

‘நாய்தான் மனிதனின் சிறந்த நண்பன்’ என்ற கூற்றை உலகில் யாரும் மறுப்பதற்குத் துணியமாட்டார்கள். மனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவை நாய்கள்தாம். நாய்கள் மனிதர்களிடம் காட்டும் நிபந்தனையற்ற அன்புதான் அதற்குக் காரணம். சமீபத்தில், உலகம் முழுவதும் சர்வதேச நாய்கள் தினம் (ஆக. 26) கொண்டாடப்பட்டது.
பெருந்தொற்றின் காரணமாக பெரும்பான்மை நேரத்தை மக்கள் இணையத்திலேயே செலவிட்டுவருகிறார்கள். அதனால், இந்த ஆண்டு சர்வதேச நாய்கள் தினத்தை சமூக ஊடகங்களில் இணையவாசிகள் விமரிசையாகக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். அத்துடன், இந்தப் பெருந்தொற்று காலத்தில், செல்லப்பிராணிகளில் நாய்களைப் பற்றிய பதிவுகள் 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஒரு சமூக ஊடக ஆய்வுத் தெரிவிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் உலகளவில் பிரபலமாக இருக்கும் சில ‘டாகோஸ்’ (Doggos), ‘பப்பர்ஸ்’(Puppers), ‘பப்பரினோஸ்’ (Pupperinos) ஆகியோரைப் பற்றி நாம் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. இந்தச் சொற்கள் எல்லாம் உலகம் முழுவதும் உள்ள நாய்ப் பிரியர்களால் நாய்களைச் செல்லமாக அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இணைய மொழியின் வெளிப்பாடு. ‘டாக்கோஸ்’ மட்டுமல்லாமல் ‘கார்கோஸ்’ (cargos), ‘ஃப்ளஃப்பர்ஸ்’ (fluffers), ‘ஃப்லூஃப்ஸ்’ (floofs), ‘வூஃப்பர்ஸ்’ (woofers), ‘பூஃப்பர்ஸ்’ (Boofers) ஆகியவையும் நாய்களை அவற்றின் தோற்றங்களை வைத்துக் குறிப்பிடும் செல்லப்பெயர்கள்தாம்.
இந்தப் பெருந்தொற்று கால நிச்சயமற்ற சூழலை நாள்தோறும் புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கு இவர்கள் நமக்கு உதவுகிறார்கள். லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கும் சில ‘டாகோஸி’ன் பட்டியல் இது.
ஜிஃப்பாம் (@Jiffpom)
உலகிலேயே மிக அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கும் பிரபலமான பொமரானியன் செலிபிரிட்டி இவர். இவருக்கு இன்ஸ்டாவில் 1.7 கோடி ரசிகர்கள் உண்டு. இவரின் ஒளிப்படத்தை இன்ஸ்டாவில் முதன்முறையாகப் பார்ப்பவர்கள் பலரும் அழகான பொம்மை என்று நம்பும்
அளவுக்கு இவருடைய தோற்றம் இருக்கிறது. அமெரிக்காவின் பிரபல பாடகர் அரியானா கிராண்டேவும் இவருக்கு ரசிகர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்ஸ்டாவில் மார்க் ஸக்கர்பர்க், பில்கேட்ஸைவிட இவரைப் பின்தொடர்பவர்கள் அதிகம். அந்த வகையில் கின்னஸ் சாதனைகூட படைத்திருக்கிறார். ஒரு பதிவுக்கு அதிகமாகச் சம்பாதிக்கும் இன்ஸ்டா பிரபலங்களில் இவரும் ஒருவர்.
டௌக் தி பக் (@itsdougthepug)
உலகின் பிரபலமான பக் இவர்தான். இவருக்கு இன்ஸ்டாவில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். ஜிஃப்பாமைப் போல் இவரும் இசைக் காணொலியில் நடிக்கும் அளவுக்குப் பிரபலம். 'பாப் கலாச்சார அரசர்' என்று இவரை வர்ணிக்கிறார்கள். ஐஸ்கிரீம், பர்கர், பிரெஞ்ச் ஃப்ரைஸ் ஆகியவை இவருடைய விருப்ப உணவுகள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவர் வெளியே செல்லும்போதெல்லாம் முகக்கவசம் அணிந்துசெல்கிறார் என்பது இவரின் ‘செலிபிரிட்டி’ பொறுப்புணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
மாருடாரோ (@marutaro)
மாருடோ என்றும் மாரு என்றும் செல்லமாக அழைக்கப்படும் இவர் டோக்கியோவைச் சேர்ந்தவர். முதலில் ஜப்பானில் மட்டும் பரவியிருந்த இவருடைய புகழ், விரைவில் உலகம் முழுவதும் பரவிவிட்டது. இவருக்கு இன்ஸ்டாவில் 25 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். 2011-ல் ஜப்பானை
பூகம்பமும் சுனாமியும் தாக்கியபோது, மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக மாருடாரோவுக்கு இன்ஸ்டா கணக்கைத் தொடங்கினார் இவரின் சொந்தக்காரர் ஷின்ஜிரோ ஒனோ. அதிலிருந்து இதுவரை பலருக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை அளிக்கக்கூடிய பிரபலமாக இவர் இருக்கிறார்.
இந்தப் பிரபலங்களின் பட்டியல் மிக நீளமானது. அதனால் வாய்ப்புக் கிடைக்கும்போது, ‘மர்னிதிடாக்’ (@marniethedog), ‘ட்யூனாமெல்ட்ஸ்மைஹாட்’(@tunameltsmyheart), லோகிஸ்டாகிராம் (@lokistagram) உள்ளிட்டோரின் இன்ஸ்டா பக்கங்களைப் பார்த்து, அவர்களைப் பற்றியும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.