Published : 11 May 2018 10:40 AM
Last Updated : 11 May 2018 10:40 AM

அனுபவம் புதுமை 04: ‘உடை’படும் நேரம்!

ள் பாதி; ஆடை பாதி. அதனால்தான் ஆடை விஷயத்தில் எப்போதுமே கறார்தான். செல்லும் இடம், சூழல் போன்றவற்றை மனத்தில் நிறுத்தி உடையை அணிவது வழக்கம். ஃபார்மல், ஜீன்ஸ், வேட்டி என எந்த உடையைத் தேர்ந்தெடுத்தாலும் அன்றைய தினத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளின் அடிப்படையிலேயே அது இருக்கும். எந்த வண்ணத்தில் உடையை அணிய வேண்டும் என்பதையும் அன்றைய தினச் சூழல்தான் தீர்மானிக்கும்.

பதின் பருவத்திலிருந்தே இதைக் கடைப்பிடித்ததால், கல்லூரிப் பேராசிரியரான பிறகு கேட்கவே வேண்டாம். உடைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து வீட்டில்கூட முகத்தைச் சுளிப்பார்கள். வீட்டிலேயே இந்த நிலை என்றால், கல்லூரியில்? மாணவர்கள் ஆடை அணியும் விஷயத்தில் அறிவுரை என்ற பெயரில் அடிக்கடி மூக்கை நுழைப்பதுண்டு. கல்லூரியைத் தாண்டி அக்கம்பக்கத்தில் உள்ள இளைஞர்களுக்கும் இதே கதிதான்.

குறிப்பாக, கல்லூரியில் கண்ணை உறுத்தும் அளவுக்கு ஆடை அணிந்துவந்தால், அறிவுரை வழங்கும் நேரம் இரட்டிப்பாகிவிடும். ‘வந்துட்டாருய்யா, இலவச அறிவுரை சொல்ல’ என்று மாணவர்கள் கிண்டலும் செய்ததுண்டு. ‘அவன் என்னவோ டிரஸ் போட்டுட்டு போறான். உனக்கு ஏன் இந்த வேலை’ என்று மைண்ட் வாய்ஸ் அடிக்கடி உள்ளே எதிரொலிக்கும். ஆனாலும், நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார்கள்?

ஏன் இந்த ஆடை புராணம் என்று நினைக்கலாம். பல சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் மூலமாக ஆடை விஷயத்தில் நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமும் அதன் தொடர்ச்சியும் எப்போதுமே சுவாரசியமானதாக மனதில் பதிந்திருக்கின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வாடகைக்கு ஒரு குடும்பம் குடிவந்தது. பையனின் படிப்புக்காகக் கிராமத்திலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டார்கள்.

ஒரு பரபரப்பில்லாத ஞாயிற்றுக் கிழமை அன்று காலை. செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

“குட்மார்னிங் சார்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

எதிரே நின்ற இளைஞனுக்கு இருபது வயது இருக்கும். “என் பெயர் மாரிமுத்து, பிபிஏ, இரண்டாமாண்டு படிக்கிறேன். பக்கத்து வீட்டுக்குப் புதுசா வந்திருக்கேன். உங்களைப் பார்த்து பேசலாம்னு வந்தேன்” என்றான்.

நான் எந்திரன் ரோபோவாக மாறி, அவனை உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பார்வையால் ஸ்கேன் செய்தேன். அயர்ன் செய்யப்படாத பேண்ட், அதற்குச் சம்பந்தமே இல்லாத வண்ணத்தில் சட்டை அணிந்து 90-களின் கிராமத்து கதாநாயகன்போலவே இருந்தான்.

“படிப்பிலும் விளையாட்டிலும் நான் ஃபர்ஸ்ட், மேற்கொண்டு என்ன படிக்கலாம், கேரியர் சம்பந்தமாக அட்வைஸ் கேட்கலாம்னுதான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றான்.

“தம்பி, இதுக்கு முன்னாடி நீ ஏதாவது ஆளுமைத் திறன் மேம்பாடு தொடர்பா கிளாஸ் அட்டென்ட் பண்ணியிருக்கியா?” என்ற கேள்விக்கு “இதுவரைக்கும் இல்லை” என்ற பதில் தயக்கத்துடன் வந்தது.

“முதலில் உன்னோட ஆடை விஷயத்தில் நீ கவனம் செலுத்தணும். பக்கத்து வீட்டுக்குத்தான் போகிறோம் என்றாலும், நாம் அணியும் உடையும் அணுகுமுறையும்தான் மற்றவர்களிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தும். படிப்பை முடிச்சுட்டு நேர்முக தேர்வு, வேலைன்னு வரப்போ வெளிப்புறத் தோற்றம்தான் முதலில் கண்காணிக்கப்படும்” என்று வழக்கம்போல அறிவுரையைத் தொடங்கினேன்.

“என் டிரெஸ்ஸிங்குக்கு என்ன சார் குறைச்சல்” என்று உடனே கேட்டான் மாரிமுத்து.

“முன்னாடி சீஸனுக்கு ஏற்ப டிரெஸ் போட்டுகிட்டு இருந்தோம். இப்போ நேரத்துக்கு ஒரு டிரெஸ். அந்த அளவுக்குக் காலம் மாறிடுச்சுப்பா. காலைல நடைப்பயிற்சிக்கு டிராக் சூட், வேலைக்கு ஃபார்மல், மாலை குடும்பத்துடன் வெளியே செல்ல கேஷுவல், இரவில் நைட் டிரெஸ், கல்யாணம், பார்ட்டிகளுக்குத் தனி டிரெஸ். இப்படிப்பட்ட காலத்தில் நாம இருக்கோம்” என்று சொன்னபோது, அதைச் சரி என்பதுபோல ஆமோதித்தான்.

பிறகு, அவன் படிப்பு சம்பந்தமாகக் கேட்ட சந்தேகங்களைத் தீர்த்த பிறகு அங்கிருந்து சென்றுவிட்டான். ஓராண்டு கழித்து மாரிமுத்து வேலைக்குச் சென்றுவிட்டான் என்று கேள்விப்பட்டேன். அதன்பின் அவனைப் பார்க்கவே இல்லை. மூன்றாண்டுகள் கழித்துதான் அவனைப் பார்த்தேன். அதுவும் பெங்களூருவில் உள்ள ஷாப்பிங் மாலில்.

“ஹலோ சார், நான் மாரிமுத்து, ஞாபகம் இருக்கா, எப்படி இருக்கீங்க” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.

சட்டென மாரிமுத்து நினைவுக்கு வந்தான். முதன்முறை அவனைப் பார்த்தபோது அவன் அணிந்திருந்த உடையும் அவனது உருவமும் என் கண்ணே முன்னே வந்து நின்றது. மாரிமுத்துவின் மீது ஸ்கேன் பார்வையை ஓடவிட்டேன். ஆளே தலைகீழாக மாறியிருந்தான். லேட்டஸ்ட் டிரெண்டிங் பேண்ட் டீஷர்ட், சன் கிளாஸ், ஹலோ சொல்லிய விதம் என அவனுடைய அணுகுமுறையே மாறியிருந்தது. அவனிடம் பேசி விடை பெற்ற பிறகு, மனம் அவனைப் பற்றியே யோசித்தது.

உடைதான் மனிதனை முழுமைப் படுத்திக் காட்டுகிறது. பொதுவாக, உடையின் தோற்றப் பொலிவைக் கொண்டே ஒருவரை முதல் பார்வையில் சமூகம் மதிப்பிடுகிறது. ஆள் பாதி, ஆடை பாதி என்ற பழமொழி இந்த உண்மையைத் தான் சொல்கிறது. உடை தொடர்பான கலாச்சார மதிப்பீடுகள் இன்றுவரை பெரிதாக மாறவில்லை. நாம் வசிக்கும் இடமும் பணிபுரியும் சூழலும் உடனிருக்கும் நண்பர்கள் ஆகிய அம்சங்கள் ஒருவர் உடையைத் தேர்வு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பெங்களூரு நகரம், பன்னாட்டு நிறுவன வேலை, நிறுவனச் சூழல் எனப் பல விஷயங்களும் மாரிமுத்துவுக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்றுதான் உடனடியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

(அனுபவம் பேசும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x