நம்பிக்கை நட்சத்திரங்கள் | தமிழ் சினிமா 2025

பூர்ணிமா ரவி, ரூபா கொடுவாயூர், மமிதா பைஜூ, ருக்மிணி வசந்த், சத்யதேவி, கயாடு

பூர்ணிமா ரவி, ரூபா கொடுவாயூர், மமிதா பைஜூ, ருக்மிணி வசந்த், சத்யதேவி, கயாடு

Updated on
4 min read

புதிய திறமைகளைத் தழுவிக்கொள்ளத் தமிழ் சினிமா எப்போதும் தவறிய தில்லை. கடந்த ஆண்டு அறுபதுக்கும் அதிகமான புதியவர்கள் திரை நடிப்பில் கால் பதித்தனர். அவர்களில் பலர் வெறும் புதுமுகங்களாக மட்டும் கடந்துபோய் விடவில்லை.

கதையின் மையத்தையும் அதன் போக்கையும் புரிந்துகொண்டு, தாம் ஏற்ற கதாபாத்திரம் தனித்தும் பிற கதாபாத்திரங்களுடன் இணைந்தும் நடிக்கவேண்டிய காட்சிகளில் உணர்ச்சிகளை நுணுக்கமாக வெளிப்படுத்தினர்.

ஒரு சிலருக்கு, ‘டெம்பிளேட்’ நாயகன், நாயகியாகத் திறமையைக் காட்டவேண்டிய நிலை. அதிலும் இயல்பு, ஈடுபாடு மிகுந்த நடிப்பை வெளிப்படுத்தி தங்களின் தனித்த வசீகரத்தாலும் ரசிகர்களின் அபிமானத் தைப் பெற்றனர். சிலர் ஏற்கெனவே ஒருசில படங்களில் தோன்றிக் கவனம் பெறாமல் போயிருந்த நிலையில், 2025இல் அவர்களே நம்பிக்கை நட்சத்திரங்களாக உணரவைத்தனர். அவர்களையும் இந்தப் பார்வைக்குள் அடக்கியிருக்கிறோம்.

அசத்திய ஐந்து நாயகிகள்: புனே நகரத்தில் பிறந்து வளர்ந்த, வணிகவியல் பட்டதாரியான கயாடு லோகர், மாடலிங் வழியாக 2021இல் கன்னட சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்திருந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தில் ‘பல்லவி’யாக தோன்றினார்.

இதே படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஏற்றிருந்த ‘கீர்த்தி’ என்கிற கதாபாத்திரம் இவருக்கு முதலில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கயாடுவே ‘பல்லவி’ கதா பாத்திரத்தைத் தனக்குத் தரும்படி கேட்டுவாங்கி நடித்து, தமிழ் ரசிகர் களின் மனதைத் தொட்டுவிட்டார்.

கேரளத்தின் கோட்டயத்தில் டாக்டர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மமிதா பைஜூ, இளங்கலைப் படிப்பை முடிக்காமலே சினிமாவில் நுழைந்தவர். தமிழில் மொழிமாற்றுப் படமாக வெளியான ‘பிரேமலு’ மலையாளப் படத்தின் வழி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்னர் நேரடித் தமிழ்ப் படமான ‘ரெபல்’ இவருக்கு உரிய தமிழ் அறிமுகமாக அமைய வில்லை.

அந்தக் குறையைப் போக்கியது ‘ட்யூட்’. அதில், ஒரு அரசியல் வாதியின் மகளாக ‘குறள்’ என்கிற கதாபாத்திரத்தில், நேர்மையான, வெளிப்படையான குணம் கொண்ட பெண்ணாக அசத்தியிருந்தார். படத் தில் இடம்பெற்ற திருமண வரவேற்புக் காட்சியில் ‘கருத்த மச்சான்’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் வைரல் ஆனது.

‘சப்த சாகரதாச்சே எல்லோ' கன்னடப்படத்தின் வழியாகத் தமிழ் ரசிகர்களை வந்தடைந்தவர் ருக்மிணி வசந்த். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை கர்னல் வசந்த் வேணு கோபால், 2007இல் ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் ராணுவ நடவடிக்கையில் வீரமரணம் அடைந்தவர்.

அப்பாவை ருக்மிணி இழந்தபோது அவருக்கு 10 வயது. “இப்போது என்னுடைய வளர்ச்சியைப் பார்த்தால் அப்பா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்” என்று கூறி யிருக்கும் ருக்மிணி, 800 கோடியைத் தாண்டி வசூல் செய்த ‘காந்தாரா அத்தியாயம் 1’ படத்தில் கனகவதி என்கிற இளவரசியாக, வசீகரமும் வன்மமும் நிறைந்த எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in