

படங்கள் உதவி: ஞானம்
எந்தவொரு கலையிலும் உச்சம் தொட்ட ஒரு படைப்பாளி, தனக்குப் பின்னே வருபவர்களின் படைப்புகளில் அவர்களையும் அறியாமல் தனது வீச்சினைப்பரப்புவார். வணிகரீதியில் அமைந்த தமிழ்த்திரைப்பட உலகில் அப்படியொரு சிறப் பிடத்தைப் பெற்ற மிகச் சிலரில் ஒருவர், இயக்குநர் கே.பாக்யராஜ். அவருக்குப் பின்வந்த பல இயக்குநர்களிடம் அந்தத் தாக்கத்தை நம்மால் உணர முடியும்.
கூட்டத்தில் ஒருவன்
‘ஒரு ஊர்ல ஒரு ஹீரோ இருந்தான்’ என்றே பெரும்பாலான சினிமாக்களில் கதை சொல்லப்பட்டுவந்த நிலையில், ‘கூட்டத்தில் ஒருவனாக இருந்தவன், எப்படி ஹீரோ ஆகிறான்’ என்று திரையில் காட்டின பாக்யராஜின் படைப்புகள்.
சாதாரண மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளை, அவர்களது குணாதிசயங்களை, அவற்றைத் திரையில் காட்ட உதவிய ‘உவமை’ உள்ளிட்ட உத்திகளை எத்தனையோ இயக்குநர்கள் வெற்றிகரமாக எடுத்தாண்டிருக் கிறார்கள்; அவர்கள் அமைத்த ராஜபாட்டையில் பாக்யராஜ் வெளிப்படுத்திய தனித்துவம் சாதாரணமான தல்ல.
ஒரு கதையில், எதையெல்லாம் திரையில் சொல்ல வேண்டும் என்பதை நுட்பமாக வெளிப்படுத்தியதன் மூலம் அவர் அதனைச் சாதித்தார். அதில் விரியும் வாழ்க்கை, நாட்டின் எந்த மூலையில் இருப்பவரையும் திரை யோடு பிணைத்துக்கொள்கிற வகையில் இருக்கும். அதனாலேயே, பல மொழிகளில் அவரது படங்கள் ‘ரீமேக்’ செய்யப்பட்டன.
பாக்யராஜ் ஏற்ற நாயகக் கதாபாத்தி ரங்களில் பெரும்பாலானவை ‘நல்லவன் தான்.. புத்திசாலிதான்.. வீரன்தான்.. ஆனால்...’ என்று சப்பைக் கட்டுக் கட்டுவதாகவே இருக்கும். உண்மையைச் சொன்னால், அவையனைத்தும் ‘நல்லவன் வாழ்வான்’ தொனியிலமைந்த எம்ஜிஆர் படங்க ளின் இன்னொரு பிரதிபலிப்பே.
அதேநேரத்தில், தன்னைத்தானே கிண்டலடித்துக் கொள்வதற்கு ஏற்ற அலட்டலையும் அசட்டுத்தனத்தையும் அந்த நாயக பிம்பத்தோடு பிணைத்தது தான் அவரது சாமர்த்தியம். நாயக அம்சங்களை ‘ஸ்பூஃப்’ செய்யும் அப்படிப்பட்ட காட்சிகளில், டைட்டிலில் இயக்குநராகத் தனது பெயர் வருமாறு பாக்யராஜ் பார்த்துக் கொண்டார்.
அந்த இடங்களில் தன்னைத் திரையில் கண்டு சிரிக்கிற ரசிகர்கள், இரண்டாம் பாதியில் தான் காட்டும் ஹீரோயிசத்துக்கும் கைத்தட்டல்களைத் தருவார்கள் என்று உணர்ந்ததுதான் அவரது அனுபவத்தின் செழுமை.
‘லப்பர்பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இதைப் பற்றி ஒருமுறை சிலாகித்திருந்தார். அந்த வெற்றிகளைத் தீர்மானிப்ப தற்காகத் தனது உதவியாளர்கள், கதாசிரியர்கள், எழுத்தாளர்களோடு விவாதித்து, புதிது புதிதான காட்சி களை இழைத்துச் செதுக்குகிற உழைப்பும் பொறுமையும் அவரிடம் கொட்டிக் கிடந்தன.