Published : 04 Mar 2016 11:35 AM
Last Updated : 04 Mar 2016 11:35 AM

செய்யலாம் ஒரு ‘ஸ்மார்ட் சவாரி!

ஸ்மார்ட்டாக, செம த்ரில்லாக சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது ‘குருஷேத்ரா'! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு வருடமும் ‘சி.இ.ஜி. தொழில்நுட்ப மன்றக் குழு'வினரால் நடத்தப்படும் சர்வதேச டெக்னோ - மேனேஜ்மென்ட் திருவிழாதான் இது.

கடந்த 2007 தொடங்கிய இந்தத் திருவிழா ஒவ்வொரு வருட‌மும் நான்கு நாட்கள் நடைபெறும். பொறியியல் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு ‘ப்ளாட்ஃபார்ம்'. இந்த வருடம் பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கி 20ம் தேதிவரை நடைபெற்ற விழாவில் இடம்பெற்ற ‘மைண்ட் ப்ளோயிங்' விஷயங்கள் இங்கே...

வேகம்... வேகம்...

எந்தக் கல்லூரித் திருவிழாவிலும் இதுவரை நடைபெறாத ‘காட் ஸ்பீட்' என்னும் நிகழ்ச்சி இங்கு நடைபெற்றது. 'ரேடியோ கன்ட்ரோலர் கார்' வைத்து இந்த ரேஸ் நடைபெற்றது.

இரண்டு டீம். இரண்டு கார். ரேஸ் ட்ராக்கில் பல தடைகள் வைக்கப்பட்டிருக்கும். எந்த கார் தடைகளைத் தாண்டி ‘ஃபினிஷ் லைனை' முதலில் தொடுகிறதோ அந்த டீமுக்குத்தான் வெற்றி.

கேட்பதற்கு சாதாரணமாக இருக்கும். ஆனால் ட்ராக் முழுக்க நியான் லைட் வைத்து அலங்கரித்து நடத்தப்பட்ட அந்தப் போட்டியை ‘பேக்ரவுண்டி'ல் பசங்க அடிக்கும் விசில் சத்ததிற்கிடையே பார்க்கும்போது, நீங்கள் ஆவீர்கள் 'மெர்சல்!'

ஸ்மார்ட் ஆட்டோ

நீங்கள் சென்னைவாசியா? அப்படியென்றால் ஆட்டோ பயணம் உங்கள் வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும். அந்தப் பயணம் பலருக்குப் பல்வேறு அனுபவங்களைக் கொடுத்திருக்கும். அவை எப்படிப்பட்ட அனுபவமாக இருந்தாலும் ஆட்டோக்கள் சென்னையின் அடையாளம்தான்.

ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் வாட்ச் இந்த வரிசையில் புதிதாக இடம் பிடிக்கவுள்ளது ‘ஸ்மார்ட் ஆட்டோ’. சென்னை அண்ணா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ‘ஸ்மார்ட் ஆட்டோவை’ வடிவமைத்துள்ளனர்.

அதைப் பற்றி அவர்களிடம் கேட்டபோது, “இந்த ஸ்மார்ட் ஆட்டோவின் முக்கிய நோக்கம், மக்களின் பாதுகாப்பான பயணம். இது முற்றிலும் ‘கஸ்டமர் ஃபிரெண்ட்லி'யாக உருவாக்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.

இந்த ஸ்மார்ட் ஆட்டோ பெயருக்கேற்ப பல ஸ்மார்ட்டான அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆட்டோவினுள் ஆட்டோசாட்டிக் மின்னணு மீட்டர், மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் அல்ட்ராசோனிக் சென்ஸார் போன்ற அதிந‌வீனத் தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோவில் பயணிகள் உள்ளார்களா என்பதை அல்ட்ராசானிக் சென்சார் கண்டறியும். பயணிப்பவர் இருந்தும் ஆட்டோ மீட்டர் ஆன் செய்யவில்லை என்றால் இந்தக் கருவி பயணித்த தூரத்தைக் கணக்கிட்டு சரியான தொகையைக் கூறும்.

தனியே பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக எமர்ஜென்சி பட்டன் ஒன்று ஆட்டோ மீட்டரில் உள்ள ‘கீபேட்'டில் பொருத்தப்பட்டிருக்கும். ஓட்டுநர் தவறான பாதையில் செல்கிறார் என்றாலோ அல்லது வேறேதும் அவசரம் ஏற்பட்டாலும் அந்த பட்டனை அழுத்தி யாருடைய அலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டாலும் அந்த நபருக்குத் தொடர்ச்சியாக அழைப்பு, ஆட்டோ பயணிக்கும் இடம் மற்றும் அதன் பதிவெண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி செல்லும்.

ஸ்மார்ட் ஆட்டோ என்ற மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்தால், செல்ல வேண்டிய இடத்திற்கான வழி மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள முக்கியமான இடங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

ஆட்டோவின் மேற்புறம் சூரிய சக்தித்தகட்டை பதிப்பதால் அதன் மூலம் சூரிய சக்தியை சேகரித்து அதன் மூலம் பயணம் செய்பவர்கள் அலைபேசிகளை சார்ஜ் செய்துகொள்ளலாம். இப்படிப் பல ‘ஸ்மார்ட்னெஸ்' கொண்டது இந்த ஆட்டோ. இந்த ஆட்டோ நடைமுறைக்கு வந்தால் இனி செய்யலாம் ‘ஸ்மார்ட்' சவாரி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x