

ஆஷா போஸ்லே (1933 – 2026)
ஐந்து தலைமுறைக் கதாநாயகிகளுக்குப் பாடிய, ஏழு பத்தாண்டு களைக் கடந்த இசைப் பயணம் ஆஷா போஸ்லேவுடையது! ஆயிரத்துக் கும் அதிகமான திரைப்படங்கள், இருபது மொழிகளில் பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் எனப் பிரமிக்க வைக்கும் அவரை, மொழி கடந்த திரையிசைப் பாடகி என்று மட்டும் சுருக்கி விட முடியாது. 50களில் தொடங்கி இந்தி சினிமாவின் ஒவ்வொரு காலக்கட்டத் திலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்ட ஜாலக் குரல் அவருடையது.
மற்றொரு பக்கம் தன்னுடைய மராத்தியப் பண்பாட்டின் கலைக் குரலாக மாறி, மாநில மொழி சினிமாவிலும் உச்சம் தொட்டது. திரை யிசைக்கு அப்பால், ஒரு மரபார்ந்த செவ்வியல் பாடகியாகவும் நவீன பாப் இசையின் முன்னோடியாகவும் திகழ்ந்து, காலம்தோறும் இந்திய வெகுஜன இசை உருவாக்கிய கலாச்சார வரலாற்றில் தனது இருப்பை அபூர்வ நிகழ்வாக மாற்றிக்காட்டிய அவரது கலை வாழ்க்கை பல ஆச்சரியங்களைக் கொண்டது.
குரலால் இதயங்களை வென்றுவிட முடியும் என்கிற ஆஷாவின் கலை யார்வமும் அதற்கு மொழி ஒரு தடையல்ல என்கிற குணமும் பெற்றோ ரிடமிருந்து அவருக்கு மரபாக வந்தவை. தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர், இந்துஸ்தானி செவ்வி யல் இசையில் பெரும் புலமை பெற்றவர். வட கோவாவில் உள்ள மங்கேஷி என்கிற கிராமத்தை (மங்கேஷ்கர் என்கிற ஊரின் பின்னொட்டு) பூர்விகமாகக் கொண்ட இவர், மராத்தி இசை நாடக உலகில் தடம்பதித்தவர். ‘பல்வந்த் சங்கீத மண்டலி' என்கிற நாடகக் குழுவை நடத்திவந்தவர்.
இவருக்கும் குஜராத்தி பெண்ணான ஷேவந்தி என்கிற சுதாமதிக்கும் லதா, மீனா, ஆஷா, உஷா, ஹிருதயநாத் என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் அனைவருக்கும் தீனாநாத்தே இசை குரு. ஆஷாவுக்கு 9 வயதாக இருந்தபோது 1942இல் தந்தை காலமாகிவிட, குடும்பம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி யைச் சமாளிக்க லதாவும் ஆஷாவும் சிறார் பாடக நடிகர்களாக 1943இல் மராத்தி சினிமாவில் நுழைந்தனர். பின்னர் 1945 இந்தி சினிமாவிலும் ஒருசேர அடியெடுத்து வைத்தனர்.
பன்முகத் திறமை
இருவரது குரலும் நடிப்பைவிட மதிப்புமிக்கது எனத் திரையுலகம் கண்டுகொண்டபோது அவர்களை மராத்தி - இந்திப் படவுலகங்கள் ஆராதிக்கத் தொடங்கின. இந்த இரண்டு மொழிகளுக்கு அப்பால் தமிழ் உள்படப் பல இந்திய மொழிகளில் குறைந்த எண்ணிக்கையில் பாடியிருந் தாலும், அவரது குரலுக்கும் பாடும் திறனுக்கும் மாற்றில்லை என்கிற அதிசயத்தை ஆஷா படைத்தார்.
ஆங்கிலம், மலாய், நேபாளம், சிங்களம், செக் என உலகின் எந்த மொழியிலும் பாடிவிட முடியும் என்கிற ஆஷாவின் ‘பன்முகத்தன்மைக்கு' (Versatility) அவரது தாயின் குஜராத்தி பின்னணியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். என்றாலும் அப்பாவிட மிருந்து பெற்ற செவ்வியல் இசையின் அஸ்திவாரம்தான் ஆஷா போஸ்லே தொடக்கம் முதலே பிரகாசிக்க ஒளி கொடுத்தது.
அக்காவான லதா மங்கேஷ்கரின் மென்மையான, தெய்விகமான குரலுக்கு மாறாக, தனது குரலை ஒரு துணிச்சலான கருவியாக ஆஷா பயன்படுத்தினார். லதா மங்கேஷ்கர் ‘மெலடி’களில் சிகரம் தொட்டார் என்றால், ஆஷா பன்முகப் பாடல்களைத் தேர்ந்து கொண்டார்.
லதாவுக்குக் கொடுக்கப் படாத அல்லது அவர் மறுத்த அதிவேகமான, நவீனமான, உணர்ச்சி கள் ததும்பும் கேபரே, கிளப் நடனப்பாடல்களை 60, 70களில் இரு பத்தாண்டுகள் தன் வசமாக்கிக்கொண் டார். மேற்கத்திய இசையின் தாக் கத்தில் உருவான இவ்வகைப் பாடல்களால் யாரும் எட்டமுடியாத சிகரத்தை இந்தித் திரையிசையுலகில் எட்டினார்.
கணவர் ஆர்.டி.பர்மனுடன்...
ஆஷா திரையிசையோடு நின்றுவிடவில்லை. இந்துஸ்தானி செவ்வி யல் இசை, உருது கஸல்கள், மராத்திய நாட்டுப்புற இசையான ‘லாவணி' ஆகியவற்றில் அவர் காட்டிய தேர்ச்சியும் பாடிச் சேர்த்த பங்களிப்பும் அபாரமானவை. சர்வதேச அளவில் கிராமி விருதுக்காக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார்.
உஸ்தாத் அலி அக்பர் கானுடன் ‘லெகசி' (Legacy) ஆல்பம் வழியாக இந்தியச் செவ்வியல் இசையையும், ‘குரோனோஸ் குவார்டெட்' (Kronos Quartet) மேற்கத்திய இசைக் குழு வுடன் இணைந்து ஆர்.டி.பர்மனின் தேர்ந்தெடுத்த சூப்பர் ஹிட் பாடல் களைச் சர்வதேசத் தரத்துடன் மறுவுரு வாக்கம் செய்தார்.
சொப்ரானோ குரல் ஜாலம்
ஆஷா போஸ்லேவின் குரல் தொழில்நுட்பரீதியாக 'சொப்ரானோ' (Soprano) வகையைச் சார்ந்தது. பெண்களின் குரல் வகைகளில் மிக உயர்ந்த சுருதியில் (High Pitch) பாடக்கூடிய குரலை இத்தாலிய மொழியில் 'சொப்ரானோ' என்பார்கள்.
ஆஷா போஸ்லே வரப்பிரசாதமாகப் பெற்ற ‘சொப்ரானோ’ வகைக் குரல் இயல்பாகவே மிக மெல்லியதாகவும் (Sharp) அதிக அதிர்வெண் (High Frequency) கொண்டதாகவும் இருந்தது. இதனால், மிக உயர்ந்த ஸ்தாயி யில் இருக்கும் மெட்டுகளைக்கூட மிக எளிதாக அவரால் தொட முடிந்தது.
‘சொப்ரானோ’ குரல்வளம் பெற்ற வர்கள் வேகமான சங்கதிகளைப் பாடுவது கடினம். ஆனால் ஆஷா, மிக உயர்ந்த சுருதியில் பாடிக்கொண்டி ருக்கும்போதே, இந்துஸ்தானி இசையின் பாடும் நுட்பங்களான ‘ஹர்கத்', ‘தான்களை' மின்னல் வேகத்தில் வெளிப்படுத்துவார்.
அந்த அளவுக்கு அவருடைய குரல் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருந்தது. இதனால் மிக உயர்ந்த சுருதியில் மேடை நிகழ்ச்சிகளில் நீண்ட நேரம் பாடும் (Sustaining a note) அசாத்திய மூச்சுக் கட்டுப்பாட்டுத் திறன் அவருக்கு 85 வயது வரையிலும் வாய்த்திருந்தது.
அதேபோல் ஆஷாவின் குரல் வரம்பு (Vocal Range) சுமார் மூன்று அக்டேவ்கள் (3 Octaves) வரை விரிவடைந்த ஓர் அதிசயம்! இத்திறனால், அடித் தொண்டையிலிருந்து பாடும் 'மந்திர ஸ்தாயி' முதல் உச்சந்தலையில் அதிரும் ‘தாரா ஸ்தாயி' வரை அவரது குரல் சமமான பலத்துடன் ஒலிக்கும்.
குறிப்பாக, அவருடைய காதல் கணவர் ஆர்.டி.பர்மன் இசையில் அவர் பாடிய ஐந்நூற்றுக்கும் அதிக மான மேற்கத்திய பாணிப் பாடல்களில் (எடுத்துக்காட்டு: 1971இல் வெளியான ‘கேரவன்’ படத்தில் இடம்பெற்ற ‘பியா து அப் தோ ஆஜா’ பாடல்.
இதில் ‘மோனிகா.. ஆஆஆ.. ஓ மை டார்லிங்..’ என்று ஆஷாவுடன் ஆர்.டி.பர்மன் இணைந்து பாடி, இசையால் இதயம் பிணைந்த தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருப்பார்), அவரது வான் நோக்கிப் பறக்கும் உயர்ந்த சுருதியின் சொப்ரானோ குரல் ஜாலத்தைச் செவிவழி தரிசிக்கலாம். சொப்ரானோ குரல் கொண்டவர்கள் பொதுவாக மென்மையாகப் பாடுவார்கள்.
ஆனால் ஆஷா, உயர்ந்த சுருதி யிலும் ஒருவித அதிகாரத்தோடும் கணீர் என்கிற சத்தத்தோடும் ‘ஓபரா’ தன்மையைக் குழைத்துப் பாடும் தனித்துவமான பாணியைக் கையாண்டார். இதுதான் பிற பாடகிகளிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது.
ஐந்து தலைமுறைக்கு...
50, 60களில் புகழ்பெற்ற மதுபாலா, கீதா பாலி, நர்கீஸ், மீனாகுமாரி, வைஜெயந்திமாலா பாலி உள்படப் பலருக்கும் பாடத் தொடங்கிப் புகழ் பெற்றது பாலிவுட்டின் பொற்காலமாக விளங்கியது.
இரண்டாம் தலை முறையில் கிளப் நடனக் கலைஞராகத் தோன்றிப் புகழ்பெற்ற ஹெலனுக்காக ஆஷா பாடிய பாடல்கள் இந்தி சினிமாவைத் தாண்டி இந்திய அளவில் கலாச்சார அதிர்வையே ஏற்படுத்தின.
ஹெலன் போன்றவர்களுக்காகப் பாடிக்கொண்டே ஆஷா பரேக், ஷர்மிளா தாகூர், வஹீதா ரஹ்மான் ஆகியோரின் துள்ளலையும் உணர்ச்சிகரமான நடிப்பையும் ஈடுசெய்யும் பாடல்களுக்கு ஆஷா உயிர் கொடுத்தார்.
70, 80களில் கிளாமர் பாணிப் படங்களின் சகாப்தத்தில் ஜெயப்பிரதா, தேவி, ரேகா, ஜீனத் அமன், பர்வீன் பாபி ஆகிய மூன்றாம் தலைமுறைக் கதாநாயகிகளுக்கு ஆஷாவின் 'சொப்ரானோ' குரல் கச்சிதமாகப் பொருந்தியது.
1990கள், இரண்டாயிரத்தில் தனது 60 வயதில் நான்காம் தலைமுறைக் கதாநாயகிகளான ஊர்மிளா மடோண்கர், கஜோல், மனிஷா கொய்ராலா, தபு, ஐஸ்வர்யா ராய் உள்படப் பலருக்கும் பாடி ஆச்சரியப்படுத்தினார்.
2010 முதல் 2020கள் வரை வித்யா பாலன் போன்ற ஐந்தாம் தலைமுறைக் கதாநாயகி களுக்குப் பாடியதுடன் தனது 80களின் அகவையில் சுயாதீன இசை ஆல்பங்களில் அவர் சளைக்காமல் பங்களித்தார்.
காதலும் பேரிழப்பும்
ஆஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு நாவலைப் போன்ற திருப்பங் களைக் கொண்டது. ஆஷாவே தனது வாழ்க்கையைச் சுயமாக எழுதி முடித்தார். ஆனால், அதைப் புத்தகமாக வெளியிட அவர் விரும்பவில்லை. 16 வயதில் குடும்ப எதிர்ப்பை மீறிச் செய்துகொண்ட முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.
பின்னர், தன்னைவிட 6 வயது இளையவரான ஆர்.டி. பர்மனுடன் அவர் கொண்ட காதலும் இசைப் பந்தமும் இந்தித் திரையிசைக்கு ஒரு பொற்காலத்தை வழங்கியது. ஆனாலும், காலம் அவருக்குப் பெரும் துயரங்களையும் வழங்கத் தவறவில்லை.
தன்னுடைய மகள் தற்கொலை செய்துகொண்டபோது (வர்ஷா), மகன் புற்றுநோயால் (ஹேமந்த்) போராடி இறந்தபோது மன மொடிந்து சில ஆண்டுகள் பாடாமல் இருந்தாலும், பின்னர் மீண்டும் பாடத் தொடங்கி தன் இசையின் மூலமாகவே துயரத்தைக் கடந்தார்.
தமிழ்நாடும் ஆஷாவும்
தமிழ்நாட்டுடன் ஆஷாவுக்குத் தமிழ்த் திரையிசைப் பாடல்களையும் கடந்த கலாச்சார உறவு இருந்தது. இளையராஜாவின் ‘செண்பகமே செண்பகமே’, ‘நீ பார்த்த பார்வைக் கொரு நன்றி’, ஏ.ஆர். ரஹ்மானின் ‘வெண்ணிலா வெண்ணிலா’, ‘செப்டம்பர் மாதம்’, வித்யா சாகரின் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’, தேவாவின் ‘எங்கெங்கே எங்கெங்கே..’ போன்ற பல பாடல்களில் அவர் காட்டிய தமிழ் உச்சரிப்புத் துல்லியமும் ‘சொப்ரானோ’ குரல் ஜாலமும் தமிழ் ரசிகர்களின் மனதில் அவருக்கு நீங்கா இடமளித்தது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தீவிர ரசிகையான அவர், சென்னைக்கு வரும்போதெல்லாம் இங்கிருக்கும் கோயில்களையும், செட்டிநாடு உணவு வகைகளையும் ரசிக்கத் தவறிய தில்லை.
இளையராஜா, கமல்ஹாசன் உள்ளிட்ட கலைஞர்களுடன் அவர் கொண்டிருந்த நட்பு, ஒரு வட இந்தியப் பாடகியாக அல்லாமல், ஒரு தென்னிந்தியத் திரைக்குடும்ப உறுப்பினராகவும் அவரை மாற்றி யிருந்தது. அவர் மண்ணிலிருந்து மறைந்திருக்கலாம், ஆனால், தேசம் தழுவிய இசைநதியாக அவரது குரல் காலம் கடந்தும் பாய்ந்து கொண்டிருக்கும்!
- jesudoss.c@hindutamil.co.in