

ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் தனுஷ் இந்தியில் கால் பதித்தார். அதுவரை இந்தி சினிமா ஹீரோவுக்கென வகுக்கப்பட்டிருந்த இலக்கணத்தை எல்லாம் அப்படம் உடைத்தது. அப்படமும், பாடல்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் பிறகு அதே கூட்டணி, ‘அத் ரங்கி ரே’ என்ற படத்தின் மூலம் ஓடிடி வழியே மீண்டும் தடம் பதிக்க முயன்றது. எனினும் ‘ராஞ்சனா’ ஏற்படுத்திய மேஜிக் அதில் மீண்டும் நிகழவில்லை. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி ‘தேரே இஷ்க் மெய்ன்’ மூலம் அதை மீண்டும் நிகழ்த்தி காட்டியதா?
இந்திய விமானப் படையில் விமானியாக பணிபுரிகிறார் ஷங்கர் (தனுஷ்). அவரது கட்டுப்படுத்த முடியாத கோபம் காரணமாக அவரது பணியிடத்தில் சிக்கல் எழுகிறது. அவருக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக, உளவியலாளர் டாக்டர் முக்தி (கிருத்தி சனோன்) நியமிக்கப்படுகிறார்.
கர்ப்பிணியாக இருக்கும் முக்திக்கும், ஷங்கருக்கும் இடையிலான ஃப்ளாஷ்பேக் விரிகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் டெல்லியில் உள்ல ஒரு கல்லூரியில் சட்டம் பயிலும் மாணவராக இருக்கிறார். அப்போதும் கோபமும் ஆக்ரோஷமும் கொண்டிருக்கும் அவரை, பிஹெச்டி மாணவி முக்தி, வன்முறை குறித்த தனது ஆய்வுக்கான சப்ஜெக்ட் ஆக தேர்வு செய்கிறார். தன் மீது காதல் வயப்படும் ஷங்கரை, வெறும் ‘கேஸ் ஸ்டடி’ ஆக மட்டுமே பார்க்கிறார் முக்தி. இருவருடைய காதலும் என்ன ஆனது, ஷங்கர் விமானப் படை அதிகாரியாக மாறியது எப்படி என்பதே படத்தின் திரைக்கதை.
மனித உணர்வுகளை காட்சிப்படுத்துவது ஆனந்த் எல்.ராயின் பலம். அவரது முந்தைய படங்களாக ‘ராஞ்சனா’, ‘தானு வெட்ஸ் மனு’, ரக்ஷா பந்தன்’, ‘அத் ரங்கி ரே’ உள்ளிட்ட படங்களில் இவை மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அது இம்முறையும் சிறப்பாக கைகொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். படத்தின் கீர்த்தி சனோன் - தனுஷ் இடையிலான காட்சிகள்தான் அடிநாதம் என்ற அடிப்படையில் இவற்றை கூடுமானவரையில் உணர்வுபூர்வமாக கொடுத்த ஆடியன்ஸ் மனதை தொட முயற்சித்திருக்கிறார் ஆனந்த்.
நாயகி, நாயகனை நோயாளியாக அணுகுவதும், அதே நேரம் இவர் அவரை காதலியாக பார்க்கும் ஐடியா ஏற்கெனவே பல படங்களில் பார்த்திருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதம் புதிது. அதேபோல நாயகியின் தந்தையிடம் ஹீரோவின் தந்தையாக வரும் பிரகாஷ்ராஜ் மன்றாடும் காட்சி நெஞ்சை தொடுகிறது.
எனினும் படத்தின் முதல் பாதி, ஹீரோவின் ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற ஆல்ஃபா மேல் மனநிலையை நியாயப்படுத்த முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்தப் படங்கள் பாலிவுட்டில் செய்த வசூல் சாதனையே இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை தனுஷ் தேர்வு செய்திருக்கிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ‘அன்பின் வெளிப்பாடுதான் கோபம்’ என்ற சப்பைக்கட்டையும் ஏற்கமுடியவில்லை. ‘ராஞ்சனா’ படத்தின்போதே ‘ஸ்டாக்கிங்’ தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
முதல் பாதியில் இதுபோன்ற குறைகள் இருந்தாலும் சலிப்பை ஏற்படுத்தும்படி இல்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக இரண்டாம் பாதி திரைக்கதையின் தொய்வு பார்வையாளர்களை சோர்வடையச் செய்து விடுகிறது. படத்தின் நீளம் இன்னொரு மைனஸ். பல காட்சிகளும் ‘ராஞ்சனா’வின் நீட்சியாகவே தெரிகின்றன. அதே டெம்ப்ளேட்டை கொண்டு காட்சிகளை வெறும் உணர்வுகளை கொண்டு நிரப்ப முயன்றிருப்பது உதவவில்லை.
ஃப்ளாஷ்பேக்கில் கோபக்கார இளைஞனாகவும், நிகழ்காலத்தில் அதே கோபம், ஆனால் வயதுக்கே உரிய அமைதியுடன் கூடிய நடுத்தர வயதுக்காரராகவும் தனுஷ் மிளிர்கிறார். எமொஷனல் காட்சிகளில் வழக்கம்போல நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தி திரையை தன்வயப்படுத்துகிறார்.
தனுஷுக்கு ஈடுகொடுத்து சிறப்பான நடிப்பை நல்கி இருக்கிறார் கிருத்தி சனோன். நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்தை பொறுப்புடன் நடித்து அப்ளாஸ் பெறுகிறார். தனுஷின் தந்தையாக வரும் பிரகாஷ்ராஜின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம். வர்க்கப் பாகுபாடு காரணமாக அவமானப்படுத்தும் காட்சியில் அவர் காட்டும் இயலாமை கலங்க வைக்கிறது.
ஆனந்த் எல்.ராயின் முந்தைய படங்களைப் போலவே இதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் செவ்வனே தனது பணியை செய்திருக்கிறார். படத்தின் விறுவிறுப்பு குறையும் பல இடங்களை ரஹ்மான் தனது நேர்த்தியான பின்னணி இசையால் தாங்கிப் பிடிக்கிறார். ‘தேரே இஷ்க் மெய்ன்’, ‘உஸே கெஹ்னா’ பாடல்கள் மனதில் நிற்கின்றன.
எமோஷனல் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதை சுவாரஸ்யத்திலும் கொடுத்திருந்தாலும், ‘ராஞ்சனா’வில் நிகழ்ந்த அந்த மேஜிக், இதில் மீண்டும் நிகழ்ந்திருக்கும். நல்ல நடிப்பு, நேர்த்தியான தொழில்நுட்ப அம்சங்கள் அமைந்தும் திரைக்கதை சொதப்பலால், இன்னொரு ‘அத்ரங்கி ரே’வாக மாறிவிட்டது இந்த ‘தேரே இஷ்க் மெய்ன்’.