Z: அவர் உயிருடன் இருக்கிறார் | சினிமாவும் அரசியலும் 31

Z: அவர் உயிருடன் இருக்கிறார் | சினிமாவும் அரசியலும் 31
Updated on
4 min read

அரசதிகாரத்தின் கோரமுகம் என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் உண்மையைப் பேச வேண்டும். அதிகாரத்தால் வாய்கூசாமல் ஒவ்வொரு நாளும் சொல்லப்படும் பொய்களை, இதெல்லாம் பொய்தானென்று மக்களிடம் சொல்ல வேண்டும். மக்களுக்கு எதிரான அரசதிகாரத்தின் முடிவுகளை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டும்.

இதையெல்லாம் நீங்கள் செய்யத் தொடங்கும்போதே அதிகாரத்தின் கோர நிழல் உங்களை நெருங்கிவிடும். இன்னும் உறுதியாக இதையெல்லாம் நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதிகாரத்தின் கோரமுகம் உங்கள் முன்னால் வந்து நிற்கும். நிஜம்.

மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தைக் கேள்வி கேட்டவர்கள், அதிகாரத்தை எதிர்த்து நின்றவர்கள், அதிகாரத்தைப் பகைத்துக் கொண்டவர்களில் பலர் என்னவானார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஒருவருக்குத் திடீரென்று மாரடைப்பு வந்து இறந்துவிட்டார் என்று சொல்லப்படும். ஆனால், உண்மை அதிகாரத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். தங்களுக்கு எதிரான கருத்துள்ள ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவார். கொன்றவர்களை அதிகாரம் எல்லா வழிகளிலும் பாதுகாத்துக் கொள்ளும்.

இப்போதுகூட நீங்கள் நினைத்துப் பார்த்தால், அதிகாரத்திற்கு எதிராகப் பேசியவர்கள், போராடியவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்ட நிகழ்வுகள் குறைந்தது பத்தாவது ஞாபகத்திற்கு வரலாம். அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், அரசதிகாரத்திற்கு எதிராக உரக்கப் பேசிய பத்திரிகையாளர்கள், அரசின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்திய ஜனநாயகவாதிகள் எனச் சமூகத்தின் மேல்மட்டத்தில்தான் இதெல்லாம் நடக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்.

அதிகாரத்தை எதிர்த்து நின்ற ஒரு கிராமத்து மனிதன் திடீரென்று ஒருநாள் படுகொலை செய்யப்பட்டிருப்பான். மக்களின் உரிமைகளுக்காக அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு சாதாரண கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்டிருப்பார். நீங்கள் கேள்விப்பட்ட, ஒருசில நாள்களில் மூடி மறைக்கப்பட்ட படுகொலைகளை இந்தத் திரைப்படம் உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.

உண்மையைச் சொன்னால் இப்படிப்பட்ட படுகொலைகளின் மீதுதான் அரசதிகாரம் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறது. இங்கு மட்டும்தான் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள், உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. எனக்கும்கூட இந்தப் படத்தைப் பார்க்கும்போது காந்தி தொடங்கி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட ஏராளமானவர்கள் ஞாபகத்திற்கு வந்தார்கள். இந்தத் திரைப்படமும் அப்படிப் படுகொலை செய்யப்பட்ட ஒரு தலைவரைப் பற்றியதுதான்.

கிரேக்க நாட்டின் மிக முக்கியமான இடதுசாரி அரசியல்வாதியான கிரிகோரிஸ் லம்ப்ராகிஸ். மக்களாட்சி என்கிற பெயரில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் அரசுகளே பட்டப்பகலில் படுகொலைகளை செய்யும்போது, அவர் காலத்தில் கிரேக்கத்தில் ராணுவ ஆட்சி அமலில் இருந்தது. ஆனாலும் என்ன? அடக்குமுறைகளுக்குப் பயந்தோ கொலைமிரட்டல்களுக்குப் பயந்தோ அந்தத் தலைவர் பின்வாங்கிவிடவில்லை. பேசினார், உரக்கப் பேசினார்.

கிரிகோரிஸ் லம்ப்ராகிஸ் இடதுசாரி சிந்தனையாளர் மட்டுமல்ல, மிக முக்கியமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். மக்களுக்கான மருத்துவர். கிரேக்கத்தின் திறமையான தடகள வீரர். பல ஆண்டுகளாக நீளம் தாண்டுதலில் தேசிய சாம்பியனாக இருந்தவர். விளையாட்டு என்பது சமூக மாற்றத்திற்கான கருவி என்று உறுதியாக நம்பியவர்.

இரண்டாம் உலகப்போரின்போது மானுட விரோதிகளான நாஜிகளின் ஆக்கிரமிப்பில் கிரேக்கம் இருந்தபோது, நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தவர். அவர்களுடைய பசியைப் போக்க தன்னாலான எல்லாவற்றையும் செய்தவர். மிக முக்கியமாக, அரசதிகாரத்தை எதிர்க்கும் எல்லா இயக்கங்களோடும் நெருக்கமாக இருந்தவர். இது போதாதா? அதிகாரம் அவரைக் குறிவைப்பதற்கு?

கிரேக்கத்தில் 1950-1960 காலக்கட்டம் வலதுசாரிகள் ஆட்சியில் இருந்தார்கள். வலதுசாரிகள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்றால் பிரிவினைப் பேச்சுகளும், மக்கள் விரோதப் போக்குகளும் இருக்குமென்றே அர்த்தம். அங்கும் அப்படித்தான் இருந்தது. அதிலும் முக்கியமாக சோவியத் யூனியன் உலகின் நம்பிக்கையாக மாறிக் கொண்டிருந்த நேரம். வலதுசாரி அரசாங்கம் நிம்மதியாக இருந்துவிட முடியுமா? கம்யூனிச எதிர்ப்பு அங்கே கடுமையாக இருந்தது. இடதுசாரிகளின் ஒவ்வோர் அசைவும் கண்காணிக்கப்பட்டது. காவல்துறையும் வலதுசாரிகளும் இணைந்து இடதுசாரிகளுக்கு எதிராகச் செயல்பட்டனர்.

1963இல் கிரிகோரிஸ் லம்ப்ராகிஸ் ஏதென்ஸ் நகரில் அணு ஆயுதங்களுக்கு எதிரான அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்தார். காவல்துறையினரும் வலதுசாரிகளும் எல்லா வழிகளிலும் தடைகளை உருவாக்குகினார்கள். நான் ஒருவனே மிச்சமிருந்தாலும் நடப்பேன் என்று சொல்கிறார், அதேபோல அமைதி என்று எழுதப்பட்ட பதாகையை உயர்த்தியபடி அவர் மட்டுமே நடக்கிறார். சிறிது தூரத்தில் அவர் கைது செய்யப்பட்டாலும் அந்தச் செயல் அரச எதிர்ப்பின் சின்னமாக மாறிப்போனது.

சில மாதங்களுக்குப் பிறகு தெசலோனிக்கி நகரில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிவிட்டு வெளியே வரும்போது காவல்துறையினர் வேடிக்கை பார்க்க, வலதுசாரி ஆள்களால் தாக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்று இறந்து போனார். அந்தக் குற்றத்தை மூடிமறைக்க அரசாங்கமும் அதிகாரிகளும் பெருமுயற்சி செய்கிறார்கள்.

மக்கள் கிரிகோரிஸ் லம்ப்ராகிஸிற்கு ஆதரவாகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் போராட்டங்களில் Z என்கிற எழுத்தை எழுதத் தொடங்குகிறார்கள். தொன்மையான கிரேக்கத்தில் Z என்பதற்கு அவர் இன்னும் வாழ்கிறார் என்று அர்த்தம்.

மனசாட்சியுள்ள ஒவ்வொரு கிரேக்க மக்களையும் பாதித்த கிரிகோரிஸ் லம்ப்ராகிஸின் மரணம் கிரீஸின் முக்கியமான எழுத்தாளரான வாசிலிஸ் வாசிலிகோஸையும் பாதித்தது. அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதியவர், சமூக நீதியை வலியுறுத்தியவர். கிரிகோரிஸ் லம்ப்ராகிஸின் பெயரை வெளிப்படையாகச் சொல்லாமல் Z என்கிற தலைப்பில் நாவலாக எழுதினார்.

கிரேக்கத்தில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பரவலாக வாசிக்கப்பட்டது. அந்த நாவலை அடிப்படையாக வைத்து 1969இல் கிரேக்கத்தின் மிக முக்கியமான இயக்குநர் கோஸ்டா கவ்ராஸ் Z என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்தார். எதற்காக இந்தத் திரைப்படத்தை எடுத்தீர்கள் என்கிற கேள்விக்கு, “1967 இல் கிரேக்கத்தில் நடந்த ராணுவ ஆட்சி என்னை மிகவும் பாதித்தது. அந்த அநீதி, அந்த அடக்குமுறை என்னுள் கோபத்தை உருவாக்கியது. Z அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான்” என்றார்.

படத்தின் தொடக்கத்தில் ராணுவ அதிகாரிகளுக்கிடையே கலந்துரையாடல் நடைபெறுகிறது. உயர் அதிகாரிகள் இளம் அதிகாரிகளுக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். திராட்சைத் தோட்டங்களைப் பாதிக்கும் பூஞ்சை நோயைப்போல, சமூகத்தைப் பாதிக்கும் கருத்தியல், அதாவது கம்யூனிசம் நோயை எப்படிக் கட்டுப்படுத்துவது, எப்படித் தடுப்பது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் நெருங்கிப் பரவும் கருத்தியல் பூஞ்சையை உடனடியாக எப்படிச் சரிசெய்வது என்று ஆலோசனை சொல்கிறார்கள். கடவுள் சிவப்பர்களுக்கு ஒளி தருவதில்லை என்று நேரடியாக இடதுசாரிகளைக் கட்டுப்படுத்துவது பற்றி விவாதிக்கிறார்கள்.

ராணுவத்தால் மட்டுமல்ல வலதுசாரிகளாலும் கடுமையாக வெறுக்கப்படும் மருத்துவரும் இடதுசாரி சிந்தனையாளருமான Z தெசலோனிக்கி நகரில் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள வருகிறார் என்கிற செய்தி, அவருடைய ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் அவருடைய எதிரிகளுக்கு கசப்பான மருந்தாகும் இருக்கிறது.

ஆதரவாளர்களோ அவரை வரவேற்கவும், நிகழ்வைக் கச்சிதமாக நடத்தி முடிக்கவும் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எதிரிகளோ காவல்துறையின் முழுமையான ஒத்துழைப்போடு அவரை எப்படிக் கொலை செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதி கடைசி நேரத்தில் மறுக்கப்படுகிறது. எல்லாத் திசைகளிலும் இருந்து தடைகள் புறப்பட்டு வருகின்றன. ஆனாலும் இஸட் தெசலோனிக்கி நகருக்கு வருகை தருகிறார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

அரங்கத்திற்கு உள்ளே அவருடைய ஆதரவாளர்களும் அரங்கிற்கு வெளியே அவருடைய எதிரிகளும் கூடியிருக்கிறார்கள். காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பேசிமுடித்துவிட்டு வெளியே வருகிறார் இஸட். சில வலதுசாரி ஆள்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

நேர்மையான ஒரு நீதிபதியின் கைகளுக்கு இந்த வழக்கு செல்கிறது. பத்திரிகையாளர் ஒருவர் முக்கியமான ஆதாரங்களோடு வழக்கின் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அரசும் அதிகாரிகளும் இந்தக் கொலையை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்று முழுமுயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீதிபதி உண்மையை எப்படியாவது வெளியே கொண்டுவந்துவிட வேண்டுமென்று உறுதியாக இருக்கிறார்.

இறுதியில் உண்மை வெளிவருகிறது. ஆனால், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. உண்மையைக் கண்டறிந்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். உங்களுக்கும்கூட விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளெல்லாம் ஞாபகத்திற்கு வரலாம், இன்றைய உலக அரசியல் நிலைமை என்பது, 1960களின் கிரேக்கம் போல ராணுவ ஆட்சியெல்லாம் தேவையில்லை.

மக்களாட்சியின் பெயராலேயே மக்களுக்கு விரோதமான எல்லாவற்றையும் செய்யலாம் என்பதுதான். எது எப்படியாகினும் சினிமா என்ன செய்ய வேண்டும் என்பது இஸட் என்றென்றைக்குமான எடுத்துக்காட்டாகவே இருக்கிறது என்பது நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கத்தான் செய்கிறது.

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Z: அவர் உயிருடன் இருக்கிறார் | சினிமாவும் அரசியலும் 31
Bacurau: மனித வேட்டைக்கு எதிரான மக்கள் | சினிமாவும் அரசியலும் 30

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in