகப் பறக்க முற்படுகையில், வெளிப்புறச் சத்தங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு பறத்தலில் திசை மாறிவிடலாம். இதுதான் மெக்சிகோ சம்பவத்திலும் நடந்திருக்கிறது” என்கிறார் மெக்கோவன்.

ஒலி எழுப்புவதன் மூலம் தங்களுக்குள் தொடர்பு வைத்திருக்கும் உயிரினங்கள், மனித வளர்ச்சியின் மூலம் எழும்பும் சத்தங்களால் பலியாவது தொடர்ந்து நடக்கிறது. பறவைகள் மட்டுமல்ல;தமிழகத் தென் கடற்கரை கிராமங்களில் அவ்வப்போது கொத்துக் கொத்தாக திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இறப்பதைப் பார்த்திருக்கலாம். “கடல் வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதால் அவை கரைக்கு வந்து தற்கொலை செய்துகொள்கின்றன” என்று மக்கள் பேசிக்கொள்வதை நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆராய்ச்சி முடிவு திமிங்கிலங்களின் இச்செயலுக்குப் பின்னால் ஒலி மாசுபாடு காரணம் எனத் தெரிய வந்தது.

பறவைகள், திமிங்கலங்கள் மட்டுமல்ல; மனிதர்களுக்கும் ஒலி மாசுபாட்டால் சிக்கல்கள் உண்டு. ஒலி டெசிபல் முறையில் அளக்கப்படுகிறது. இலைச்சருகுகள் உரசிக்கொள்வது - 20 டெசிபல். ஆம்புலன்ஸ் சத்தம் - 120 டெசிபல். 85 டெசிபிலுக்கு மேலான ஒலி மனிதச் செவிகளைப் பாதிக்கும் ஆபத்து உண்டு. தூண்டப்படும் சத்தத்தால் செவித்திறன் இழப்பு (Noise Induced Hearing Loss-NIHL) என்கிற நேரடிப் பிரச்சினையுடன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், தூக்கக் கலக்கம், மன அழுத்தம் போன்றவை ஒலி மாசால் உருவாகும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆக, அதிக அளவிலான சத்தம் வரும் இடங்களில் பணிபுரிபவர்கள், வசிப்பவர்கள் ஒலியால் செவிகள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

(நிறைவடைந்தது)

பறவைகள் மோதும் காணொலியைக் காண: https://youtu.be/JWQNHJL90v4

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x