Last Updated : 18 Aug, 2017 10:11 AM

Published : 18 Aug 2017 10:11 AM
Last Updated : 18 Aug 2017 10:11 AM

கிராஃபிக் நாவல்: கிராஃபிக்கிலும் ஹிட் அடிக்கும் ‘ஷோலே’

ரா

ம்கர் என்ற கிராமத்துக்கு வரும் ஒரு சிறை அதிகாரி தாக்கூர் என்றழைக்கப்படும் கிராமத்துப் பெரிய மனிதரைச் சந்திக்கிறார். அவரிடம் இருவரின் படத்தைக் காண்பித்து, அவர்களை அழைத்துவரச் சொல்கிறார் தாக்கூர்.

குற்றவாளிகளான அவர்கள் இருவரையுமா என்ற கேள்விக்கு, பிளாஷ்பேக்கில் அவர்கள் தனது உயிரைக் காப்பாற்றியவர்கள் என்று சொல்கிறார் தாகூர். பின்னர், அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ராம்கர் வருகின்றனர். கப்பர் சிங் என்ற கொள்ளைக் கூட்டத் தலைவனைப் பிடிக்க, இவர்கள் இருவரின் உதவியையும் கோருகிறார் தாக்கூர்.

இரட்டை ஹீரோக்கள்

இவர்கள் இருவரும் திருடர்களாக இருந்தாலும், அவர்களிடம் ஒரு நேர்மை இருப்பதாக தாக்கூர் கருதுகிறார். ஆகவே, கப்பர் சிங்கைப் பிடிக்க தான் கொடுக்கும் முன்பணம் 20,000 ரூபாய், அரசாங்கம் கொடுக்கும் பரிசுப் பணம் 50,000 ரூபாய் என மொத்தத்தையும் இவர்கள் இருவருக்குமே கொடுத்துவிடுவதாகச் சொல்கிறார். இதற்கு இருவரும் ஒப்புக்கொண்டு ராம்கருக்கு வரும்போது, அங்கே குதிரை வண்டியோட்டும் தன்னுவைச் சந்திக்கிறார்கள். பின்னர் கிராமத்தில் பணம் வசூலிக்க வரும் கப்பர் சிங்கின் ஆட்களை அடித்து விரட்டுகிறார்கள்.

18CHVAN_Artist_Edison_George_Manu.jpgஎடிஸன் ஜார்ஜ்

யார் இந்த கப்பர் சிங்?

இப்படியாகக் கதை நகர்கிறது. கதையின் 27-வது பக்கத்தில் முதன்முதலாக கப்பர் சிங்கின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. ஆனாலும், கப்பர் சிங் அறிமுகம் ஆவதென்னவோ அதற்கும் 15 பக்கங்கள் கழித்துத்தான். ஆனால், என்ன ஓர் அறிமுகக் காட்சி அது! இந்தியத் திரைப்படங்களில் ஆகச் சிறந்த வில்லனாகக் கருதப்படும் கப்பர் சிங், கையில் தோட்டாக்கள் பொருத்தப்பட்ட ஒரு பெல்ட்டுடன், தனது குழுவைச் சேர்ந்தவர்களைத் திட்டிக்கொண்டே, ஆக்ரோஷமாகத் தோன்றும் காட்சி அது.

திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கும் சரி, பார்க்காதவர்களுக்கும் சரி, இது ஒரு அட்டகாசமான அறிமுகம். படத்தில் கதாநாயகர்களின் வசனங்களைவிட, கப்பர் சிங் பேசிய வசனங்களே இன்றளவும் நினைவுகூரப்படுவதால், இந்த கிராஃபிக் நாவலிலும் அவரது காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

சுருக்கமானதொரு சவால்

கிராமத்து மக்களுக்குக் கதாநாயகர்கள் ஜெய், வீரு கொடுத்துள்ள இந்தப் புதிய தைரியத்தை அழிக்கத் திட்டமிடும் கப்பரின் தந்திர யோசனைகளும் தாக்கூரின் வியூகமும் நண்பர்களின் வீரமும் தியாகமும் கதையை ஜெட் வேகத்தில் நகர்த்துகின்றன. கிளைமாக்ஸ் காட்சிகளை கிராஃபிக் நாவலில் இன்னமும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம்.

ஆனாலும், மூன்றே கால் மணி நேரம் ஓடும் ஒரு பெரிய திரைப்படத்தை, 112 பக்கங்களில் கிராஃபிக் நாவல் வடிவில் கொண்டுவருவது சாதாரண காரியமல்ல. ஆனால், அதையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, சாதித்துக் காட்டிய கிராஃபிக் நாவல்தான் ‘ஷோலே’. 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்கள்கூட இந்த கிராஃபிக் நாவலைப் படித்தால், ரசிக்கும்வகையில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை பாராட்டத்தக்கது என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
 

தலைப்புஷோலே
கதாசிரியர்அஸ்வின் பாண்டே
ஓவியர்எடிஸன் ஜார்ஜ் (மனு)
வெளியீடு2014 (112 முழுவண்ணப் பக்கங்கள், 395 ரூபாய்)
பதிப்பாளர்கிராஃபிக் இந்தியா
கதைக்கருதன் குடும்பத்தினரை அழித்த கொள்ளைக் கூட்டத்தினரை பழிக்குப் பழி வாங்கும் ஒரு முன்னாள் போலீஸ்காரரின் கதை.


குறிப்பு
: ‘ஷோலே’ திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்ட கிராஃபிக் நாவல்
 

18CHVAN_Ashwin_Pande_Writer_Sholay_Graphic_Novel_Profile_3.jpgஅஸ்வின் பாண்டேright

அஸ்வின் பாண்டே (கதாசிரியர்): கடந்த 12 ஆண்டுகளாக காமிக்ஸ் கிராஃபிக் நாவல்களுக்கு கதை, திரைக்கதை எழுதிவருகிறார் டெல்லியில் படித்த அஸ்வின். கிராஃபிக் இந்தியா நிறுவனத்தின் எடிட்டரான இவர், இந்தியாவின் பிரபல கார்ட்டூன் தொடர்கள், திரைப்படங்களுக்கு காமிக்ஸ் வடிவம் கொடுத்துள்ளார். கிரிஷ், ஷோலே, பாகுபலி என்று இவர் காமிக்ஸ் வடிவம் கொடுத்த ஹிட் படங்கள் பல.

எடிஸன் ஜார்ஜ் (மனு)

கேரளாவைச் சேர்ந்த இவர், இந்தியாவின் சிறந்த ஓவியர்களில் ஒருவர். ராஜ் காமிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி, அதன் பின்னர் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் காமிக்ஸ் தொடர்களுக்கு ஓவியம் வரைந்த முதல் இந்தியர் என்ற புகழைப் பெற்றவர்.கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x