

தொழில்முறை கேமராவுக்கு நிகரான அம்சங்கள் உள்ள கேமராக்கள் திறன்பேசியிலேயே வந்துவிட்டன. எனினும் தேவைக்கு ஏற்ப ஒளிப்படங்களை ‘எடிட்’ செய்து மெருகேற்ற ‘போட்டோஷாப்’, ‘லைட்-ரூம்’ போன்ற மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையும் உள்ளது. ஆனால், கட்டணமில்லாமல் திறன்பேசியிலேயே ஒளிப்படங்களை ‘எடிட்’ செய்ய நல்லதொரு செயலி உள்ளது. அது, ‘ஸ்னாப்சீட்’.
கூகுளின் தயாரிப்பு: தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த ‘ஸ்னாப்சீட்’ செயலி. கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் மற்ற செயலிகளைப் போலவே ஒளிப்படங்களை ‘எடிட்’ செய்வதற்கான செயலியாக ‘ஸ்னாப்சீட்’ உள்ளது. ஆப்பிளின் ‘ஆப்-ஸ்டோர்’ அல்லது ஆன்ட்ராய்டின் ‘கூகுள் ப்ளே-ஸ்டோர்’ தளங்களிலிருந்து ‘ஸ்னாப்சீட்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இதைப் பயன்படுத்த கட்டணம் எதுவும் இல்லை. செயலியைத் திறந்தவுடன் ஒளிப்படங்களை ‘எடிட்’ செய்யத் தொடங்கிவிடலாம். முதல் முறை பயனர்களுக்கான ‘ஸ்னாப்சீட் எடிட் கையேடு’ முகப்பு பக்கத்தில் இருக்கும். படிப்படியாக விளக்கங்களுடன் இந்தக் கையேடு கொடுக்கப்பட்டிருக்கும். இது ‘ஸ்னாப்சீட்’ பயன்படுத்த நல்ல வழிகாட்டியாக உள்ளது.
ஒரு நல்ல ஒளிப்படத்தை எடுக்க சரியான ‘Angle’, ‘Frame’ அமைய வேண்டும். எனினும் அப்படத்தை மேலும் மெருகேற்ற சில ‘எடிட்’ கருவிகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். கறுப்பு, வெள்ளை ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூச, வண்ணம் பூசியப் படங்களை கறுப்பு வெள்ளையாக மாற்ற, வண்ணங்களைக் கூட்ட, குறைக்க ‘ஃபில்டர்கள்’ எனப்படும் பல்வேறு ‘எடிட்’ கருவிகள் தேவைப்படுகின்றன. பொதுவாக இந்த ‘ஃபில்டர்கள்’ நாம் பயன்படுத்தும் திறன்பேசியின் கேமரா செயலியோடு இருந்தாலும், அவற்றின் தரம் போதுமானதாக இருப்பதில்லை.
இந்த இடத்தில்தான் ‘எடிட்’ வேலைப்பாடாக இருந்தாலும் செயற்கைத்தன்மையைக் குறைத்துக் காட்டும் ‘ஸ்னாப்சீட்’ போன்ற தேர்ந்த செயலியின் உதவித் தேவைப்படுகிறது. செயலியைத் திறந்தவுடன் ஒளிப்படத்தை அதில் பதிவேற்றி தேவையான கருவிகளைத் தேர்வுசெய்து ‘எடிட்’ செய்யலாம். ‘Brightness, Contrast, Crop, Brush’ போன்று தொழில்முறை மென்பொருள்களிலுள்ள பெரும்பாலான வசதிகள் இதிலும் இருப்பதால் ‘ஸ்னாப்சீட்’ செயலி வழியே ஒளிப்படங்களை எளிமையாகவும், அழகாகவும் ‘எடிட்’ செய்யலாம்.
என்ன செய்யலாம்? - ஒளிப்படங்களை எடுப்பவர் ‘ஒளிப்படக்காரர்’ என்றால் ஒளிப்படங்களை ‘எடிட்’ செய்பவர் ‘ஒளிப்பட எடிட்டர்’. ஒளிப்படங்களும் காணொளிகளுமாக நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் படத்தொகுப்பாளரைப் போல ஒளிப்பட எடிட்டருக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் எடுக்கப்படும் ஒளிப்படங்கள் ‘எடிட்’ செய்த பின்பே வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் ஒளிப்படங்களைப் பயன்படுத்தும் முன்பும் ‘எடிட்’ செய்ய வேண்டியுள்ளது. எனவே, கார்ப்பரேட் நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், திரைப்படம், மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் ஒளிப்பட எடிட்டருக்கான வேலை வாய்ப்புகளும் உள்ளன.
ஒளிப்படங்களை ‘எடிட்’ செய்வதென்பது ஒரு கலை. சரியான அளவில் ஒளிப்படத்துக்கு ஏற்ப வண்ணங்களை இடுவது, ஒளி சேர்ப்பது போன்ற விஷயங்களில் தேர்ச்சிப் பெற தொடர் பயிற்சி அவசியம். திறன்பேசி செயலியின் வழியே இதைக் கற்றுக்கொள்ள ‘ஸ்னாப்சீட்’ பயன்படுத்தலாம். மற்ற ஒளிப்பட ‘எடிட்’ செயலிகளைப் போல பயன்படுத்த கடினமாகவும், இடையே விளம்பரமும் இல்லாததால் பெரும்பான்மையோரின் தேர்வாக இருக்கிறது ‘ஸ்னாப்சீட்’.
(நாலெட்ஜ் அறிவோம்)