Last Updated : 10 Feb, 2017 11:11 AM

 

Published : 10 Feb 2017 11:11 AM
Last Updated : 10 Feb 2017 11:11 AM

இயற்கை வண்ணங்களை உருவாக்கும் ஓவியன்!

நாம் நமது பாரம்பரியத்திலிருந்து விலகிச் செல்லும்போதெல்லாம் சில கைகள் நம்மை மீட்கும் முயற்சிகளில் ஈடுபடும். அந்தக் கைகள் ஏந்திச் செல்லும் ஒளிக் கீற்றுகள் அடுத்த தலைமுறைகளுக்கு நமது பாரம்பரியத்தை பரவச் செய்யும். அத்தகைய ஓர் ஒளிக்கீற்றைத்தான் ஏந்திச் சென்று கொண்டிருக்கிறார் ஏகன்.

கோயில்களில் அழியும் நிலையிலுள்ள இயற்கை வண்ணங்களால் தீட்டப்பட்ட பழங்கால ஓவியங்களை மீட்டெடுப்பதற்கும், அந்தக் கலையை அழிவிலிருந்து மீட்டு வருங்கால தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் தீவிர கள ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இவர். அடிப்படையில் கலை வடிவமைப்பாளரான இவரின் இயற்பெயர் ஏகாம்பரம்.

சமீபத்தில் திரைக்கு வந்த ‘காஷ்மோரா’ படத்தில் கார்த்தியின் நெற்றியிலுள்ள கழுகு டாட்டூவை வரைந்தது இவர்தான். அதுமட்டுமில்லாது அப்படத்தில் கார்த்தியின் ஆடை வடிவமைப்பிலும் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

ஓவியங்கள் மீது தனக்கிருக்கும் காதல் குறித்தும், பாரம்பரிய ஓவியங்களை மீட்டெடுக்கும் தன் பயணம் குறித்தும் நம்மிடையே வண்ணமிடுகிறார்...

“அடிப்படையில் நான் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன். சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் மீது ஆர்வம் இருந்தது. முதலில் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் நுண்கலைகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அதனால் வரலாறு படித்தேன். வரலாறு படித்துக்கொண்டிருக்கும் போதே அதில் படித்த புராதனமான‌ இடங்கள் குறித்த ஆர்வம் என்னுள் வளர்ந்தது.

பின்னர் நுண்கலைத் துறையில் இளநிலை, முதுநிலை படித்தேன். அப்போது வரலாற்றில் நான் படித்த இடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்தேன். அது புது அனுபவமாக இருந்தது. இதன்மூலம் வட இந்தியா, தென் இந்திய ஓவியங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை நான் அறிந்துகொண்டேன். நான் ஓவியங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடக் காரணமாக இருந்தது இந்தப் பயணங்கள் என்று கூறலாம்.

இதன் அடிப்படையில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வும் அமைந்தது. இதில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு, சோழ மன்னர்களுடைய சுவர் ஓவியங்கள், கோயில் ஓவியங்களைப் பற்றியது. இந்த ஓவியங்கள் அனைத்தும் கடுக்காய், கற்றாழை, இயற்கை மூலிகைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை வண்ணங்களால் வண்ணம் தீட்டப்பட்டவை.

இத்தகைய ஓவியங்களை நீங்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருவாரூர், மன்னார்குடி, காஞ்சிபுரம், மதுரை ஆகிய இடங்களில் காணலாம். அதுமட்டுமல்லாது தென் இந்திய கோயில்கள் அனைத்தும் ஒரே மாதிரியான விமான வடிவமைப்பைக் கொண்டவை. ஏனென்றால், இவை அனைத்தும் ஒரே ராஜாங்கத்தின் கீழ் இருந்தவை.

ஆனால் இத்தகைய ஓவியங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்ற‌ கேள்விக்கு ‘இல்லை’ என்பதே பதில்! பல கோயில்களில் இத்தகைய ஓவியங்கள் சிதிலம‌டைந்த நிலையிலேயே உள்ளன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த ஓவியங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல எந்த முயற்சியும் எடுக்கப்படாத நிலை உள்ளது.

மேலும் இம்மாதிரியான இயற்கை வண்ணங்களால் வரையப்படும் ஓவியங்களைத் தற்போது யாரும் கோயில்களில் பயன்படுத்துவதில்லை. காரணம் இவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அதிகமான நேரம் தேவைப்படும். அதற்கான மெனக்கெடல்கள் மிகவும் அதிகம். எனவே கெமிக்கல் பெயின்ட்டுகளைக் கொண்டு வண்ணம் தீட்டுகின்றனர்” என்று ஒரே மூச்சில் தன் பணியை விளக்கினார் ஏகன்.

சரி இந்தக் காலத்தில் பாரம்பரியம் என்பதைத் தாண்டி, இந்த இயற்கை வண்ண ஓவியங்கள் ஏன் தேவை?

“அந்தக் காலத்தில் கருவறையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அனைத்தும் இயற்கை வண்ணங்களால் வண்ணம் தீட்டப்பட்டவை. இந்த வண்ணங்கள் சுண்ணாம்புடன் சேர்ந்து குளிர்ச்சியை உண்டாக்கும். இதனால் கோயில்களுக்கு வரும் மக்களுக்குத் தூய்மையான சுவாசம் கிடைக்கிறது. இத்தகைய இயற்கை வண்ணங்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் உண்டு.

அந்தக் காலத்தில் ராஜாக்கள் தங்கள் அரண்மனை வளாகங்களில் இயற்கை வண்ணங்களையே பயன்படுத்தினர். இயற்கை வண்ணங்களை நம் வீடுகளில் பயன்படுத்தும்போது இயற்கையான குளுமை உண்டாக்கும். இதனால் தேவையற்ற நோய்கள் பரவுவதைத் தவிர்க்கலாம்.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான கிராமிய ஓவியங்களில் இயற்கை வண்ணங்களை நீங்கள் காணலாம். இயற்கை வண்ணங்களை உருவாக்குவது பற்றி நன்கு தெரிந்த பல குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால், அவர்கள் கற்ற கலையை வளர்க்கத் தவறுகிறார்கள்.

பிற கலைஞர்களுக்கு அந்தக் கலைகளைக் கற்றுத்தராத காரணத்தால் அவை ஒரு குடும்பத்துக்குள்ளாகவே சுற்றிவருகிறது. இதனால் என்னைப் போன்றவர்கள் நூல்கள் மூலமும், செவி வழியிலும் கேட்ட செய்திகளின் வாயிலாக இதற்கான செய்முறைகளைக் கற்று வருகிறோம்.

இது குறித்தெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னுடைய மாணவர்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு தங்கி, அங்கிருக்கும் ஓவியங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவேன். மேலும் சம்பந்தப்பட்ட அறிஞர்களைக் கொண்டு அந்தக் கோயில்களின் சிறப்பை மாணவர்களுக்கு அறியச் செய்வோம்.

இந்தக் கலையை நான் மட்டுமே தனியாக, வரும் தலைமுறைகளிடத்தில் கொண்டுசெல்ல முடியாது. இதற்காக நிறைய நபர்களை நான் தயார் செய்து வருகிறேன். பலரும் இதை ஆர்வமாகக் கற்கிறார்கள். வருங்காலத்தில், தமிழகம் இன்னும் வண்ணமயமாக இருக்கும். அதுவும் இயற்கையாக!” என்று புன்னகைத்துவிட்டு, அடுத்த ஓவியத்தை வரையத் தூரிகையைக் கையில் எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x