

இந்த உலகில் பெரும் மதிப்பு மிக்கது என்று எதைக் கருதுகிறீர்கள்? தங்கம், வைரம் என்று சொல்வீர்கள் என்றால், அது தவறென்று சொல்லுகிறது இந்தத் திரைப்படம். கோடிக்கணக்கான சொத்துக்களுடன் அரண்மனை போன்ற ஆடம்பர மாளிகையில் வாழ்வது என்று சொல்வீர்கள் என்றால் அதையும் தவறென்று சொல்லுகிறது இந்தத் திரைப்படம்.
அப்படியென்றால் ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியா? இல்லை ஒரு நாட்டின் பிரதமர் பதவியா? இல்லை அமெரிக்கா போன்ற ஒரு தேசத்தின் அதிபர் பதவியா என்று கேட்டால் அதுவும் இல்லையாம்.
இந்தத் திரைப்படம் முன்வைக்கும் மதிப்புமிக்க ஒன்று உங்கள் கைகளில் இருந்தால் நீங்கள்தான் முதல்வரையும், பிரதமரையும் ஏன் அமெரிக்க அதிபரையே கூட உருவாக்குகிறவராக இருப்பீர்கள். அதற்கான உதாரணங்களைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுவரையிலும் இந்த உலகத்தால் உருவாக்கப்பட்ட கருத்துக்களையும் விட, ஏன் கடவுளையும் விட சக்தி வாய்ந்தது அது. இந்த உலகத்தின் பொருளாதார அசைவுகளைத் தீர்மானிக்கும் எண்ணெய் வளங்களைக் காட்டிலும் இதுதான் உலகத்தின் போக்கைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் இன்று முதன்மையாக இருக்கிறது. ஆக்கவும், அழிக்கவும் வல்லது.
ஒருவகையில் அந்த சக்தியை உருவாக்கக் கூடியவர்கள் நீங்கள்தான். இன்னொருவகையில் அந்தச் சக்தியால் சதிவலைக்குள் தள்ளப்படுகிறவர்களும் நீங்கள்தான். அந்தச் சக்தியைக் கையில் வைத்திருப்பவர்கள்தான் உலகத்தின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். அதிகார மையங்களை உருவாக்குகிறவர்களாக அவர்களே இருக்கிறார்கள். வேண்டாத அதிகாரத்தை வீழ்த்துகிறவர்களாகவும் அவர்களே இருக்கிறார்கள்.
காலத்தின் கொடுமை என்னவென்றால் தற்காலிகமே என்றாலும், ஒரு புரட்சியை இன்று உருவாக்கிவிட முடியும். மாபெரும் மக்கள் கிளர்ச்சியை எளிமையாக இன்று தூண்டிவிட முடியும். ஒரு போரை உருவாக்கிவிட முடியும், அந்தப் போரை அரசியல் லாபங்களுக்கானதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன்வழியாக அதிகாரத்தை எளிமையாக கைப்பற்றவும் முடியும். காட்சிகளின் வழியாக அதைத்தான் இந்தத் திரைப்படம் சொல்லிவிடத் துடிக்கிறது.
வியப்பில் விரிந்த கண்களோடு அப்படி என்னதான் இந்த உலகத்தின் மதிப்புமிக்க சொத்து என்ற கேள்வி இப்போது முட்டிக் கொண்டிருக்குமல்லவா! அதன் பெயர் தரவுகள் (Data). என்னைப் பற்றிய தரவுகள், உங்களைப் பற்றிய தரவுகள், இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதரையும் பற்றிய தரவுகள். தரவுகள்தான் இன்றைய உலகின் மதிப்புமிக்க சொத்து.
கூகுள், பேஸ்புக், அமேசான், டெஸ்லா போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள், கோடிக்கணக்கான சொத்துகளுடன் எப்படி இந்த உலகத்தின் முன்னணியில் இருக்கின்றன என்ற கேள்வியைக் கேட்டு, அந்த நிறுவனங்களின் கையில் இருக்கும் மக்களின் தரவுகள்தான் என்று பதில் சொல்கிறது இந்தத் திரைப்படம்.
பிரிட்டனை சேர்ந்த கேம்ரிட்ஜ் அனலடிகா நிறுவனமும், நாம் ஒவ்வொருவரும் உபயோகித்துக் கொண்டிருக்கும் முகநூல் நிறுவனமும் இணைந்து செய்த மிகப்பெரிய தரவுத் திருட்டை அம்பலப்படுத்தும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. உண்மையின் மீது பெருந்தாகம் கொண்ட கரீம் அமர் மற்றும் ஜெஹானே நெளஜைம் இருவரும் சேர்ந்து தயாரித்து இயக்கியிருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் கேம்ப்ரிட்ஜ் அனலடிகாவின் முன்னாள் வணிக மேம்பாட்டு இயக்குநர் கெய்சர் மற்றும் பிரிட்டிஷ் புலனாய்வுப் பத்திரிக்கையாளர் கரோல் ஆகியோரின் கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. உலகத்தை அதிரச்செய்யும் உண்மைகளை அவர்கள் நமக்குச் சொல்கிறார்கள். கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனம் உலகத்தின் பல நாடுகளில் செய்த அரசியல் சார்ந்த வேலைகளை வெளிப்படுத்துகிறார்கள் சில கதாபாத்திரங்கள்.
குறிப்பாக பிரிட்டன் ஐரோப்பா கண்டத்திலிருந்து வெளியேற நடந்த பிரெக்சிட் பிரச்சாரத்தில் கேம்பிரிட்ஜ் அனலடிகாவின் பங்கு அதிகாமகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்காவின் தேர்தலில் முக்கிய விசையாகச் செயல்பட்ட இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து சொல்கிறது இந்தத் திரைப்படம்.
என்ன! தேர்தலில் அரசியல் கட்சிகளுக்குத் தானே வேலை, நிறுவனத்திற்கு அங்கு என்ன வேலை என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழ வாய்ப்பில்லை. ஏனென்றால் அங்கு தொடங்கிய அந்த தேர்தல் நிறுவனங்கள் போன்று இந்தியாவிலும் இன்று அதிகமாகவே இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் தங்களுக்கென்று ஒரு தேர்தல் நிறுவனத்தைக் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் விரும்புகின்ற ஒருவருக்கு தேர்தலில் வாக்களித்துவிட்டு வருகிறீர்கள் என்று, ஆனால் இந்தத் திரைப்படம் சொல்கிறது, உங்கள் தரவுகளை சேகரித்து, அதன் மூலமாக உங்கள் சிந்தனையின் மீது ஆதிக்கம் செலுத்தி, நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று உங்களை முடிவுசெய்ய வைத்து, கிட்டத்தட்ட உங்கள் வாக்கை உங்களிடமிருந்து பிடுங்கும் வேலையை இந்த நிறுவனங்கள் கச்சிதமாக செய்து கொடுக்கின்றன. பொறுமையாக யோசித்துப் பாருங்கள், மெல்லப் புரியவரும் உங்களுக்கு.
இப்படித்தான் 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்காக, அதிபர் வேட்பாளர் ட்ரம்பை வெற்றியடையச் செய்ய கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
முகநூலைப் பயன்படுத்தி பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்து, அவர்களின் நடவடிக்கைகள், அரசியல் ஆர்வங்கள் எல்லாவற்றையும் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான காணொளிகள், படங்கள் போன்றவற்றை உருவாக்கி அவர்களைப் பார்க்கவைத்து அதன்மூலமாக அவர்களின் எண்ணங்களின் மீது தாக்கம் செலுத்தி, வாக்கைப் பிடுங்கி என்று கேட்கும்போதே, இதெல்லாம் சாத்தியமா என்ற எண்ணத்தில் தலைசுற்றலே வந்துவிடும். ஆனால் அவர்கள் அதைச் செய்துதான் தங்கள் எஜமானர்களை அதிகாரத்தில் அமர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
“இனிவரும் காலத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவது சாத்தியமேயில்லை” என்று சொல்கிறார்கள் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர்கள். முன்பெல்லாம் வலிமையான நாடுகள் வலிமைகுறைந்த நாடுகளின் நிலத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருந்தன. இன்று இதுபோன்ற தரவு நிறுவனங்கள் மனிதர்களின் மனதை, கவனத்தை, சிந்தனையைக் கைப்பற்றுவதில் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒரு கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர இன்னொரு கட்சியின் மீது ஊழல் அவதூறு, தேசத்திற்கு தீவிரவாதிகளால் ஆபத்து, அமெரிக்காவிற்கு வந்தேறிகளால் ஆபத்து என்றெல்லாம் மக்களை மூளைச்சலவை செய்து வாக்குகளை எளிதாக அறுவடை செய்து கொடுக்கிறார்கள் அரசியல் கட்சிகளுக்கு.
இந்தத் திரைப்படம், இப்படிப்பட்ட ஆய்வுகளோடு தொடங்குகிறது. உங்கள் கைப்பேசி உங்களின் முழுமையான உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகத்துல்லியமாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இணையத்தில் நீங்கள் தேடுவது சம்பந்தமாக, உடனடியாக வெளிப்படும் விளம்பரங்களே அதற்கு சாட்சி.
தொழிநுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த உலகத்தில் இணையம் எல்லோரையும் இணைக்கத்தான் செய்கிறது. அனுபவங்களைப் பகிரக்கூடிய இடமாக இருக்கிறது. தனிமையைப் போக்கக்கூடிய இடமாக இருக்கிறது. நினைவுகளைப் பாதுகாக்கக்கூடிய இடமாக இருக்கிறது. மனநல ஆலோசனைகளைக் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது. காதலிக்க கூடிய இடமாக, நட்பு பாராட்டக்கூடிய இடமாக இணையமே எல்லாமுமாக இருக்கிறது.
இதுதான் அவர்களுக்கு, அந்த தரவுத் திருடர்களுக்கு மிகப்பெரிய மூலதனமாக இருக்கிறது. உலக மக்களின் டிஜிட்டல் தடயங்கள் வருடத்திற்கு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தொழிலாக மாற்றப்படுகிறது என்பதை அவசியம் நீங்கள் அறிந்துகொள்ளத்தான் வேண்டும். உங்களுக்குத் தெரியாது, இப்போது நீங்கள் ஒரு விற்பனைப் பொருள் அவ்வளவுதான்.
இலவச இணைப்பு என்ற போர்வையில் உங்களை அரித்துத் தின்னக்கூடிய கரையான்கள் தான் ஒவ்வொரு சமூக ஊடகங்களும். இலவசமாக நமக்கு இணைப்புகளைக் கொடுத்துவிட்டு எப்படி அவர்கள் உலகத்தின் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று என்றாவது நாம் கேள்வி கேட்டிருக்கிறோமா? நமக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டு எங்கிருந்து அவர்கள் இவ்வளவு பணத்தைப் பெறுகிறார்கள்? எதற்காக என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
2016ஆம் ஆண்டு ட்ரம்பின் தேர்தல் பிரச்சார டிஜிட்டல் பிரிவு முகநூல் விளம்பரத்திற்கு மட்டும் ஒருநாளைக்கு 10 லட்சம் டாலர் செலவு செய்திருக்கிறது. ஒவ்வொரு அமெரிக்க வாக்காளரையும் பற்றி 5000 தரவுகள் கேம்பிரிட்ஜ் அனலடிகாவின் சேமிப்பில் இருக்கிறதென்று சொல்கிறது இந்தத் திரைப்படம். இந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்து முகநூல் நிறுவனர் விசாரிக்கப்பட்ட காலத்தில், அதன் பங்குகள் 6.35 சதவிகிதம் அதாவது 100 பில்லியல் டாலர் இழப்பைச் சந்தித்தது.
மிகமுக்கியமான ஒரு கேள்வியை இந்தத் திரைப்படம் எழுப்புகிறது. ஒலிம்பிக்கில் போதை மருந்து உட்கொண்டால் வீரர்கள் தடைசெய்யப்படுகிறார்கள். சட்டவிரோதமான வகைகளில் வாக்கைப் பிடுங்கி வெற்றிபெறும் அரசியல் கட்சிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
இந்தத் திரைப்படத்தில் கேம்பிரிட்ஜ் அனலடிகாவின் முன்னாள் ஊழியரிடம் ”ஜனநாயகத்திற்கு எதிரான ஒழுக்கமற்ற இந்த வேலை உங்களை உறுத்தவில்லையா” என்று கேட்கும் புலனாய்வு பத்திரிக்கையாளரிடம், ”மானுட வரலாறு முழுவதும் இதுபோன்ற ஒழுக்கமற்ற பரிசோதனைகள் நிறைய இருந்திருக்கின்றன! அதனால் அப்போது பெரிய பிழையாகத் தோன்றவில்லை” என்று பதில் சொல்வார்.
இந்தியாவிலும் தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் கடினமாக உழைத்து சேமித்துக் கொடுக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு மக்களின் சிந்தனையில் ஊடுருவி வாக்குகளை வாங்குகின்ற ஜனநாயக முறையிலான தேர்தல்கள் நடக்கின்றன. நீங்களும் சுயசிந்தனையோடு சென்று ஓட்டுப்போடுவதாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள் திரைப்படத்தை! வாழ்க ஜனநாயகம்!
கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com