சதுர வடிவச் சூரியன்! - எவ்ரி டைம் (ஜெர்மனி) | உலகத் திரை 4

சதுர வடிவச் சூரியன்! - எவ்ரி டைம் (ஜெர்மனி) | உலகத் திரை 4
Updated on: 
4 min read

இந்திப் பண்பாட்டில் ‘புத்திர சோகம்’ என்கிற புகழ்பெற்ற சொற்றொடர் இப்போதுவரை புழக்கத்தில் இருக்கிறது. முதுமையின் இறுதியில் ஒரு தோழனைப் போல் வரும் மரணம், இயல்பாக ஏற்றுக்கொள்ளக் கூடியது.

அதுவே வாழவேண்டிய இளவயதில் மரணமென்றால், அது கொடுந்துயர். தாம் உயிரோடு இருக்கும் போது தன்னுடைய மகனோ மகளோ இறந்துபோனால், அந்த மரணத்தை ஏற்க மனமில்லாமல் பெற்றோர் நிலைகுலைந்துவிடுகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, சமூக வலைத்தள அஞ்சலி பதிவுகளுடன் நண்பர்கள் கடந்து சென்றுவிடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் காலையில் கதிரவன் வழக்கம்போல் உதிக்கிறான். சாலைகளில் வாகனங்கள் ஓடுகின்றன. பள்ளிகள் திறக்கின்றன.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. உலகம் அதன் இயல்பான ஆசைகளோடு கொண்டாட்டங்களைத் தொடர்கிறது. ஆனால், அந்த மரணத்தால் தங்கள் வாழ்க்கையின் அன்றாடச் சுழற்சியை இழந்துவிட்ட பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும் உலகம் முன்புபோல் இருப்ப தில்லை. காலம் நகர்ந்துகொண்டிருப்பதை அவர்கள் அறிவார்கள்.

ஆனால், மரணித்த உறவு உருவாக்கிய வெற்றிடத்தைவிட்டு, மனம் வெளியே வர மறுக்கும். இந்த உளவியல் போராட்டத்தை, டிஜிட்டல் தலைமுறையின் நவீன ‘கேட்ஜெட்’ பயன்பாட்டு எச்சங்களின் வழியாக, மிகவும் நுட்பமான காட்சிமொழி விவரிப்புகளோடு, முதன்மைக் கதாபாத்திரங்களின் இழப்பை நாம் ஆழமாக உணரும்படிச் செய்துவிடுகிறது ‘எவ்ரி டைம்’ (Everytime) என்கிற ஜெர்மானியத் திரைப்படம்.

ஆஸ்திரியப் பெண் இயக்குநரான சாண்ட்ரா வோல்னரின் இப்படைப்பு, கோவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 57வது இந்திய சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட்டது.

2026 கான் படவிழாவில் இயக்குநரின் ‘தனித்துவப் பார்வைக்கான பரிசி’னை (Un Certain Regard prize) வென்றது. ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் தலைநகரில் நடத்தப்பட்டு வரும் சரயீவோ சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த கதையாடல் (Narrative Feature Film) திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.

திடுக்கிட வைக்கும் தொடக்கம்

கதையின் முதல் பகுதி ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் நடைபெறுகிறது. பள்ளியிறுதி வகுப்பில் பயின்று வந்த பதினாறு வயதுப் பெண் ஜெஸ்ஸியின் எதிர்பாராத மரணத்துக்குப் பிறகு, அவளுடைய வாழ்வின் முக்கியப் பகுதியாக இருந்த மூன்று மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைப் படம் விவரிக்கிறது. ஜெஸ்ஸியின் தாய் எல்லா, தங்கை மெல்லி, காதலன் லூக்ஸ் ஆகிய மூவரும்தான் அவர்கள்.

ஜெஸ்ஸியின் இழப்பு எல்லாவுக்கும் லூக்ஸுக்கும் குற்றவுணர்வை உருவாக்கு கிறது. தன் மகள் சாவைத் தேடிச் செல்ல வில்லை, எதிர்பாராத மரணத்துக்கு முன்ன ரான அவளுடைய கடைசித் தருணங்கள் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்கிற தேடலும் தவிப்பும் ஒரு தாயாக எல்லாவைத் துரத்துகின்றன.

தங்கை மெல்லியோ தன் அக்காவின் ஒளிப்படங்கள், ஜெஸ்ஸி இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோது அம்மாவால் எடுக்கப்பட்ட ‘கேம்கார்டர்’ வீடியோக்கள் ஆகியவற்றில் ஜெஸ்ஸியைத் தேடித் தன் துக்கத்தை ஆற்றிக்கொள்ள முயல்கிறாள்.

ஜெஸ்ஸியின் மரணத்துக்குப் பிறகு, எல்லாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து தன் இருப்பை உறுதிசெய்கிறான் லூக்ஸ். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய விதத்தில் ஜெஸ்ஸியின் இழப்பு உருவாக்கிய வலியைச் சுமந்து தவிப்பதைப் படம் மெல்ல மெல்ல உணர்த்துகிறது.

படத்தின் தொடக்கத்தில் ஜெஸ்ஸியும் அவளுடைய காதலன் லூக்ஸும் இரவு பார்ட்டிக்குப் பிறகு, அந்த பார்ட்டி நடைபெற்ற மாநகரின் உயரமான அடுக்குமாடிக் கட்டி டத்தின் கைப்பிடிச் சுவர் இல்லாத மொட்டை மாடியில் படுத்திருக்கிறார்கள்.

Loading content, please wait...

X