Omar – காதலுக்கு எதிரான சுவர் | சினிமாவும் அரசியலும் 7

Omar – காதலுக்கு எதிரான சுவர் | சினிமாவும் அரசியலும் 7
Updated on
4 min read

பாலஸ்தீனத்துக்காக நான் எழுதிய 37 கவிதைகள் அடங்கிய ‘காத்திருக்கும் சாவிகள்’ நூல் வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்பில் ‘பிரிவினைச் சுவர்கள்’ என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

‘பாலஸ்தீனர்களின் நிலத்தை

ஆக்கிரமித்துக் கொண்டவர்கள்

பாலஸ்தீனர்களின் வீட்டை

அபகரித்துக் கொண்டவர்கள்

பாதுகாப்புக் காரணங்களைச்

சொல்லிச் சொல்லி

பிரிவினைச் சுவர்களைக்

கட்டி எழுப்பியிருக்கிறார்கள்

ஒரு சுவருக்குப் பின்னால்

வாழ்வதன் வேதனையை

ஒரு சுவருக்குப் பின்னால்

சுவாசிப்பதின் கொடுமையை

நினைத்தால்

இதயம் வலிக்கிறது.’

அந்தக் கவிதையில் நான் எழுதாத ஒரு வேதனையை, வெளிப்படுத்தாத ஒரு வலியை பாலஸ்தீனிய இயக்குநர் அபு ஆசாத் 2013-இல் வெளிவந்த தன்னுடைய ‘ஓமர்’ Omar திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வலி என்னவாக இருக்கும்? அந்த வேதனை எப்படிப்பட்டதாக இருக்கும்? வேறொன்றுமில்லை. ஆக்கிரமிப்பாளர்களின் கொடுங்கரங்களால் காதலுக்கு நடுவில் கட்டி எழுப்பப்பட்ட பிரிவினைச் சுவர்தான். சுவருக்கு இந்தப் பக்கம் காதலன் ஓமர். சுவருக்கு அந்தப் பக்கம் காதலி நாடியா. சுவரின் உயரம் எவ்வளவு தெரியுமா! தோராயமாக 25 அடி. நீளம் எவ்வளவு தெரியுமா! தோராயமாக 700 கிலோ மீட்டர்.

நாடியாவின் கண்கள் சுவருக்கு அந்தப் பக்கம் தேடிக் கொண்டிருக்கும்போது, ஓமரின் இதயம் மட்டும் இந்தப் பக்கம் வெறுமனே துடித்துக் கொண்டிருக்குமா என்ன! அனுமதிக்கப்பட்ட சோதனைச் சாவடியின் வழியாக, காவலுக்கு இருக்கும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களிடம் அனுமதி வாங்கிக் காதலிக்க முடியாது. நம் ஊரில் காதலுக்கு எதிராகக் கட்டப்பட்டிருக்கும் சாதி சங்கங்களையும் மத அமைப்புகளையும் நினைத்துக்கொள்ளுங்கள். பாலஸ்தீனத்தில் சுவர். இந்தியாவில் சாதியும் மதமும் என்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். தலைவர் மாவோ சொல்வார், ‘புரட்சி என்பது இயல்பான வரையறைகள் மீறப்படுவதுதான்’ என்று. காதலும்கூட சாதி, மதம், இனம் என்று அதிகாரத்தின் கரங்களால் எழுதப்பட்டிருக்கும் வரையறைகளை மீறுவதுதான்.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வரையறைகளை மீறுகிறது ஓமர், நாடியா காதல். ராணுவ வீரர்களின் துப்பாக்கிகளால் நிலைநிறுத்தப்பட்ட வரையறைகளை மீறுகிறான் ஓமர். நாடியாவைச் சந்திக்க 25 அடி உயரமுள்ள பிரிவினைச் சுவரில் ஏறி இறங்குகிறான். பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் அந்தக் காட்சியைத்தான், திரைப்படத்தின் முதல் காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குநர். ஏற்கெனவே தொங்கவிடப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்து, சுவற்றின் உச்சிக்குச் செல்கிறான் ஓமர். குறிபார்த்த துப்பாக்கியிலிருந்து வெளிப்படுகிறது குண்டு. நொடிப்பொழுதில் தப்பித்து வேகமாக அந்தப் பக்கம் இறங்கி ஓடுகிறான்.

இந்த இடத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சுவர்தான் இஸ்ரேல் கட்டியது. அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இருப்பதெல்லாம் பாலஸ்தீனர்களின் நிலம்தான். நாடியாவின் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஓமரின் உள்ளங்கைகளில் எல்லாம் ரத்தம். கதவைத் தட்டுகிறான் ஓமர். கதவைத் திறந்து புன்னகையோடு நிற்கிறாள் நாடியா. வலியெல்லாம் நொடிப்பொழுதில் மறந்து ஓமர் முகத்தில் வெளிச்சம் படரத் தொடங்குகிறது.

தோழர்களே! இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்னால், கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இத்தனை வருடங்களாக இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனர்களின் நிலத்தைப் பற்றியும், இஸ்ரேலியர்கள் வலுக்கட்டாயமாகக் குடியேறிய பாலஸ்தீனர்களின் வீட்டைப் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம். இதுவரையிலும் நடந்த ஒவ்வொரு போரிலும் அங்கும் இங்குமாக அகதிகளாகத் துரத்தப்பட்ட பாலஸ்தீனர்களின் இதயத்தின் ஏக்கத்தைக் கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்று என்னைக் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். சமகாலத்தின் அவலங்களைப் பார்ப்பதும், எதிர்வினையாற்றுவதும் நம் கடமையல்லவா!

ஓமர் திரைப்படத்தின் கதை: பாலஸ்தீனத்தின் மேற்குகரைப் பகுதியில் பேக்கரியில் வேலை செய்கிறான் நாயகன் ஓமர். பிரிவினைச் சுவருக்கு அந்தப் பக்கம் அவனுடைய நண்பர்கள் தாரிக் மற்றும் அம்ஜத் இருக்கிறார்கள். தாரிக்கின் தங்கை நாடியாவும் ஓமரும் காதலிக்கிறார்கள். தாரிக்கும் அம்ஜத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தோடு தொடர்பில் இருக்கிறார்கள். ஓமரும் நண்பர்களோடு இருக்கிறான்.

நாடியாவைப் பார்த்துவிட்டு வரும்போது ராணுவத்தினர் பிடித்து ஓமரை விசாரித்து, சித்ரவதை செய்கிறார்கள். தொடர்ந்து மூவரும் சேர்ந்து இஸ்ரேலிய ராணுவ வீரன் ஒருவனைச் சுட்டுக் கொல்கிறார்கள். ஓமர் கைது செய்யப்பட்டு, கடுமையாகச் சித்ரவதை செய்யப்படுகிறான். ஆனாலும் நண்பர்களைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறான். இஸ்ரேலிய ஏஜெண்ட் ராமி ஓமரை உளவாளியாக்க முயற்சிக்கிறான். அதன்படி அவன் கால்களில் உளவு பார்க்கும் கருவி பொருத்தி, வெளியில் அனுப்புகிறான். கொஞ்சம் கொஞ்சமாக ஓமரைச் சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள் எல்லோரும். நாடியா அப்போதைக்கு அவனை நம்புகிறாள்.

Omar – காதலுக்கு எதிரான சுவர் | சினிமாவும் அரசியலும் 7
‘Tere Ishq Mein’ விமர்சனம்: தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி மேஜிக் மீண்டும் நிகழ்ந்ததா?

ராமி சொன்ன வேலையைச் சரியாகச் செய்யாததால் மீண்டும் கைது செய்யப்படுகிறான் ஓமர். மீண்டும் உளவு பார்ப்பதற்காக வற்புறுத்தப்படுகிறான். நாடியாவைப் பற்றிய தகவல்களையெல்லாம் துல்லியமாகச் சொல்கிறார்கள் ராணுவத்தினர். உள்ளுக்குள் சில முடிவுகளோடு ராமியின் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டு வெளியில் வருகிறான். ஓமர் இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு உளவு பார்க்கிறான் என்று எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். நாடியாவின் காதுகளுக்கும் செய்தி வருகிறது. ஓமரிடம் கேட்கிறாள். அவனால் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியவில்லை. அம்ஜத் சில சூழ்ச்சிகள் செய்து நாடியாவைத் திருமணம் செய்ய முயற்சிக்கிறான். அது தெரிந்து ஓமருக்கும் அம்ஜத்திற்கும் சண்டையாகிறது.

பிரச்சினையைத் தீர்க்க வந்த தாரிக் தவறுதலாக அம்ஜத்தால் சுடப்பட்டு இறந்துவிடுகிறான். இஸ்ரேலிய ராணுவத்தினர் தாரிக் உடலைக் கொண்டு செல்கிறார்கள். இஸ்ரேலிய ராணுவத்திற்கு உளவு பார்க்கிறாயா என்கிற நாடியாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறான் ஓமர். நாடியா அவனைவிட்டு விலகிச் செல்கிறாள். நாடியாவிற்கும் அம்ஜத்திற்கும் திருமணம் நடக்கிறது. ஓமரை ரகசியமாகச் சந்திக்க வரும் இஸ்ரேலிய ஏஜெண்ட் ராமி, அவனுக்குத் துப்பாக்கி கொடுக்கிறான். இதுதான் சந்தர்ப்பம் என்று துப்பாக்கியை எப்படி உபயோகிப்பது என்று கேட்டுக்கொண்டே அவனைச் சுட்டுத்தள்ளுவதோடு படம் முடிகிறது.

படம் பார்த்து முடித்த பின்னும் இஸ்ரேலிய ராணுவத்தினரால் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஓமர் கண்களில் தங்கிவிடுகிறான். முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் சமகாலத்தின் முக்கியமான பிரச்சினையைத் திரைமொழியில் மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். காதல் கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், பிற்போக்குத்தனங்கள் நிறைந்த கதைகளாகவும் வந்து கொண்டிருக்கும் காலத்தில், காதலின் வழியாக ஒரு தேசிய இனப் போராட்டத்தின் கதையையும் சொல்லலாம் என்பதற்கு ஓமர் திரைப்படம் மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும்.

படத்தின் சில காட்சிகளையாவது உங்களிடம் சொல்லாமல் இருக்க முடியாது. இஸ்ரேலிய ராணுவத்தினர் துரத்தும்போது, சந்து பொந்துகளின் வழியாக வீடுகளுக்குள் புகுந்து தப்பித்து ஓடிக்கொண்டிருப்பான் ஓமர். வீடுகளில் இருக்கும் பெண்கள் எந்தப் பதட்டமுமில்லாமல் இன்னொரு பக்கம் கதவைத் திறந்து தப்பிக்க வழிசெய்வார்கள். அந்தப் பதட்டமில்லாத மனநிலை அவர்கள் இதற்குப் பழக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்டக்கூடியது.

இன்னொரு காட்சியில் இஸ்ரேலியச் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் நாடியாவைப் பார்க்க வருவான் ஓமர். சின்ன பிரிவிற்குப் பிறகு சந்திக்கும் நாடியா சொல்வாள், “நீ கைது செய்யப்பட்டதிலிருந்து எனக்குத் தூக்கமே வரவில்லை, கிட்டத்தட்ட ஒரு கவிஞனைப் போல மாறிவிட்டேன். உனக்காக நிறைய எழுதினேன். துப்பாக்கிச் சுடுவதற்குக் கற்றுக்கொண்டு உன்னைச் சிறையிலிருந்து மீட்டு வருவதாகக் கனவுகள் கண்டேன்” என்று சொல்லுமிடம் இதயத்தை நெகிழச் செய்யக்கூடியது. இறுதியாக நாடியா அவனிடமிருந்து விலகிச் சென்ற பிறகு அவளைப் பார்ப்பதற்காகச் சுவரில் ஏறுவான், வழுக்கி விழுவான். மீண்டும் முயற்சிப்பான் முடியாது. அந்த வழியாக வரும் வயோதிகர் உதவி செய்வார் தடுமாறி, தட்டுத்தடுமாறி மெதுவாக ஏறுவான்.

இஸ்ரேல் ஆக்கிரமித்தது போக மிச்சமிருப்பது கொஞ்சம்தான் பாலஸ்தீனத்தில். ஆனால், அங்கிருந்து வெளிவரும் கவிதைகளுக்கோ இசைக்கோ ஓவியங்களுக்கோ திரைப்படங்களுக்கோ எந்தப் பஞ்சமும் இதுவரையிலும் எப்போதும் இருந்ததில்லை. ஏன் அந்த நிலத்தில் மட்டும் கலை ஊற்றுப் பொங்கிப் பிரவாகமெடுத்துக் கொண்டிருக்கிறது தெரியுமா! அந்த நிலம் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறது.

அந்த நிலத்தின் மக்கள் தங்கள் மீது செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அடக்குமுறையை அடிபணியாமல் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். அடங்கிப் போகிறவனிடமிருந்து அற்புதங்கள் வெளிப்படாது. அடக்குமுறையை எதிர்த்து நிற்பவனிடம் மட்டுமே அற்புதங்களும் ஆச்சரியங்களும் வெளிப்படும். கலையின் வேலை தூண்டுவது, தூண்டப்பட்டவர்களின் வேலை பிரிவினைச் சுவரோ, தீண்டாமைச் சுவரோ மானுடத்திற்கு விரோதமான எந்தச் சுவரையும் தகர்த்து எறிவதுதான்!

- கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Omar – காதலுக்கு எதிரான சுவர் | சினிமாவும் அரசியலும் 7
Ballot – வாக்குத் திருட்டுக்கு எதிரானவள் | சினிமாவும் அரசியலும் 6

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in