தமிழ் சினிமா 2025-ல் ஏமாற்றங்களும் ஆச்சர்யங்களும்! - ஒரு விரைவுப் பார்வை

தமிழ் சினிமா 2025-ல்  ஏமாற்றங்களும் ஆச்சர்யங்களும்! - ஒரு விரைவுப் பார்வை
Updated on
2 min read

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை 2025-ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் ஏமாற்றத்தையும், எந்தவித எதிர்பார்ப்பும் இன்று வெளியான பல சிறிய பட்ஜெட் படங்கள் ஆச்சர்யத்தையும் தந்தன. பல தசாப்தங்களுக்குப் பிறகு இணைந்த ஆளுமைகளின் கூட்டணி கூட ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், எந்தவித ஆரவாரமும் இன்றி வந்த எளிய கதைகள் வசூலில் சாதனை படைத்துள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றிய 'பெரிய பட்ஜெட்' படங்கள்:

தக் லைஃப்: 'நாயகன்' படத்துக்குப் பிறகு சுமார் 38 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி இணைந்ததால் இப்படம் உலகளவில் எதிர்பார்க்கப்பட்டது. கூடவே சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன் என பெரும் நட்சத்திரப் பட்டாளம். ஆனால், படத்தின் கதைக்களம் பொதுவான ரசிகர்களைச் சென்றடையத் தவறியதால், இப்படம் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பாடல்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி அமைந்த இப்படத்தில் நடிப்பு, திரைக்கதை, பின்னணி இசை, வசனங்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டன.

விடாமுயற்சி: மகிழ்திருமேனி - அஜித் குமார் கூட்டணியில் உருவான இப்படம், பலமுறை தள்ளிப்போய் வெளியானதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆக்‌ஷன், அனிருத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு என தொழில்நுட்ப ரீதியாகப் பாராட்டப்பட்டாலும், சுவாரசியமற்ற திரைக்கதையால் வசூல் ரீதியாகப் பெரும் சரிவைச் சந்தித்தது இப்படம்.

ரெட்ரோ: ‘ஜிகிர்தண்டா 2’ வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்ற லேபிளுடன் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம். ட்ரெய்லர், பாடல்களும் இப்படத்துக்கு பெரும் ஹைப்பை ஏற்றி இருந்தன. ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதையில் இருந்த குழப்பங்கள் ரசிகர்களைக் கவரவில்லை.

மதராஸி: ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான இப்படம், ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலவீனமான எழுத்து காரணமாக இப்படம் வரவேற்பை பெறவில்லை.

எதிர்பார்ப்பின்றி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'சர்ப்ரைஸ் ஹிட்ஸ்'

டூரிஸ்ட் ஃபேமிலி: 2025-ன் மிகப் பெரிய ஆச்சரியம் சசிகுமார் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம். ஈழத் தமிழர் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் நகைச்சுவை கலந்த இந்த உணர்வுபூர்வ படம், பெரும் வரவேற்பை பெற்றது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் ரூ.90 கோடிக்கு மேல் வசூலித்து மிகப் பெரிய வெற்றி பெற்றது.

குடும்பஸ்தன்: மணிகண்டன் நடிப்பில் வெளியான இப்படம், நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் வலிகளை நகைச்சுவையுடன் பேசியது. பெரிய நடிகர்கள் யாருமின்றி மிக எளிய கதைக்களத்துடன் மிகப் பெரிய வெற்றியை இப்படம் சாத்தியமாக்கியது.

டிராகன் & ட்யூட்: ‘லவ் டுடே’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்த இரண்டு படங்களும் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படங்கள் தலா ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தன.

பைசன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த இப்படம், அதன் ஆழமான அரசியல் மற்றும் விளையாட்டு பின்னணிக்காகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. துருவ் விக்ரமுக்கு மிகச்சிறந்த பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.

இந்த ஆண்டில் ரஜினிகாந்தின் 'கூலி', அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படங்கள் அதிக வசூலை ஈட்டினாலும், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டன. ஒட்டுமொத்தமாக, 2025-ம் ஆண்டு ‘ஸ்டார் பவர்’ மட்டுமே ஒரு படத்தைக் காப்பாற்றாது, பலமான திரைக்கதை இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதைத் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது.

தமிழ் சினிமா 2025-ல்  ஏமாற்றங்களும் ஆச்சர்யங்களும்! - ஒரு விரைவுப் பார்வை
தமிழ் சினிமா 2025 - வியத்தகு படைப்புகள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in