Last Updated : 24 Mar, 2017 10:33 AM

 

Published : 24 Mar 2017 10:33 AM
Last Updated : 24 Mar 2017 10:33 AM

வருகிறது புதிய ‘பவர்!’

பயங்கரமான சக்திகள் வாய்ந்த சூனியக்காரி ஒருத்தி, பல அட்டூழியங்களைச் செய்து வருகிறாள். அவளது சக்திகளுக்கு முன்பாக மனிதர்களால் எதுவுமே செய்ய முடியாதபோது, ஒரு சாமியார் அவளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிவிடுகிறார். யாருமே அந்தப் பெட்டியைத் திறக்கக் கூடாது என்று உத்தரவும் போட்டு விடுகிறார்.

பல ஆண்டுகள் அமைதியாகக் கழிகின்றன. இந்தப் பெட்டியைப் பற்றிய விஷயம் தெரியாத, ஊருக்குப் புதியவர்கள் அந்தப் பெட்டியைத் திறந்துவிட, அந்தச் சூனியக்காரி மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்து அட்டகாசம் செய்கிறாள். இப்போது அந்தச் சாமியார், தீய சக்திகளை அழிக்க, இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி, அந்தச் சூனியக்காரியை எதிர்கொள்கிறார். காலம்காலமாக இதுதான் பேய்ப்படங்களின் முக்கியமான டெம்ப்ளேட். விட்டலாச்சார்யாவின் அடிச்சுவட்டில் பலரும் இதே உத்தியைப் பின்பற்றி, வெற்றி கண்டார்கள். சமீபத்தில் ஹிட்டான ‘அருந்ததி’ படம்கூட ஏறக்குறைய இதே கதைதான்.

ஆச்சரியப்பட வேண்டாம், இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசாகப் போகும் 'பவர் ரேஞ்சர்ஸ்' படத்தின் கதையும் இதுதான். என்ன, ஜப்பானிய / ஹாலிவுட் பின்புலம் இருப்பதால், கதையை வேறு லெவலுக்கு மாற்றி இருக்கிறார்கள், அவ்வளவுதான். ஆனால், பவர் ரேஞ்சர்ஸ் வரிசையில் இந்தத் திரைப்படம் முதலாவது அல்ல. 24 ஆண்டுகளாகத் தொலைக்காட்சித் தொடராகவும், காமிக்ஸ் வடிவிலும் கலக்கி வந்த ஒரு தொடர்தான் இந்த பவர் ரேஞ்சர்ஸ்.

எப்படி உருவானது ‘பவர்?’

1993-94-ம் ஆண்டு காலகட்டத்தில்தான் முதன்முதலாக பவர் ரேஞ்சர்ஸ் தொலைக்காட்சித் தொடர் ஹாலிவுட்டில் ஆரம்பித்தது. இத்தொடரின் மகத்தான வெற்றி, அதன்பிறகு பல வழியில் தொடர்ந்தது. குறிப்பாக, பவர் ரேஞ்சர்ஸ் பொம்மைகள், டீ ஷர்ட்டுகள், வீடியோ கேம்கள், தொப்பிகள், பவர் ரேஞ்சர்ஸ் ரோபோக்கள் என்று பல விதமாகச் சந்தைப்படுத்தப்பட்ட இத்தொடரின் ஆரம்பம் ஜப்பானிலிருந்து, அதுவும் குறிப்பாக 1975-ல் ஒளிபரப்பான ஒரு தொடரிலிருந்து என்றால், நம்ப முடிகிறதா? தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலகட்டங்களில், குறிப்பாக 80-களில் மத்தியில், ஞாயிற்றுக்கிழமை காலைகளில் 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரையில் கார்ட்டூன் நேரம் என்று ஒருமணி நேர ஸ்லாட் இருந்தது.

டாம் & ஜெர்ரி முதல் பல அற்புதமான கார்ட்டூன்கள் இந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்டன‌. உண்மையில் இந்த ஒருமணி நேர ஸ்லாட், ஒரு உலகளாவிய விஷயமாகும். அதுவும் ஜப்பானில் இன்றும் ஞாயிறு காலை அதே வேளை, ‘சூப்பர் ஹீரோ டைம்’ என்றே அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் ஒளிபரப்பப்படும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி மரியாதை இருக்கிறது. இந்த சூப்பர் ஹீரோ டைமில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் ஒரு தொடர்தான் ‘சூப்பர் சென்ட்டாய்’.

கலக்கும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்

ஜப்பானியத் திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் ‘தொகுசாட்ஸு’ என்றொரு வகை இருக்கிறது. ஸ்பெஷல் எஃபெக்ட்டுகளைக் கொண்டது என்று பொருள்படும் இந்த வகையான தொடர்களில் திகில், அமானுஷ்யம், அறிவியல் புனைவு, கற்பனைக்கெட்டாத விலங்கினங்கள்தான் பேசுபொருள். ‘காட்ஸில்லா’, ‘கைஜூ’ வகைத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாமே தொகுசாட்ஸு ஜானர்தான்.

இந்த தொகுசாட்ஸு வகையில் பிரபலமான ஒரு தொலைக்காட்சித் தொடர்தான் சூப்பர் சென்ட்டாய். ஜப்பானிய மொழியில் ‘சென்ட்டாய்’ என்றால், சிறப்புக் குழு என்று சொல்லலாம். இந்த சூப்பர் சென்ட்டாய் தொடரிலிருந்து பல விஷயங்களை அப்படியே எடுத்து, ஆரம்பிக்கப்பட்டதுதான் அமெரிக்க பவர் ரேஞ்சர்ஸ் தொலைக்காட்சித் தொடர். குறிப்பாக, ஆசிய பாணியிலான சண்டைக்காட்சிகள், கணினி முறையிலான ஸ்பெஷல் எஃபெக்ட்டுகள் என்று பலவற்றைச் சொல்லலாம்.

பவர் ரேஞ்சர்ஸ் கதை

இரண்டு விண்வெளி வீரர்கள் ஒரு வித்தியாசமான விண்வெளிக் கலனைப் பார்க்கிறார்கள். அந்தக் கலனில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவர்கள் அதைத் திறக்க, ஒரு அயல் கிரக சக்தி வெளிப்படுகிறது. பத்தாயிரம் ஆண்டுகளாக அந்தக் கலனில் அடைக்கப்பட்டிருந்த அந்தத் தீய சக்தியின் பெயர் ரீட்டா ரெப்ஸ்யூலா. எல்ட்டார் என்ற கிரகத்தைச் சார்ந்த இந்த ரீட்டாவை, அடைத்து வைத்தவர் ஸோர்டான் என்ற ஒரு துறவி.

தான் அடைக்கப்பட்டிருந்த கலனிலிருந்து சுதந்திரம் பெற்றுவிட்ட ரீட்டா, அவளது அயல் கிரகப் படையுடன் பூமியைக் கைப்பற்றி ஆட்சி செய்ய நினைக்கிறாள். ரீட்டா விடுதலையான விஷயம் தெரிந்த ஸோர்டான், உடனடியாக அவரது அசிஸ்டென்ட் ‘ஆல்ஃபா 5’ மூலமாக ஐந்து பேரைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்களை பவர் ரேஞ்சர்ஸ் ஆக்குகிறார்.

புதிய படத்தில் சிறப்பு?

பவர் ரேஞ்சர்ஸ் வரிசையில் இது மூன்றாவது திரைப்படமாக இருந்தாலும், இது ‘ரீபூட்’ படமென்பதால், கதை ஆரம்பத்திலிருந்தே தொட‌ங்குகிறது. ஐந்து இளைஞ‌ர்கள் ஒரு தீவில் அவர்களுக்கான பவர் காயின்களைப் பெற்று, பவர் ரேஞ்சர்ஸ் ஆக மாறுகின்றனர். அவர்களிடமிருக்கும் பவர் காயின்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில், வெவ்வேறு விசேஷ‌ சக்திகளைக் கொடுக்கும் வல்லமை கொண்டவை. இந்த பவர் காயின்களைப் பெற்று, தனது சக்தியை வலுவாக்கிக்கொள்ள நினைக்கும் ரீட்டா அவர்களைத் தாக்குகிறாள். இவர்களுக்கிடையேயான மோதலே திரைப்படத்தின் ஹைலைட்.

90-களில் சிறுவர்களாக இருந்தவர்களையும் மனதில் கொண்டு, சற்றே சீரியஸாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து, ஒரு நாவல் வரவிருக்கிறது. படம் எங்கே முடிகிறதோ, அங்கிருந்து நாவலின் கதை ஆரம்பமாகிறது. பூம் ஸ்டுடியோ என்ற காமிக்ஸ் பதிப்பக நிறுவனம் பவர் ரேஞ்சர்ஸ் காமிக்ஸ் கதைகளைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x