

ககடந்த 2023 பிப்ரவரியில் ஜப்பானில் வெளியாகி, இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிபெற்றது ‘யூடோ’ (Yudo: The Way of the Bath). இது, உலக சினிமா ரசிகர்களின் இதயத்திலும் நெருக்கமான இடத்தைப் பிடித்தது.
அதைவிட ஆச்சரியம், இந்தப் படத்தை இயக்கிய மசாயுகி சுசுகி (Masayuki Suzuki), குடும்ப நாடகங் களைத் தொலைக்காட்சித் தொடராக இயக்கி, பின் சினிமாவுக்கு வந்த கமர்ஷியல் டைரக்டர்! டெம்பிளேட் டிவி தொடர், கமர்ஷியல் சினிமா இயக்கிய ஒருவர், மொழி, பண்பாட்டு எல்லைகளை உடைத்துக்கொண்டு உணர்வுரீதியாகத் தொடர்பு கொள்ளும் ஓர் உலக சினிமாவைப் படைக்க முடியும் என்பதை ‘யூடோ’ வழியாகக் காட்டி அசத்தியிருக்கிறார்.
குளியலும் ஒரு கலை
மரபார்ந்த பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் பலவற்றை, தத்துவார்த்தச் செறிவுகொண்ட கலை வடிவமாக்கிப் பின்பற்றும் ரசனை மிகுந்த பண்பாடு ஜப்பானியர்களுடையது. அவர்களின் ‘சாடோ’ (Chadō - தேநீரின் வழி) என்கிற தேநீர் விருந்து, ‘கடோ’ என்கிற மலர் அலங்காரம் ஆகியவற்றைப் போலவே, பொதுக் குளியல் அரங்குகளில் ‘யூடோ’ என்கிற வெந்நீர் குளியல் செய்வது, ஒரு பழமையான பண்பாட்டுப் பழக்கமாக இன்னும் அங்கே நீடிக்கிறது.
தனிப்பட்ட குளியலறைகள் பெருகிவிட்ட நவீன யுகத்தில், ‘யூடோ’வைப் பின்பற்றும் பொதுக் குளியல் கூடங்கள், தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மூச்சுப்பிடித்துப் போராடு கின்றன. என்றாலும் தலைமுறை தலைமுறையாக அங்கே வந்து குளிப்பவர்களுக்கு அது வெறும் உடல் தூய்மைக்கான இடமாக மட்டும் இருக்க வில்லை.
பெரிய வெந்நீர் தொட்டிகளில் ஏழை, செல்வந்தர் என்கிற பாகுபாடு இல்லாமல் நிர்வாண மாகத் தண்ணீருக்குள் இறங்கி, கழுத்துவரை அமைதியாக மூழ்கியிருக்கும் தருணம், நினைவுகளின் கருவறையில் வாழும் உணர்வைத் தருகிறது. தனிமையிலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறும் வெளியாக மாறுகிறது.