தாக்கம் தந்த 10 படங்கள் | தமிழ் சினிமா 2025

தாக்கம் தந்த 10 படங்கள் | தமிழ் சினிமா 2025

Published on

நூறு கோடியைத் தாண்டி வசூல் செய்யும் மாஸ் மசாலா படங்கள் சினிமாவை ஒரு தொழிலாகத் தக்க வைக்கின்றன. தற்காலத்தில் சினிமா பெருநிறுவன மயமாகியிருப்பதற்கும் இவ்வகை வணிகப் படங்களின் வியாபாரமும் அவற்றுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்புமே காரணம். ஆனால், சினிமா என்கிற தொழிலுக்கு ‘கலை’ என்கிற அங்கீகாரத்தைக் கொடுப்பவை ‘மிடில் சினிமா’ என்கிற இடைநிலை பொழுதுபோக்குப் படங்கள்தான். ‘ஆஃப் பீட் சினிமா’, ‘ஃபீல் குட் சினிமா’ எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இவை, அளவான பொழுதுபோக்கு மதிப்பைக் கொண்டிருப்பதோடு; வாழ்வின் யதார்த்தத்தைத் தொட்டுக் காட்டி, நம் தலையில் செல்லமாகக் குட்டுபவை.

வணிக சினிமாவின் சத்தத்தையும், கலைப்படங்களின் கடினத்தையும் தாண்டி, மனித மனம் தவறவிடும் அன்றாடக் கதைகளை ஆராவாரம் இல்லாமல் சித்தரிப்பவை. சிரிப்பு, சிந்தனை, கனவு, கசப்பு ஒன்றாகக் கலந்த இவைதான், வாழ்வில் மறக்கக்கூடாத உண்மைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சி, சாதாரணத்தைச் சிறப்பாக்கி, சினிமாவை ஒரு பிரகாசமான சாளரமாக மாற்றுகின்றன. இருப்பினும் எல்லா மிடில் சினிமாக்களும் முழுமையான திரை அனுபவத்தைத் தருவதில்லை. 2025இன் மிடில் சினிமாக்களில் அதிகத் தாக்கமும் தரமான திரை அனுபவமும் தந்த 10 படங்களைப் பார்ப்போம்.

சிறை: படத்தின் தலைப்புதான் சிறையே தவிர, சிறைக்குள் கேமரா மையம் கொள்ளவில்லை. ஆனால், குடும்பத்தையும் வாழ வேண்டிய வாழ்க்கையையும் இழந்து, தண்டனைக் காலம் போல் பல ஆண்டுகள் வாழ்நாளை விசாரணைக் கைதியாகவே சிறையில் கழித்து அனுபவிக்கும் எளிய மனிதர்களின் மிகக்கொடிய வலியைப் படம் உணர வைக்கிறது. அதுவே பாதிக்கப்பட்டவன், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டால் வெறுப்பும் நிராகரிப்பும் வலிந்து சேர்ந்துகொள்வதைப் பட்டவர்த்தனப்படுத்தியிருக்கிறது. அதேநேரம், நமது நீதி பரிபாலன மேலாண்மையின் போதாமையை ஆரவாரம் ஏதுமின்றி கிழித்துத் தொங்கிவிட்டுள்ள இப்படம், எங்கெல்லாம் நாம் நம்பிக்கை வைப்பதில்லையோ அங்கெல்லாம் நம்பிக்கை தரும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற உண்மையையும் ஆழமாக விதைக்கிறது.

‘எஸ்கார்ட் டியூட்டி’ என்கிற காவல் துறையின் வெளித்தெரியாத உலகத்தைக் களமாக்கியிருந்தார் கதாசிரியர் தமிழ். ஒவ்வொரு காட்சியையும் வாழ்க்கையாக உணர வைத்துவிடும் யதார்த்தம் கூடிய ‘ஸ்டேஜிங்’, தேர்ச்சிமிக்க ‘எக்ஸிகியூஷன்’ வழியாகச் சிறந்த அறிமுக இயக்குநராகத் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார் சுரேஷ் ராஜகுமாரி. கதைகளைத் தமிழ் வாழ்க்கையிலிருந்து எடுக்கும் கதாசிரியர் - அதை வாழ்க்கைபோலவே படமாக்கும் இயக்குநரோடு இணையும்போது நல்ல படைப்பு உறுதியாகப் பிறக்கும் என்பதற்குச் ‘சிறை’ சிறந்த சாட்சி.

பைசன் காளமாடன்: சாதி ஆணவம் கைக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறை, அதன் நீட்சியாக ஒளிந்து காத்திருக்கும் வன்முறை ஆகியன வேரோடியிருக்கும் கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்த கிட்டான் என்கிற ஏழை மாணவன், தன் வாழ்வை மாற்றும் ஆயுதமாகக் கபடியைத் தேர்ந்தெடுக்கிறான். வன்முறைக்குப் பதில் வன்முறை எனக் களம் காணாமல், விளையாட்டைப் பதிலீடாகக் கையிலெடுக்கும் கதாநாயகனை, இயக்குநர் ஒரு ‘ஹீரோ’வாக இதில் உயர்த்திக் காட்டவில்லை.

மாறாக, சூழல் உருவாக்கும் லட்சிய வெறிகொண்ட மனிதனாகவே உயர்த்துகிறார். இயக்குநர் மாரி செல்வராஜின் இந்த அணுகுமுறையே கிராமத்தின் சாதி இருளிலிருந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கோபுர ஒளியில் அவன் நனைவதுவரை, பல தடைகளைக் கடந்து, தன் விதியை மாற்றி எழுதும் மனவலிமை மிகுந்த தனிமனிதப் போராட்டமாக விரித்துக் காட்ட உதவியது.

காதல் என்பது பொதுவுடைமை: சமூகத்தின் அச்சில் வார்க்கப்பட்ட மனிதர்கள், பொதுப்புத்திக்கு எதிரான எதுவொன்றையும் உடனடி யாக ஏற்பதில்லை. மாற்றுப்பாலினத்தவரைச் சக மனிதர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்கள் குடியிருக்க வாடகை வீடும், வேலை வாய்ப்பும் வழங்குவதில் பொதுச் சமூகம் இன்னமுமே பின்தங்கியிருக்கிறது. அரசு பலவிதங்களில் உதவினாலும் அவர்களுக்குச் சிக்கல் தொடரும்போது, தன்பாலின ஈர்ப்பும் காதலும் இயற்கையானவை; ஏற்று ஆதரிக்க வேண்டிய ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் பல காலம் தேவைப்படலாம். அதற்கான நல்ல தொடக்கமாக, ஒரு திறந்த உரையாடலுக்கு அழைக்கிறது இந்தப் படம். பெண்ணியவாதியாக இருக்கும் ஒருவர், தன்னுடைய மகளின் தன்பாலினக் காதலை ஏற்க மறுக்கிறார்.

அவரையும், இன்னும் இரு கதாபாத்திரங்களையும் கொண்டு சமூக அடுக்கின் மேல்தட்டு மனோபாவத்தைக் குறுக்குவெட்டாகக் காட்டியிருக்கிறார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். ‘லென்ஸ்’, ‘தலைக் கூத்தல்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இவர், தன்னுடைய முந்தைய படங்களின் பாணியிலிருந்து விலகி, இதை ஓர் அழகான காதல் திரைப்படமாகத் தந்திருக்கிறார். எந்த இடத்திலும் போதனை செய்யாமல், தன்பாலினக் காதலில் இருக்கும் நியாயங்கள், அறிவியல் உண்மைகள் ஆகியவற்றைக் கவித்துவமான காதல் காட்சிகளோடு, திறமையான நடிகர்கள், அற்புதமான இசை ஆகியவற்றின் வழியாகத் திரை அனுபவம் குன்றாத படமாகத் தந்திருந்தார்.

டூரிஸ்ட் ஃபேமிலி: இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி யால் அங்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஓர் ஈழத் தமிழ்க் குடும்பம், புதிய வாழ்க்கையைத் தேடி சென்னைக்கு வந்து குடியேறி வாழ முயல்கிறது. அதிலிருக்கும் சவால்களை, மனிதநேயத்துடன், சலசலக்கும் நீரோடைபோல் சித்தரித்தது பரபரக்காத திரைக்கதை. அதன் போக்கு பல இடங்களில் கணிக்கக்கூடிய பாதையில் சென்றாலும், ஏதிலிக் குடும்பம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் போராட்டம், அவர்களின் குடும்பப் பாசம், நம்பிக்கை, நினைவுகள், ஏக்கங்கள், கனவுகள் ஆகியவற்றை மனதில் நம்பிக்கையோடு தக்கவைத்திருப்பதை உணர்வுகளின் சுற்றுலாபோல் சோகம் கலந்த நகைச்சுவை உணர்வுடன் சித்தரித்தது.

ஒரு சாதாரணக் கதையின் போக்கு உணர்ச்சிகரப் பயணமாக மாற, வந்த இடத்தில் வாழவிடும் மனிதர்களால் நிகழ்ந்துவிடுகிறது. சக மனிதர்களின் சுதந்திரத்தையும் அவர்கள் வாழ்வதற்கான உரிமையையும் மதிக்கும் குணமுள்ள அனை வரும் நல்ல மனிதர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எடுத்துக்கொண்ட ‘சினிமாட்டிக் லிபர்டி’, குறைகளை மீறி, குறைந்துகொண்டு வரும் மனிதநேயத்தின் தேவையை வலியுறுத்தும் படமாக மாறியது.

குடும்பஸ்தன்: நடுத்தர வர்க்க குடும்பங்களின் சிக்கலற்ற இயக்கம் தடைப்படாமல் இருக்க, குடும்பத் தலைவர்களின் சீரான வருமான வழி எந்தச் சிக்கலுக்கும் உள்ளாகிவிடக் கூடாது. அப்படி ஆகிவிடுமானால், உறவுகளையும் சொந்த மதிப்பையும் தக்கவைத்துக் கொள்ள ஒரு சாமானியன் எவ்வளவு சோதனைகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கும் என்கிற எல்லாக் காலத்துக்குமான யதார்த்தத்தைச் சற்று கூடுதலான நகைச்சுவையில் தோய்த்துக் கொடுக்கும் முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி.

கதையின் நாயகன், தனக்கு வரும் சிக்கல்களைச் சமன்செய்ய ஆடும் ஆட்டங்களில் யதார்த்தமும் கற்பனையும் கலந்திருந்தாலும் அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் நடுத்தர வர்க்க போராட்ட மனநிலையுடன் பார்வையாளர்கள் எளிதில் தொடர்புப்படுத்திக்கொண்டார்கள். திரைக்கதை பல சிக்கல்களைக் கொண்டிருந்தாலும் நாயகனாக நடித்த மணிகண்டனின் ஈடுபாடுமிக்க நடிப்பு இவற்றைச் சமன் செய்தது.

ஆண் பாவம் பொல்லாதது: அதிகமும் பேசவேண்டிய கதைகளில் ஒன்றைக் கையிலெடுத்ததே இப்படத்தின் இயக்குநர் கலையரசனின் தேடலைச்சொல்லியது. பெண்களுக் கான வெளியைப் புரிந்து கொள்ளாத ஆண்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதைக் கடந்த ஆண்டு வெளியான ‘லவ்வர்’ அழுத்தம் திருத்தமாகச் சொன்னது. இப்போது, ஆண்களின்வெளியைப் புரிந்துகொள்ள மறுக்கும் இக்கதையில் வரும் புதிய தலைமுறைப் பெண்ணைப் போன்றவர் களால், வாழ வேண்டிய வாழ்க்கை தொடங்கும்போதே எவ்வாறு நொறுங்கிவிடுகிறது என்பதை நச்சென்று சொன்னது இப்படம்.

ஏற்பாட்டுத் திருமணத்துக்குப் பிறகு தம்பதிக்கு இடையில் முகிழ்த்து வளரும் காதலை, தனித்தனி தெரிவுகள் காரணமாகத் தெறிக்கும் சூழல் நகைச்சுவைக் கலந்து கலகலப்பும் கண்ணீருமாகப் பிரச்சினையை விவரித்தது படம். கோபங்கள் தணியவும் காயங்கள் ஆறவும் வாய்ப்புக் கொடுக்காமல் எடுக்கப்படும் அவசர முடிவுகள், வாழ்ந்து மகிழவேண்டிய இளமைக் காலத்தை இல்லாமல் ஆக்கிவிடுவதை வலியுடன் உணரவைத்து. விவாகரத்து வழக்குக்கு முன் ஓர் இணையரின் வாழ்க்கையில் முளைக்கும் விரிசலின் வேர்களை மெல்லமெல்ல விலக்கிக் காட்டிய திரைக்கதையும் நடிகர்களின் ஈடுபாடு மிகுந்த பங்களிப்பும் விலகல் இல்லாத திரை அனுபவத்தைக் கொடுத்தன. அன்பு, மன்னிப்பு, உறவில் சமநிலை ஆகியவை திருமண வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதை நடுநிலையுடன் சித்தரித்த வகையில் இது பெண்களின் பக்கம் நிற்கும் படமாகவும் மாறியது.

எமகாதகி: புத்தாயிரத்துக்குப் பிறகான தமிழ் சினிமாவில் நாட்டார் தெய்வங்கள் குறித்து அதிகமும் காட்டப்பட்ட அம்சங்கள் என்று பார்த்தால், கிராமியக் கோயில் திருவிழாக்கள், சாமியாடிகள் பற்றி மட்டுமே. ஆனால், ‘எமகாதகி’, ஆணவக் கொலை வழியாக வலிந்து சிறுதெய்வம் ஆக்கப்பட்ட பெண்களின் விடுதலைக் குரலையும் ஒடுக்கப்பட்ட அவர் களின் குமுறலையும் படத்தின் தலைப்பில் தொடங்கிக் கலை நேர்த்தியுடன் அது சித்தரித் தது. திடுக்கிட வைக்கும் திகில் (Jump Scare) காட்சி ஒன்றுகூட இல்லாமல், ஓர் உயர்தரமான ‘நேச்சுரல் ஹாரர்’ வகைத் திரைப்படம் தமிழில் சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.

முதன்மைக் கதாபாத்திரத்துக்கான கச்சிதமான நடிகர் தேர்வு, ஓர் அமானுஷ்யச் சடலமாக வெளிப்பட்ட நடிப்பு, கதை நிகழும் வீடு, கிராமச் சூழல், கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை எனத் தயாரிப்பு வடிவமைப்பில் மிக கவனமாகச் செதுக்கித் திட்டமிட்டு, ‘எமகாதகி’யின் உலகமாக அதைக் காட்சிக்குள் இடம்பெயர்க்க முடியுமா என வியக்கவும் மரண வீட்டைக் காணும்போது வியர்க்கவும் வைத்தது. இப்படத்தின் ‘நான் - லீனியர்’ திரைக்கதையும், அது முழுமையான துணைக் கதாபாத்திரங்களைக் கொண்டிருந்ததும் ஹாரர் பயணத்துக்கு முழுமை சேர்த்தது. முதன்மைக் கதாபாத்திரமான லீலாவின் போராட்டம் குரலற்ற அனைத்துப் பெண்களின் குரலாக மாறியதுடன் திரை அனுபவம் தந்ததில் உயர்ந்து நின்றது.

நாங்கள்: நீலகிரியின் நிலப்பரப்பைப் பாடல், காதல் காட்சிகளுக்காகப் பயன்படுத்தி வந்திருக்கும் தமிழ் சினிமாவில், நீலகிரியின் குளிருக்கு நடுவே வெக்கை மனதுடன் அன்றாடத்துக்காக அல்லாடும் பங்களா மனிதர்களைக் காட்டிய முதல் படம். பெற்றோர்களின் பிரிவால், கொண்டாட்டமாகக் கடந்துசெல்ல வேண்டிய மூன்று சிறார்களின் பால்யம், வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் கொடுமையான பயிற்சிப் பட்டறையாக மாறுவதைச் சித்தரித்த காட்சிகளில் நீலகிரியின் வெளித்தெரியாத வாழ்க்கைப் பின்னணியை மிகையில்லாமல் அவ்வளவு இயல்பாகச் சித்தரித்திருந்தார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து படத்தை இயக்கியிருந்த அவினாஷ் பிரகாஷ்.

அப்பாவும் அம்மாவும் எப்படியாவது சேர்ந்துவிட மாட்டார்களா என்கிற அந்தச் சிறார்களின் ஏக்கம் பார்வையாளரின் வயதை மீறித் தாக்கியது. ஆண் மையச் சிக்கல்களில், ஒழுக்கத்தின் தோல்வியும் தன்முனைப்பு உருவாக்கும் வெற்றுப் பிடிவாதமும் தன்னை மட்டுமல்ல; தன்னைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும் என்பதை உயர்தரமான திரைமொழியில் நிலக்காட்சிகளுக்கு நடுவே விரித்தது.

பேட் கேர்ள்: பால்யம் - பதின்மம் தொடங்கி முழு மனிதராக உருப்பெறும் காலம் வரையிலான தனிமனித வாழ்க்கைச் சித்திரங்கள் தமிழில் குறைவாகவே வந்துள்ளன. முதல் முறையாக ஓர் இளம் பெண்ணின் மனப் பயணத்தை மையமாகக் கொண்டு நகரும் கதையை ஒரு பெண்ணே எழுதி, இயக்கியிருப்பதால் இது அசலான பெண்களின் அக உணர்வைக் காட்சிப்படுத்தும் படைப்பாக உருப் பெற்றிருக்கிறது.

15 வயது ரம்யாவின் குடும்பம் நிர்ப்பந்திக்கும் கட்டுப்பாடுகள், நம்பிக்கையற்ற காதலர்கள், நம்பிக்கைக்குரிய தோழி எனத் தான் கடந்துவரும் மனிதர்களுக்கு மத்தியில் அவள் தன் சுய அடையாளத்தைத் தேடியபடி வளர்ந்து ஆளாவதை மிகைப்படுத்தலின்றிச் சித்தரித்திருந்தார் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத். ரம்யாவாக அஞ்சலி சிவராமனின் நடிப்பு நுணுக்கமும், உணர்ச்சிப்பூர்வமும் மிகுந்த அவருடைய கதாபாத்திரத்தைக் கடைசிவரை உயிர்ப்புடன் வைத்திருந்தது. கட்டுப்பாடுகள், கண்டிப்புகளின் மத்தியில் வளரும் ஒரு பெண், முழு மனுஷியாகி நிற்கும்போது பதின்மத்தில் அவளுக் குக் கிடைக்காமல் போன காதலும் சுதந்திரம் கிடைத்தால் எப்படி உணர்வாள், எப்படி நடந்துகொள்வாள் என்பதைப் போலித்தனமின்றி, ஒளிவு மறைவுமின்றி துணிந்து சொன்னதால், இப்படம் பெண்ணிய உலகைப் படைத்ததில் ஓர் அசல் நகர்வாகிவிடுகிறது.

யெல்லோ: உயர்கல்விக் கனவைக் கைவிட்டு, அப்பாவின் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண் வங்கிப் பணியில் சேர்கிறாள். பணியழுத்தம், காதல் தோல்வி ஆகியவற்றிலிருந்து விடுபட, தன் பள்ளிக் கால நண்பர்களைத் தேடி திடீர்ப் பயணமாகக் கேரளம் செல்கிறாள். அங்கே அவள் சந்திக்கும் மனிதர்கள் அவளுக்குள் மறைந்திருந்த வாழ்வின் நிறங்களை அவளுக்கு அடையாளம் காட்டுகிறார்கள். ‘உன் மனம் சொல்வதைக் கேள்’ என்கிற கருத்தைப் போலித்தனமோ சினிமா மிகையோ இல்லாமல், இயற்கையை ஒரு கதாபாத்திரமாக உள்நுழைத்துச் சித்தரித்ததில் ஃபிரஷ் ஆன திரை அனுபவத்துக்குள் ஆழ்த்தியது ஹரி மகாதேவின் இயக்கமும் அபி ஆத்விக்கின் ஒளிப்பதிவும்.

ஆதிரையாக வரும் பூர்ணிமா ரவி, சாய் ஆக வரும் வைபவ் முருகேசன் இருவரும் கதாபாத்திரமாகவே மாறியிருந்தார்கள். வாழ்க்கையில் எதிர்ப்படும் தோல்விகள், ஆற்றாமை, குழப்பம் எதுவொன்றையும் உடைத்து, ஒவ்வொரு மனிதரும் தன்னையே மீண்டும் கண்டுபிடிக்க முயலும்போது இயற்கையாகவே மனம் சரியான தெரிவை முன்வைக்கும் என்பதைச் சிறந்த காட்சிபூர்வத் திரை அனுபவமாகக் கொடுத்தது ‘யெல்லோ’வின் தனித்துவம்.

தாக்கம் தந்த 10 படங்கள் | தமிழ் சினிமா 2025
தமிழ் சினிமா 2025-ல் ஏமாற்றங்களும் ஆச்சர்யங்களும்! - ஒரு விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in