The Swimmers: அகதியின் ஒலிம்பிக் கனவு | சினிமாவும் அரசியலும் 15

The Swimmers
Updated on
3 min read

மத்திய கிழக்கின் போர்ச்சூழலில் இருந்து தப்பித்து எங்காவது போய் வாழ்ந்துவிடலாம் என்று துருக்கியின் ஓரத்தில் இருந்து, ஐரோப்பாவின் நுழைவாயிலான கிரீஸில் வந்திறங்குவார்கள் கதைமாந்தர்கள். உயிரச்சம் நிறைந்த பயணம் என்பதால் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, கடற்கரையிலிருந்து வெளியேறத் தொடங்குவார்கள்.

காட்சி இதுதான். அவர்களுக்கு முன்னால் ஏற்கெனவே கழற்றிப் போடப்பட்ட ஆயிரக்கணக்கான பாதுகாப்பு உடைகள் குவிந்து கிடக்கும். அவர்களும் பாதுகாப்பு உடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு நடக்கத் தொடங்குகிறார்கள்.

குவிந்து கிடக்கும் பாதுகாப்பு உடைகளின் மீது கேமரா ஒரு கணம் நின்று நகரும். உங்களைப்போல் எத்தனையோ பேர் அகதிகளாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்று சொல்லும் இந்தக் காட்சி சினிமா எவ்வளவு வலிமையானது என்பதை உணர்த்தும்.

இந்தத் திரைப்படம் சிரியப் போரின் பின்னணியில், நீச்சல் வீராங்கனைகளின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. போரின் நேரடி விளைவுகளான கொடூர மரணங்களைக் காட்டி நம் நெஞ்சில் முள்ளைக் குத்தாமல், போரின் மறைமுக விளைவுகளின் ஒன்றான, அகதிகளாக்கப்பட்டவர்களின் வலிமிகுந்த வாழ்க்கையைக் காட்டி நம் நெஞ்சில் இடியை இறக்குகிறார் இயக்குநர்.

இயக்குநர் எல் ஹொசைனி எகிப்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்தவர் என்பதால் போரின் சூடு தாங்காமல் பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இடம்பெர்யர்ந்து கொண்டே இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், எப்படியோ இடம்பெயர்ந்து ஐரோப்பா எங்கும் அகதிகளாக அலைந்து திரிந்துகொண்டிருக்கும் மனிதர்களின் வலியையும் நன்றாக உணர்ந்திருக்கிறார். இந்தப் படத்தை எடுத்ததற்கான காரணமாக, ’போர் மனித வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்று காட்ட விரும்பினேன்’ என்கிறார்.

கதை இதுதான்:

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிவிட்டது. வழக்கம்போல அமெரிக்கா பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதே கோரிக்கை. சிரியாவின் ஒருபக்கத்தில் ஏவுகணைகள் குண்டுகளைப் பொழிந்து கொண்டேயிருப்பதை, இன்னொரு பக்கத்தில் இருந்து பார்க்கிறார்கள் நீச்சல் வீராங்கனைகளான யூஸ்ரா மர்தினியும் சாரா மர்தினியும். துனீசியா, எகிப்து, லிபியாவில் நடந்ததைப் போல இங்கேயும் நடக்கிறதே என்ற பதற்றம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.

”ஆயிரம் மகன்களைவிட வலிமையானவர்கள் என் மகள்கள்” என்கிற பெருமையில் இருக்கும் தந்தைக்கு, மகள்களை ஒலிம்பிக்கில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கிறது. அவரும் சிரியாவின் நீச்சல் வீரராக இருந்ததால் மகள்களுக்குப் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸின் காணொளிகளைக் காட்டி, ”நீச்சலில் கால்கள் அல்ல, கை வலிமைதான் முக்கியம்” என்று சொல்லிக் கொடுக்கிறார். தூரத்தில் விழுந்துகொண்டிருந்த குண்டு நீச்சல் குளத்திலேயே விழுகிறது. குடும்பமாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.

The Swimmers

எத்தனை முறை சாவிற்கு அருகில் சென்று திரும்புவது என்று சலித்துக்கொள்கிறார்கள். ஒலிம்பிக் கனவை எட்டிப் பிடிப்பதற்காக, சகோதரிகள் இருவரும் ஜெர்மனிக்குப் பயணமாவது என முடிவாகிறது. சிரியாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் வருகிறார்கள்.

இருபது லட்சத்திற்கும் அதிகமான சிரியர்கள் துருக்கியில் இருக்கிறார்கள் என்று அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் சாதாரண ரப்பர் படகில் கிரீஸின் எல்லையை அடையப் புறப்படுகிறார்கள். அவர்களோடு ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈரான், சூடான் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் உள்பட.

இரவில் படகு நின்றுவிடுகிறது. இயக்கிவிடலாம் என்று முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்குகிறது. எல்லாரும் ஒருமனதாகச் சுமைகளைக் கடலுக்குள் எறிந்துவிடலாம் என்று முடிவு செய்கிறார்கள். யூஸ்ரா கனத்த மனதோடு நீச்சல் போட்டியில் தான் வாங்கிய பதக்கங்களைக் கடலிற்குள் எறிகிறாள். எடை அதிகமாக இருக்க நீச்சல் தெரிந்தவர்கள் கடலில் குதிக்கலாம் என்று முடிவு செய்யப்படுகிறது.

எல்லாரும் யோசிக்க முதல் ஆளாக சாரா குதிக்கிறாள். அவளைத் தொடர்ந்து யூஸ்ராவும் குதிக்கிறாள். இருவரும் நீந்திக்கொண்டே படகை இழுத்துச் செல்கிறார்கள். தாங்கள் தொழில்முறை நீச்சல் வீராங்கனைகள் என்பதை அந்த இரவில் ஆழ்கடலில் ஒருமுறை நிரூபித்துக் காட்டுகிறார்கள். ஒருவழியாக கிரீஸின் எல்லையை அடைந்து விடுகிறார்கள்

கிரீஸிலிருந்து நடந்தும் கிடைக்கும் வண்டிகளில் பயணம் செய்தும் மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாகக் கடுமையான பயணங்களை மேற்கொண்டு, கடைசியாக ஜெர்மனியின் பெர்லினிற்கு வந்து சேர்கிறார்கள். வேறு வழியில்லாமல் அங்கு அகதிகளாகப் பதிவுசெய்ய நேர்கிறது. ’நான் அகதியல்ல, சிரியாவில் எனக்கு வீடு இருக்கிறது’ என்கிறாள் யூஸ்ரா. ஆனால், இடம்பெயர்ந்து வந்தவர்களை அகதி என்று முத்திரை குத்தி முகாம்களில் இருக்கச் செய்கிறது அரசாங்கம்.

நினைத்தபடி ஜெர்மனிக்கு வந்தாயிற்று. அடுத்து துரத்த வேண்டியது ஒலிம்பிக் கனவை என்று முடிவு செய்து, ஒரு நீச்சல் பயிற்சி மையத்தை தேடிக் கண்டறிகிறார்கள். பயிற்சியாளர் ஸ்வெனிடம் நீச்சலில் தங்களுக்கு இருக்கும் திறமைகளைச் சொல்கிறார்கள். யூஸ்ரா தன்னுடைய சாதனைகளைப் பட்டியலிடுகிறாள். ஸ்வென் ஒருவழியாகப் பயிற்சி கொடுக்கச் சம்மதித்து, அவர்களுக்கு உதவி செய்கிறார். அகதி மையத்திலிருந்து பயிற்சி மையத்தின் அறைக்கு மாறுகிறார்கள்.

ஜெர்மானியரான ஸ்வென் இன்னொரு தந்தையைப்போல இருவரையும் கவனித்துக்கொள்கிறார். யூஸ்ரா தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்ள, சாரா வேறென்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள். குடும்பத்தை எப்படியாவது போர்ச்சூழலில் இருந்து ஜெர்மனிக்கு வரவைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறாள் சாரா.

பிரேசிலின் ரியோ நகரில் அடுத்த ஒலிம்பிக் போட்டி நடக்கிறது என்கிற அறிவிப்பு வருகிறது. ”இந்த முறை அகதிகளுக்காகத் தனியாக ஒரு அணி உருவாக்கப் பட்டிருக்கிறது, அந்த அணியின் வழியாக நீ கலந்துகொள்ளலாம்” என்று ஸ்வென் சொல்கிறார். அகதி என்கிற வார்த்தை யூஸ்ராவைச் சுடுகிறது. ”நான் சிரியாவிற்காகத்தான் நீந்துவேன்” என்று சொல்கிறாள். சாரா அவளிடம் பேசிச் சம்மதிக்க வைக்கிறாள்.

The Swimmers

அகதிகள் அணியின் சார்பாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள பிரேசில் செல்கிறார்கள் யூஸ்ராவும் ஸ்வெனும். அவளைப் பற்றி அறிந்துகொண்ட போட்டியாளர்கள், அவளைக் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கெனவே அகதி என்கிற வலியில் இருப்பவளுக்கு, வார்த்தைகள் இன்னும் வலியைக் கொடுக்கின்றன. ”ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, அவர்கள் அதிசயங்களைச் செய்யக் கூடியவர்கள்” என்று உற்சாகமூட்டுகிறாள் சாரா. ”நம்முடைய குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், புதிய வாழ்க்கையைத் தேடி, அந்தக் கடலிற்குள் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்காக நீச்சல் அடி” என்று யூஸ்ராவைத் தயார்படுத்துகிறாள்.

மைதானத்தில் நடைபெறும் வாணவேடிக்கைகள் சிரியாவில் விழுந்து கொண்டிருக்கும் குண்டுகளை ஞாபகப்படுத்துகிறது. போட்டி ஆரம்பமாகிறது. இந்த நேரத்திற்காகத்தான் அந்த இரவில், அந்தக் கடலை நீந்திக் கடந்தோம் என்று நினைத்துக்கொள்கிறாள் யூஸ்ரா. வேறு வழியில்லை, வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்கிற உறுதியோடு நீந்துகிறாள். வெற்றியடைகிறாள் யூஸ்ரா மர்தினி.

அகதியென்று அழைத்த உலகம் இப்போது யூஸ்ராவை ஒலிம்பிக் வீராங்கனை என்று அழைக்கத் தொடங்குகிறது. ”கடைசி இரண்டு மாதங்களில் ஒரு லட்சம் பேர் கடலைக் கடந்து கிரீஸின் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள், நான் அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தொண்டு நிறுவனத்தில் சேரப்போகிறேன்” என்கிறாள் சாரா. யூஸ்ரா மறுக்க, ”ஒருவேளை அந்த வழியாக நம் அப்பாவும் அம்மாவும் தங்கையும் வர நேர்ந்தால்?” என்று சாரா கேட்கும்போது யூஸ்ரா மட்டுமல்ல நாமும் கலங்கித்தான் போகக்கூடும்.

யாரோ சிலரின் லாபத்திற்காகத் தொடங்கப்படும் போர்களால், அகதிகளாக்கப்பட்டவர்களை உலகத்தின் எந்த மூலையிலாவது சந்திக்க நேர்ந்தால், அன்போடு அணைத்துக் கொள்ளுங்கள். தாய்நிலத்தைப் பற்றிய கனவுகளை அவர்கள் சொல்வார்கள், அமைதியாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கனவுகளைத் தவிர அவர்களிடம் என்ன இருக்கப்போகிறது?

- கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

The Swimmers
Bitter Rice: கசப்பு அரிசியும் பெண்களின் வாழ்க்கையும் | சினிமாவும் அரசியலும் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in