Published : 21 Aug 2015 03:15 PM
Last Updated : 21 Aug 2015 03:15 PM

உறவுகள்: கண்மூடித்தனமான காதலா?

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். என் தந்தை ஓய்வுபெற்ற அரசு நடத்துநர். எனக்கு மூன்று அண்ணன்கள். அப்பாவுக்குக் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. நல்ல தந்தையான அவரால் நல்ல கணவனாக இருக்க முடியவில்லை. சிறு வயது முதலே பெற்றோருக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்த சண்டையில் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நின்றுபோனது. நான் 11-ம் வகுப்பு படித்தபோது, தந்தை வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். உறவினர் ஒருவர் மூலம் அவரைப் பற்றி அறிந்துகொள்கிறோம்.

நான் 12-ம் வகுப்பு படித்தபோது ஓய்வுபெற்ற என் தந்தை அப்போதுகூட குடும்பத்தினர் யாரையும் அழைக்காமல் தனியாகவே போய்விட்டார். எங்களுக்கெல்லாம் இதில் வருத்தம். அம்மாவும் காயப்பட்டுவிட்டார். அவர் தற்கொலை வரை சென்று திரும்பினார். என் தாய் குறித்த சந்தேகத்தால் தந்தை அப்படி நடந்துகொள்கிறார் என்பது உறவினர் ஒருவர் மூலம் தெரிந்தது. எனவே அதுவரை அடங்கி நடந்த அம்மா, அப்பாவை எதிர்க்க ஆரம்பித்தார். தந்தையோ, பிள்ளைகளும் மனைவியும் தன்னை மதிக்கவில்லை என்று கூறினார். ஊரில் தந்தைக்கு நல்ல பெயர். ஆகவே அவர்கள் எங்களைத் தவறாகக் கருதுகிறார்கள். கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தவரைத் துரத்திவிட்டோம் என்று எங்களுக்குக் கெட்ட பெயர்.

அம்மாவை வேண்டுமானால் ஆச்சியுடன் இருக்கச் சொல்கிறோம் நீங்கள் எங்களுடன் இருங்கள் என அண்ணன் அப்பாவிடம் சொன்னான். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கல்யாண வயதில் அண்ணன் இருப்பதால் தாய் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இந்நிலையில் என் இரண்டாவது அண்ணனுக்கு உறவுப் பெண்ணைப் பேசி முடித்துவிட்டார்கள். தந்தை இல்லாமலே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அப்பா இல்லாமல் அண்ணன் கல்யாணம் நடப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் குடும்பம் இணைந்திருக்க என்ன செய்ய வேண்டும்?

கலைந்துபோன கூட்டை மீண்டும் கட்டப் பார்க்கும் உங்களது முயற்சி கைகூடட்டும். உங்கள் அம்மா ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்பாவின் நடத்தையைப் பற்றி ஊகிக்கத்தான் முடிகிறது. அம்மாவின் மீது ஏற்பட்ட சந்தேகத்துக்கு ஏதாவது அடிப்படை உண்டா? சந்தேகம் காரணமாகத் தனது பிள்ளைகள் தனக்குப் பிறக்கவில்லை என்று நினைத்தாரா? அப்படி நினைத்தால் பிள்ளைகளிடம் பாசமாக இருக்க மாட்டாரே!

ஆனால் நல்ல அப்பா என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்களே! அடிப்படை யில்லாமல் அம்மாவின்மீது சந்தேகம் வந்தால், அது சந்தேக நோயாக (Paranoid disorder) இருக்கலாம். அந்நோய் உள்ளவர்கள் தான் நம்பும் விஷயத்துக்கு நிரூபணமே இல்லாவிட்டாலும் ‘அது அப்படித்தான்’ என்று வாதித்து, சந்தேகத்துக்கு ஆளானவரைத் துன்புறுத்துவார்கள். மருந்து கொடுத்தால் ஓரளவு மாற்றம் வரும். ஆனால் வைத்தியத்துக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். உங்கள் தாய் சித்திரவதை பொறுக்க முடியாமல், பதிலடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

அப்பாவுக்காக அம்மாவை ஒதுக்கிவைக்க நினைத்தது என்ன நியாயம்? அம்மா புண்பட்டுப் போயிருக்கும் நேரத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா? அப்பா, அம்மாவைச் சேர்த்துவைப்பது என்பது, அவர்கள் இருவரும் ஒத்துழைத்தால்தான் முடியும். அப்பாவுக்கு உடல்நலம் குன்றிப் போனால் உறவுகளைத் தேடிவரலாம். அதுவரை அவருடனும் தொடர்பில் இருங்கள். முடிந்தால் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிப் போகலாம். மனம் திறந்து பேச ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். ஊராரிடம் பெற்றோர் பிரிந்திருக்கும் உண்மையான காரணத்தைச் சொல்ல முடியாது. அதனால் பழி உங்கள் அம்மா, குழந்தைகள் மீதுதான் வரும். அப்பாவை விட்டுக்கொடுக்காமல் அதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். பாராட்டுகிறேன்.

நான் படித்து முடித்து ஓராண்டு ஆகிறது. 6 மாதம் முன்பு என் மாமாவின் நிறுவனத்தில் வேலை செய்தபோது ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலானது. முதலில் நான்தான் அவரிடம் கூறினேன். ஒரு மாதம் சென்ற பிறகு அவரும் காதலிப்பதாகச் சொன்னார். அவருடைய அக்கா மணமாகி லண்டனில் இருக்கிறார். அவருடைய அம்மாவும் அக்காவுடன்தான் இருக்கிறார். இவர் அப்பாவுடன் இங்கே இருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வாரம் ஒரு முறை வெளியே அழைத்துச் செல்வார். சந்தோஷமாகத் தான் இருக்கிறேன். அவர் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்வார். அடிக்கடி போன் ரீசார்ஜ் பண்ண பணம் கேட்பார், ஆயிரக்கணக்கில் பணம் கேட்பார், சட்டை வாங்கிக்கொடு என்பார். நானும் எல்லாம் செய்வேன். வெளியே போகும்போது நான்தான் பணம் கொடுப்பேன். அவர் எங்களுடைய காதல் பற்றி யாரிடமும் கூறியதில்லை. நான் என் தங்கையிடம் மட்டும் சொல்லியிருக்கிறேன். நான் அவரை அதிகமாகக் காதலிக்கிறேன். அவர் இல்லை என்றால் என்னால் வாழ முடியாது. அவரை மட்டும் இல்லை; அவரது குடும்பத்தையும் நேசிக்கிறேன். எங்களுடன் வேலை செய்த ஒரு தோழி, அவன் நல்லவன் அல்ல. அவனுக்குத் தேவை பணம், பழக ஒரு பெண் அவ்வளவுதான் மற்றபடி அவன் உன்னைக் காதலிக்கவில்லை என்று கூறினாள். ஆனால் நான் அவளைத் திட்டிவிட்டேன், அவள் நட்பை முறித்துவிட்டேன். அவள் ஏன் அப்படிக் கூறினாள் என்றால் அவர் எல்லாப் பெண்களுடனும் பேசுவார். எனக்கும் அது தெரியும். அவரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது உன்னைக் காதலிக்கத் தொடங்கிய பிறகு எந்தப் பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டார்.

அவர் நகரத்தில் வளர்ந்தவர். நான் கிராமத்துப் பெண். ஒரு பெண்ணைக் காதலித்து, பின்பு பிரிந்துவிட்டார். காரணம் நான் கேட்கவில்லை. சில சமயம் என்னுடன் பேச மாட்டார். ஏன் எனக் கேட்டால் இதையெல்லாம் கேட்காதே என்று கூறுவார். ஆனால் அவரை நான் என்னைவிட நம்புகிறேன். உங்கள் அக்காவிடம் நம் காதல் பற்றிச் சொல்லுங்கள் என்றால் இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் இப்போதுதான் நான் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். உண்மையில் நான் அவரைப் பற்றி எதுவும் தெரியாமல் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். அவர் என்னை உண்மையாகக் காதலிக்கிறாரா அல்லது பணத்துக்காகப் பழகுகிறாரா என்று தோன்றுகிறது. என் காதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தோழி சொன்னதை ஆய்வு செய்யாமலேயே ஒதுக்கிவிடும் அளவுக்குக் காதல் உங்கள் கண்ணை மறைத்திருக்கிறது! காதலியின் பணத்தை அனுபவிக்க, அவருக்கு அவமானமாகவே இல்லையே! யாரிடமும் காதலைப் பற்றிச் சொல்லாதது (அக்காவிடம் கூட), முந்தைய காதல் ஏன் முறிந்தது என்று உங்களிடம் பகிர்ந்துகொள்ளாதது, மூட் சரியில்லை என்றால் ஏன் என்று நீங்கள் கேட்டும் (தானாகவே சொல்லத் தோன்றும் காதலிக்கும் பருவத்தில்) சொல்ல மறுப்பது போன்றவை நெருடலாக உள்ளன. நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர், அதற்கேற்றபடி உழைக்கிறாரா என்பதைக் கவனியுங்கள்.

அவரது உண்மையான முகத்தைத் தெரிந்துகொள்ள நீங்கள் செய்ய வேண்டியது- கொஞ்சம் சிஐடி வேலை, ஒத்துழையாமை. நட்பை முறித்துக் கொண்ட தோழியிடம் பேசி உங்கள் காதலரைப் பற்றி அவருக்குத் தெரிந்த தகவல்களைச் சேகரியுங்கள். காதலர் கேட்பதையெல்லாம் சாக்கு சொல்லி மறுத்துவிடுங்கள். பணம் கொடுப்பதை நிறுத்துங்கள்; உங்களை அனுபவிக்க இதுவரை சம்மதித்திருந்தால், இனி கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். உங்கள் ஒத்துழையாமைக்கு அவர் கொடுக்கும் ‘ரியாக்‌ஷ’னில் அவரது முகத்திரை கிழியும்.

உங்களால் இப்படி ஒரு சோதனைக்கு அவரை உட்படுத்த முடியாது; ஏனெனில் மறுத்துவிட்டால் அவர் என்னை ஒதுக்கிவிடுவாரோ?' என்ற பயம் இருக்கிறது! சரிதானே? இதற்குப் பெயர் காதலா? உங்கள் மனம் எந்தத் தகவலையும் பகுத்தறிந்து பார்க்க மறுக்கிறது. ‘என்னை நம்புவதைவிட அவரை நம்புகிறேன்' என்பது முட்டாள்தனம், கண்மூடித்தனமான காதல். விழித்துக்கொள்ளுங்கள். படுகுழியில் விழாமல் இருக்க வேண்டுமென்றால் இப்போதாவது எச்சரிக்கை தேவை. என் கணிப்பு தவறானால் என்னைவிட மகிழ்பவர் யாருமில்லை!

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x