

உலகம் முழுவதும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் கோடான கோடி மக்களின் இதயங்களில் ஒற்றைக் கனவுதான் நிறைந்திருக்கும். எப்படியாவது, வறுமையிலிருந்து விடுபட்டு ஒரு கெளரவமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதுதான். இந்தத் திரைப்படத்தின் நாயகன் பெட்டோவும், வறுமையிலிருந்து விடுபடத்தான் போராடிக் கொண்டிருக்கிறான்.
1988ஆம் ஆண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவேயின் கிராமங்களில் வறுமைதான் நீக்கமற நிறைந்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் காட்டப்படும் எல்லைப்புற கிராமமான மெலோவும் அதற்கு விதிவிலக்கல்ல. நாயகன் பெட்டோவின் குடும்பம் மட்டுமல்ல, மெலோவில் வசித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் வறுமையைத்தான் தரித்துக்கொண்டிருந்தன.
நாயகன் பெட்டோ மற்றும் அந்த ஊரைச் சேர்ந்த பலரும் எல்லைக்கு அந்தப் பக்கம் இருக்கும் பிரேசிலில் இருந்து அத்தியாவசியப் பொருள்களைக் கடத்திக் கொண்டுவந்து பெலோவில் இருக்கும் கடைகளில் விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்திலும் பொருளிலும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வழியில் சோதனைச் சாவடி இருப்பதால், சாலைகளைத் தவிர்த்துக் காடுகளின் வழியாகக் கரடுமுரடான பாதைகளில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு ஊர்வந்து சேர்கிறார்கள். தோராயமாக ஒரு நாளைக்கு அறுபது கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதித்துப் பொருள்களைக் கடத்திக்கொண்டு வருகிறவர்களில் பெண்களும் இருக்கிறார்கள்.
பெட்டோவின் மனைவி கார்மென் பொறுப்பாகக் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். பெட்டோவிற்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பணம் ரேடியோ அறிவிப்பாளராக ஆகவேண்டும் என்கிற கனவில் இருக்கும் மகளின் கல்விக் கட்டணத்திற்குப் பயன்பட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாள். அடிக்கடி ரேடியோ கேட்டுக்கொண்டும், தனியாக நின்று பேசிப்பழகிக் கொண்டும் இருக்கும் மகளின் நடவடிக்கைகள் பெட்டோவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
என்றாவது ஒருநாள் வாழ்க்கை மாறும் என்கிற நம்பிக்கையில், எல்லையைக் கடந்து போவதும் சைக்கிளில் பொருள்களைக் கட்டிக்கொண்டு திரும்பி வருவதுமாக இருக்கிறான் பெட்டோ. நீண்டு கிடக்கும் அந்தச் சாலைகளின் வழியாக, புதர்மண்டிக் கிடக்கும் புல்வெளிகளின் வழியாக சைக்கிளில் பறந்து கொண்டிருக்கும் பெட்டோவையும், அவனுடைய கூட்டாளிகளையும் காட்டும் காட்சிகள் அழகாக இருந்தாலும்கூட, அந்தக் காட்சிகளின் பின்னணியில் இருக்கக்கூடிய அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை உணரும்போது இதயம் கொஞ்சம் கனக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் எப்போதும் நிலைமைகள் ஒரேமாதிரி இருக்குமா என்ன? பெட்டோவை மட்டுமல்ல, பெலோவில் வசிக்கும் ஒவ்வோர் இதயத்தையும் குளிரச் செய்யும் ஓர் அறிவிப்பு தொலைக்காட்சிகளில் வெளியாகிறது. அந்த அறிவிப்பைக் கேட்டதிலிருந்து ஒவ்வொருவரின் மூளைக்குள்ளும் ஒவ்வொரு யோசனை மின்னத் தொடங்குகிறது. கழிவறை சென்றுவிட்டு வெளியே வந்த பெட்டோவின் மூளைக்குள்ளும் ஒரு யோசனை பிறந்துவிட்டது.
உயிர்ப்பின்றி உறைந்துகிடந்த அந்த ஊரை உற்சாகமாக எழச் செய்த அந்த அறிவிப்பு என்ன? லத்தீன் அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் இரண்டாம் ஜான் பால் தென் அமெரிக்காவிற்கு வருகிறார். அப்படியே உருகுவேவின் எல்லைப்புறக் கிராமமான மெலோவிற்கும் வருகை தருகிறார். இந்தச் செய்திதான் எல்லாருடைய இதயத்திலும் இன்பக் கனவுகளைப் பரவிவிட்டிருக்கிறது.
போப் வந்தால் என்ன என்கிறீர்களா? அங்குதான் விஷயம் இருக்கிறது. ”போப்பைக் காண்பதற்காக மெலோவிற்கு சுமார் 30,000 பேர் வரக்கூடும்” என்று ஒருவன் சொல்கிறான். “இல்லை... இல்லை... முதன்முறை போப் வருகிறார், எப்படியும் 50,000 பேருக்கு மேல் வருவார்கள்” என்கிறான் இன்னொருவன். இந்தக் கூட்டத்தை எப்படி நாம் லாபகரமானதாக மாற்றிக்கொள்வது என்கிற திட்டங்கள் வேகவேகமாகத் தீட்டப்படுகின்றன. தேநீர்க்கடை, பழக்கடை, ரொட்டிக்கடை, திண்பண்டக் கடை என 370 கடைகளுக்கு அனுமதி வாங்கப்பட்டு, பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.
கையிலிருக்கும் பணத்தைக்கொண்டு, கொஞ்சம் கடன்வாங்கி, தங்களுடைய வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து, கடைகளுக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் ஊர்மக்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வரப்போகிறார்கள். அத்தனை பேரும் கழிவறைக்கு என்ன செய்வார்கள் என்று யோசித்து பெட்டோ ஒரு கழிவறை கட்ட முடிவு செய்கிறான். எல்லாரும் சிரிக்கிறார்கள். பெட்டோ உறுதியாக இருக்கிறான். முதலில் மறுக்கும் கார்மென் அவனது பிடிவாதத்தைப் பார்த்து, ஒத்துக்கொள்கிறாள்.
வேறு வழியில்லை இந்த நிகழ்வைப் பயன்படுத்தி வறுமையை விரட்டியே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தோடு இன்னும் கூடுதலாகக் கடத்தலில் ஈடுபடுகிறான். வீட்டிற்கு வெளியே ஓர் இடத்தைத் தேர்வு செய்கிறான். கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு தளம் போடுகிறான். இன்னும் பணம் தேவைப்படுகிறது. கார்மென் சேமித்து வைத்திருக்கும் பணத்தை அடித்துப் பிடுங்குகிறான். கார்மெனும் சில்வியாவும் பெட்டோவின் மீது கோபம் கொள்கிறார்கள். ஆனால், அவனுடைய உறுதியான நடவடிக்கைகளைப் பார்த்து அவனுக்கு உதவி செய்யத் தொடங்குகிறார்கள்.
மெலோவின் ஒவ்வொரு குடும்பத்திலும் மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் பொருள்களைக் கடத்தி வரும்போது, சோதனைச்சாவடியில் ராணுவத்தினர் பிடுங்கிக்கொள்கிறார்கள். எதிர்த்து எதுவும் செய்ய முடியாத பெட்டோ கோபத்தைக் குடித்தே தணிக்கிறான். மறுநாள் சில்வியாவையும் கடத்தலுக்கு அழைத்துப் போகிறேனென்று சொல்கிறான் பெட்டோ. கார்மென் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள். கடன் வாங்கி ஒருவழியாகக் கழிவறைக்கான சுற்றுச்சுவரைக் கட்டி முடிக்கிறான்.
தொலைக்காட்சியும், ரேடியோவும் போப்பைப் பற்றிய செய்திகளால் நிரம்பியிருக்கின்றன. பெட்டோ கழிவறைக்கான கதவிற்காக அலைந்து கொண்டிருக்கிறான். உயர்ந்த தரத்தில் குறைந்த விலையில் எதுவும் கிடைத்துவிடாதா என்று கடைகடையாக அலைந்து கொண்டிருக்கிறான். கடைசியில் கதவோடு சைக்கிளில் பறந்து வருகிறான் பெலோவை நோக்கி.
அப்பா இந்த வேலைதான் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் சில்வியா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். இதெல்லாம் ஒரு வேலையா என்று பெட்டோவிடம் சண்டை போடுகிறாள். மகளிடம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறான் பெட்டோ. அந்த வேலையை அவன் விரும்பிச் செய்யவில்லை. அவனுக்குத் தெரிகிறது. அவளுக்குப் புரியவில்லை.
மறுநாள் போப் வருகிறார். ஊர்மக்கள் ஆயத்தமாகிறார்கள். பெட்டோ மனைவிக்கும் மகளுக்கும் பயிற்சி கொடுக்கிறான். வருகிறவர்களை எப்படி அழைப்பது? உள்ளே இருப்பவர்களை விரைவாக வெளியே வரச்சொல்வது, அவர்களிடம் பணம் வாங்குவது, தண்ணீர் ஊற்றிச் சுத்தமாக வைத்துக்கொள்வது எனப் பயிற்சி கொடுத்துவிட்டு, எப்படியாவது கழிவறை இருக்கை வாங்கி வருகிறேன் என்று அதிகாலையிலேயே புறப்பட்டுச் செல்கிறான்.
போப்பைக் காண்பதற்காக மக்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். கடைக்காரர்கள் எல்லாம் மக்களை உற்சாகமாக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கார்மெனும் சில்வியாவும் வழியையே பார்த்தபடி காத்துக் கொண்டிருக்கிறார்கள். சைக்கிளில் வந்துகொண்டிருக்கும் பெட்டோவை வழிமறிக்கிறான் கடன்கொடுத்தவன். சைக்கிளைப் பிடுங்கிவிட்டுப் போகிறான். கழிவறை இருக்கையைத் தோளில் வைத்துக் கொண்டு ஊரை நோக்கி ஓடுகிறான்.
அந்த வழியாக வந்த போப், அங்கு கூடியிருப்பவர்களை ஆசீர்வாதம் செய்துவிட்டுப் புறப்படுகிறார். போப்பைச் சந்தித்த மகிழ்ச்சியில் வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கலைந்து செல்லத் தொடங்குகிறார்கள். ஓடிவந்த பெட்டோ கழிவறை இருக்கையைப் பொருத்திவிட்டு, கூட்டத்திற்குள் நுழைந்து கழிவறை பயன்படுத்த வேண்டுமா என்று ஒவ்வொருவரையும் அழைக்கிறான். வேண்டாமென்று ஒதுங்கிப் போகிறார்கள் மக்கள். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சில்வியாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. நமக்கும்தான்.
2007இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் இயக்குநர்கள் இரண்டுபேர். ஒருவர் உருகுவேயில் பிறந்து பிரேசிலில் வாழ்ந்துகொண்டிருக்கும் சீசர் கார்லோன். இன்னொருவர் உருகுவேயைச் சேர்ந்தவரான என்ரிக் பெர்ணாண்டஸ். 1988இல் போப்பின் வருகையை ஒட்டி நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, லத்தீன் அமெரிக்காவின் பைசைக்கிள் தீவ்ஸ் என்று போற்றப்பட்ட இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர்கள் இப்படிச் சொன்னார்கள், “இந்தப் படம் போப்பைப் பற்றியதல்ல, போப்பைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் நம்பிக்கையைப் பற்றியது” என்று.
இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது, உலகெங்கும் நிறைந்திருக்கும் ஏழை எளிய மக்களின் எதிர்ப்பார்ப்புகளும், கனவுகளும் நிறைவேறினால் எப்படி இருக்கும் என்கிற எண்ணங்கள் தோன்றத்தான் செய்யும்.
- கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com