

திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் காமிக் ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நிஜத்தில் அந்தப் படங்களை வரைந்தவர் ஓவியர் ராமமூர்த்தி. உண்மைத்தன்மை குறையாமல் இருக்க ‘மாவீரன்’ காமிக் கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் கைப்பட வரைந்திருக்கிறார் இவர்.
திரைப்பட வேலைகள்: திருப்பூரைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ராமமூர்த்தி, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்தவர். படித்துக்கொண்டிருந்தபோதே நாளிதழ்கள், பத்திரிகைகளுக்கு ஓவியங்கள் வரையத் தொடங்கிவிட்டார். இதன்மூலம் திரைப்படத் துறையிலும் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டார்.
தற்போது தமிழ்த் திரைத் துறையில் ‘ஸ்டோரி போர்டு’ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதாவது, வரை படங்களின் மூலம் தொடர்ச்சியாகக் கதையாடலை விளக்கும் முறை இது. ஆனால் ‘மாவீரன்’ படத்துக்கு காமிக்ஸ் ஓவியங்களை வரைந்திருக்கிறார் ராமமூர்த்தி.
“ஹாலிவுட்டில் ‘ஸ்டோரி போர்டு’ ஓவியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ‘ஸ்டோரி போர்டு’ என்றால் ஒரு திரைப்படக் காட்சியைப் படம் பிடிக்கும் முன்பு இப்படித்தான் எடுக்கப்போகிறோம் என ஒத்திகை பார்க்கும் முறை. சிரிப்பு, அழுகை, கோபம் என உணர்ச்சிகளையும், சண்டை, நடனம், உரையாடல் எனக் காட்சியின் தன்மையையும் ‘ஸ்டோரி போர்’டில் விளக்க வேண்டும்.
காட்சியில் தோன்றும் கதாபாத்திரங்கள் எப்படி, எங்கு நிற்க வேண்டும், காட்சியின் காலம், நேரம் என நுணுக்கமான சில விஷயங்களும் ‘ஸ்டோரி போர்’டில் விளக்கி வரையப்பட வேண்டும். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டுப் படப்பிடிப்பை நடத்தும்போது அதிக நேரம் எடுக்காமல், ஒரு தெளிவான பார்வையுடன் படத்தைக் காட்சிப்படுத்த முடியும்.
தமிழ்த் திரையுலகில் பெரிய பட்ஜெட் படம், அதிகத் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த படங்களுக்கு ‘ஸ்டோரி போர்டு’ பயன்படுத்தப்படுகிறது. ‘அயலான்’, ‘மாறா’ போன்ற படங்களுக்கு ‘ஸ்டோரி போர்டு’ வரைந்திருக்கிறேன். ’மாவீரன்’ படத்தில் காமிக் ஆர்டிஸ்டாகப் பணியாற்றியிருக்கிறேன்” என்கிறார் ராமமூர்த்தி.
‘மாவீரன்’ காமிக்: காமிக் ஓவியங்கள் ‘மாவீரன்’ படத்தில் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளன. இதில் முக்கியக் கதாபாத்திரத்தின் நிழலாகத் திரைக்கு வெளியே இருந்து ராமமூர்த்தி பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் மூலம் பல அனுபங்களைப் பெற்றதாகச் சொல்கிறார் அவர்.
“முதலில் ‘மாவீரன்’ படத்தின் திரைக்கதையைக் கேட்டறிந்தேன். கடந்த ஆண்டு நவம்பரில் காமிக் வரைவதற்கான பணிகளைத் தொடங்கினேன். இயக்குநரின் தேவைக்கேற்ப ஓவியங்களை வரைந்தது, மாற்றி வரைந்தது என ஓவியங்கள் முடிவுசெய்யப்பட்டன.
ஆனால், ஓவியங்களை இறுதிசெய்ய நீண்ட நாட்கள் ஆயின. படத்தில் நிறைய க்ளோஸ்-அப் காட்சிகள் இருப்பதால் டிஜிட்டலில் வரைந்தால் போலித்தன்மையாக இருக்கும். இதைத் தவிர்க்க, ஒவ்வொரு பக்கத்தையும் கைப்பட வரைந்தேன். இப்படி 40 பக்கங்களை வரைந்திருப்பேன். இந்தப் படத்தில் பணியாற்றியதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு முழு காமிக் புத்தகத்தை உருவாக்கிய அனுபவம் கிடைத்தது. படத்திலும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் ராமமூர்த்தி.
டிஜிட்டலின் தாக்கம்: செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence - AI) பல துறைகளில் மனித ஆற்றலுக்கு பாதிப்பு வரும் என்று கூறப்படும் நிலையில், அதன் வருகையால் கலைஞர்களுக்குப் பாதகமா என்று எழுகிற சந்தேகங்களுக்கு ராமமூர்த்தி விளக்கமாகவே பதிலளிக்கிறார். “காலங்காலமாகக் கலை அடுத்தக் கட்டத்தை எட்டிப் பயணித்திருக்கிறது.
சிற்பக்கலை, ஓவியங்களை அடுத்து சுவர் ஓவியங்கள், கான்வாஸ் எனச் சென்று இன்று டிஜிட்டலை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றின் அறிமுகத்தால் முந்தைய கலை வடிவத்துக்குப் பின்னடைவு இருந்தாலும், மாற்றத்தைப் புறக்கணிக்க முடியாது என்பதே நிதர்சனம்.
டிஜிட்டலின் தாக்கத்தால் கலைக்கும் கலைஞர்களுக்கும் அழிவு இருக்காது. சொல்லப்போனால் ‘AI' போன்ற வசதியால் வேலை எளிதாகுமே தவிர கிரியேட்டிவிட்டி சார்ந்த வேலைகளை நாம்தான் உருவாக்க முடியும். காலத்துக்கு ஏற்ப கலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கையால் வரைந்தாலும் இன்று மக்கள் பெரும்பாலும் ஒரு டிஜிட்டல் தளத்தில்தான் அதை பார்க்கின்றனர் என்கிற நிலை இருக்கிறது. எனவே, கைப்பட வரைந்தாலும் சரி, டிஜிட்டலில் வரைந்தாலும் கலை ஒன்றுதான். இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும்” என்கிறார் ராமமூர்த்தி.