Published : 27 Apr 2018 10:30 AM
Last Updated : 27 Apr 2018 10:30 AM

அனுபவம் புதுமை 02: தெறிக்க வைத்த தல!

 

ழகு என்பது உடல் ஆரோக்கியம் என்று நினைத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. அழகு என்பது இளைஞர்களின் அகராதியில் தலைகீழாக மாறிவிட்டது. குறிப்பாக, இளைஞர்களின் சிகை அலங்காரம். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சலூன்களுக்குப் போனால் ‘சம்மர் கட்டிங்கா, லைட் கட்டிங்கா’ என்று ஓரிரு தேர்வுகளைத்தான் சலூன் கடைக்காரர் நம் முன் வைப்பார்.

இன்றோ சலூன் கடைகளுக்குப் போனால், இளைஞர்களிடம் சலூன் கடைக்காரர்கள் எதையுமே கேட்பதில்லை. முடியை எப்படி வெட்ட வேண்டும் என இளைஞர்களே சலூன் கடைக்காரருக்கு வகுப்பெடுக்கிறார்கள். ‘அண்டர் கட், மென் பன், ஸைட் பேட்’ என வித்தியாசமான பெயர்களைச் சொல்கிறார்கள். தலை முடியில் தொடங்கி மீசை, கிருதா என ஒவ்வொன்றிலுமே மூக்கை நுழைக்கிறார்கள். அவர்கள் விரும்பும் வகையில் சிகை அலங்காரத்தை சலூன் கடைக்காரர் செய்து முடிக்கும்வரை இளைஞர்கள் அதில் திருப்தி அடைவதில்லை.

உண்மையில் இந்தக் கால இளைஞர்கள் சிகை, முக அலங்காரத்துக்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நூறு பேர் மத்தியிலும் தனியாகக் கவனிக்கப்பட வேண்டும், மற்றவர்களை வசீகரிக்க வேண்டும், பிறரிடமிருந்து முற்றிலும் வேறுப்பட்டு இருக்க வேண்டும் என்ற மனநிலை இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.

நுகர்வு கலாச்சாரம் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில், விதவிதமான அலங்காரப் பொருட்களுக்கும் பஞ்சமேயில்லை. முகத்துக்கு மட்டுமே அலங்காரம் என்றிருந்த நிலை மாறி, நெருப்பைத் தலைமுடியில் பற்றவைத்து சிகை அலங்காரம் செய்யும் அளவுக்கு இளைஞர்களின் போக்கு மாறியிருக்கிறது. சிகை அலங்காரமும் ஒப்பனைகளும் தேவையில்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இடத்துக்குத் தகுந்தாற்போல ஒப்பனைகள் இருக்க வேண்டுமில்லையா என்ற கேள்வி எழும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அதிகாரியாகவும் இருந்தேன். கோடை விடுமுறையில்கூட மாணவர்கள் பயனுள்ள விஷயங்களில் ஈடுபட வேண்டும் என்று விரும்புவேன். என்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப பக்கத்துக் கிராமக் கோயில் நிர்வாகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

“கோயில் திருவிழா வருது. உங்க கல்லூரி மாணவர்கள் உதவியோட தெப்பக்குளம், நந்தவனத்தைச் சுத்தப்படுத்தித் தர முடியுமா” என்று கோயில் நிர்வாகி கேட்டார். அந்தப் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். கோடை விடுமுறை என்பதால், 10 என்.எஸ்.எஸ். மாணவர்களைத்தான் திரட்ட முடிந்தது. கிராமத்துக்குச் சென்றோம். மயக்கும் மண் வாசனை, கோடையில்கூட பச்சைப்பசேல் என்றிருந்த வயல்வெளி, வேப்ப மர தென்றல் காற்றை அனுபவித்த மாணவர்கள் ஆனந்தம் அடைந்தார்கள். கோயில் நிர்வாகி வரவேற்று என்னென்ன உதவிகள் என விளக்கினார்.

முதல் நாள் திட்டம் போடுவதிலேயே முடிந்தது. இரண்டாம் நாள்தான் பணியைத் தொடங்கினோம். மாணவர்களுடன் கோயிலுக்குள் வேலை பார்த்துகொண்டிருந்தபோது அந்தக் கோயில் நிர்வாகி வாசலில் யாரிடமோ சத்தம் போடும் குரல் கேட்டது. போய்ப் பார்த்தால், மாணவர்கள்.

“என்ன சார் பிரச்சினை?”

“இந்த ரெண்டு பசங்க கல்லூரி மாணவர்கள்னு சொல்லி ஏமாத்தப் பார்க்குறாங்க. கோயில்ல புதுசா நிறைய சாமான்கள் வந்திருக்கு. இவுங்கள பார்த்தா ஆளே சரியில்லை. திருட்டுப் பசங்க மாதிரி இருக்காங்க” என்று சத்தம் போட்டபடி படபடத்தார்.

“என் மாணவர்கள்தான். நேத்து வந்த பசங்கதான்” என்று அவரைச் சமாதானப்படுத்தினேன்.

“உங்க பசங்களா சார், நான் நேத்து சரியா கவனிக்கல. மன்னிச்சுக்கோங்க சார்” என்று சொன்னயடி அங்கிருந்து நகர்ந்தார். ஆனால், அவர் அங்கிருந்து செல்லும்போது, “தலையைப் பாரு, தார் ரோட்டுல கோடு போட்ட மாதிரியும், காக்கா எச்சம் போட்ட மாதிரியும் இருக்கு. போதாக்குறைக்கு ஆட்டு தாடி வேற, படிக்கிற பசங்க மாதிரியா இருக்காங்க” என்று முணு முணுத்தது தெளிவாகக் கேட்டது.

மாணவர்களுக்குக் கோபம் கொப்பளித்தது. என்னதான் இருந்தாலும் இள ரத்தமல்லவா? “கோடை விடுமுறையில நாட்டு நலப் பணித் திட்டத்துக்கு வந்ததால, உங்க தலைமுடி ஸ்டைலை நான் பெரிதாக எடுத்துக்கல. ஆனா, எப்பவும் நம்முடைய வெளித் தோற்றம் மரியாதையை அதிகப்படுத்தற மாதிரி இருக்குணுமே தவிர, குறைச்சு எடை போடுற மாதிரி இருக்கக் கூடாது” என்று அவர்களிடம் சொன்னேன்.

அவர்களுக்குக் கோபம் தணிய சற்று நேரமானது. அடுத்த நாள் பணிக்கு வர மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், இருவரும் அடுத்த நாள் ஓரளவுக்கு தலை முடி ஸ்டைலை மாற்றிவிட்டுப் பணிக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த உழவார பணி இன்றும் மனதில் உலவுகிறது. இப்போது புதிதாக வரும் மாணவர்களிடம் இந்தக் கதையைச் சொல்லாமல் இருப்பதில்லை.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகத்தை அழகாகக் காட்டுவதில் சிகை அலங்காரத்துக்குப் பெரும் பங்குண்டு. ஒருவரின் தோற்றத்தைத் தேர்வுசெய்ய உதவும் தலைமுடி ஸ்டைலும் ஆடை அலங்காரமும் அவரவர் அடையாளத்தின் பிரதிபலிப்புதான். ஆனால், சில நேரம் வித்தியாசமான சிகை அலங்காரங்கள் பார்ப்பவர்களுக்கு உறுத்தலாகவும் இருக்கலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை என நினைக்கலாம். ஆனால், மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்று நினைக்கும்போது வரும் எதிர்மறையான விமர்சனங்களை உள்வாங்கிக்கொள்வதும் அவசியம்தான்.

உடல் தோற்றத்துக்கும் முக அமைப்புக்கும் தகுந்தாற்போல சிகை அலங்காரம் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. பொருந்தாத எந்த ஸ்டைலும் உங்களைப் பற்றி எதிர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும் தவறாது.

கட்டுரையாளர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x