

‘வாக்காளப் பெருமக்களே’ என்றழைத்தபடி ஒவ்வொரு தேர்தலின் போதும் நேரிலும், தொலைக்காட்சி வழியாகவும், சமூக ஊடகங்களின் வாயிலாகவும், இன்னும் என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ எல்லா வழிகளிலும் மக்களைத் தேடி ஓடிவருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
அவர்களின் சொற்களில் எந்த மாற்றமுமில்லை. வளர்ச்சி, முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு, ஒளிமயமான எதிர்காலம், நல்ல சாலைகள், தூய்மையான குடிநீர், சிறந்த மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, எல்லாருக்கும் வீடு, எல்லாருக்கும் உணவு, வளமான எதிர்காலம் என்றெல்லாம் சொல்லியபடி, எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டுக்கோண்டே போவார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதில் எதுவும் புதிதல்ல. கடந்த தேர்தலில் சொன்னதுதான். அப்படியென்றால், இப்போது உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்து வரவேண்டும். ஏற்கெனவே எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், அதே வாக்குறுதிகளைச் சொல்லிக்கொண்டு அடுத்த தேர்தலுக்கும் வருகிறார்கள் என்றால், இந்த அரசியல்வாதிகள் இந்த மக்களை எந்தளவிற்கு முட்டாள்கள் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.
வாக்குறுதிகள் போதாதென்று கூடுதல் பாதுகாப்பிற்காக வாக்குத் திருட்டிலும் ஈடுபடுகிறார்கள் அரசியல்வாதிகள். தேர்தல் காலத்தில் வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டுகள் போடுவது, வாக்குப் பதிவின் போது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது என மக்களால் மக்களுக்காக ஆட்சி நடக்கும் ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட அழகிய காட்சிகளுக்கு ஒருபோதும் பஞ்சமே இருந்தது கிடையாது.
இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சியைப் பார்த்து வாக்குத்திருட்டுக் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருப்பது உங்களுக்கு ஞாபகம் வரலாம். ஆனால், நான் இப்போது சொல்லிக் கொண்டிருப்பது பிலிப்பைன்ஸ் நாட்டைப் பற்றி. ஆம், தேர்தலின்போது எல்லாரும் வாக்குத் திருட்டைச் சாதாரண ஒன்றாகக் கடந்து சென்று கொண்டிருக்கையில், வன்முறையாளர்களிடமிருந்து வாக்குச்சீட்டைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய, ஒரு பள்ளி ஆசிரியையின் கதையாகிய ’பேலட்’ என்கிற திரைப்படத்தைப் பற்றித்தான்.
கதைச் சுருக்கம்:
2007ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அர்ப்பணிப்பு நிறைந்த அரசுப் பள்ளி ஆசிரியையாக இருக்கும் எம்மியின் நகரத்தில் மேயர் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மேயராக இருக்கும் ஹிடல்ஹோ என்கிற பெண்மணியை எம்மி வெறுக்கிறாள்.
குற்றப் பின்னணி கொண்டவள், பல்வேறு தொழில்களைச் செய்கிறவளாக இருந்தாலும், தன்னுடைய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களைச் சுரண்டிக் கொழுக்கிறவள். அதிகாரத்தை, பணத்தைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெறத் துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளை எதிர்த்து மாற்றத்தை முன்னிறுத்தி, பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் எட்ரலின்.
எம்மி ஆசிரியையாக இருக்கும் பள்ளி வாக்குச்சாவடியாக மாறுகிறது. எம்மியும் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறாள். நகரத்திற்கு வெளியே கொலை உள்ளிட்ட வன்முறைகள் நடந்தாலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப்பெட்டியை எடுத்துச்செல்ல வண்டி வருகிறது. வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்ல எம்மி சம்மதிக்கிறாள். நன்றாகப் பூட்டப்பட்ட வாக்குப்பெட்டி எம்மியின் கைகளில் சங்கிலியால் இணைக்கப்படுகிறது. அவளுக்கு உதவியாக உடன் வேலைசெய்யும் ஆசிரியரும் செல்கிறார்.
ஊருக்கு வெளியே சென்றதும் வண்டியை நிறுத்திவிட்டு வாக்குப்பெட்டியை விலைபேசுகிறான் வந்தவன். அதுமட்டுமல்லாமல் எம்மியுடன் வந்தவனையும் சுட்டுக் கொல்கிறான். மேயர் ஹிடல்ஹோவின் வேலையென்பதை புரிந்துகொண்ட எம்மி வாக்குப்பெட்டியால் அவனைத் தாக்கிவிட்டு காட்டிற்குள் புகுந்துவிடுகிறாள்.
மணிக்கட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வாக்குப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு அடர்ந்த காட்டிற்குள், மேட்டிலும் பள்ளத்திலும் நடந்து செல்கிறாள். மேயரின் ஆள்கள் ஒருபக்கம், காவல் துறையினர் ஒருபக்கம் அவளைத் தேடிக்கொண்டிருக்க, மரக்கிளையில் உட்கார்ந்தும், மணற் பொந்துகளில் ஒளிந்தும் தப்பிக்கிறாள்.
இன்னொரு பக்கம் எம்மியின் ஒரே மகனான என்ஸோவைப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து எம்மி எங்கே என்று கேட்டு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் காவலர்கள். காட்டிற்குள் இரெவெல்லாம் பதுங்கியிருந்த எம்மி வேறுவழியில்லாமல், மேயர் பதவிக்குப் போட்டியிடும் எட்ரலின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். காவலர்கள் எவ்வளவு கேட்டும், கொலைமிரட்டல் விடுத்தும் அம்மா இருக்கும் இடத்தைச் சொல்லாமல் இருக்கிறான் என்ஸோ.
காட்டிற்குள் இருக்கும் எம்மியைக் கண்டறிந்து, வாக்குப்பெட்டியைப் பறித்துச் செல்ல வருகிறான் மேயரின் ஆளொருவன். வாக்குப்பெட்டியால் அவனை அடித்து வீழ்த்தி முன்னேறுகிறாள் எம்மி. சக காவலரைக் கொன்று என்ஸோவைக் காப்பாற்றுகிறார், எம்மியின் முன்னால் மாணவரான காவல் அதிகாரி. என்ஸோவும் காவல் அதிகாரியும் சேர்ந்து எம்மியை மீட்க முயற்சிக்கிறார்கள்.
நடந்து விழுந்து எழுந்து ஒருவழியாக எட்ரலின் வீட்டை வந்தடைகிறாள் எம்மி. அவள் நினைத்தது போலல்ல, அவனும் அரசியல்வாதியாகத்தான் இருக்கிறான். அவளிடமிருக்கும் வாக்குப்பெட்டியை அபகரிக்கத் திட்டமிடுகிறான். என்ஸோவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, கொஞ்சநேரம் தாக்குப் பிடிக்கிறான் எட்ரலின் வீட்டில்.
குறுஞ்செய்தி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி எம்மி எட்ரலின் வீட்டில் சிறைவைக்கப்பட்டிருப்பதாகப் பெருஞ் செய்தியாகிறது. என்ஸோவும் காவல் அதிகாரியும் தொழிற்சங்கத் தலைவரிடம் உதவி கேட்கிறார்கள். மொத்தத் தோழர்களையும் திரட்டிக்கொண்டு எம்மியை மீட்க எட்ரலின் வீட்டை முற்றுகையிடுகிறார்கள் தொழிலாளர்களும் பொதுமக்களும். மக்களின் முற்றுகைக்கு முன்னால் என்ன செய்ய முடியும்? எம்மி வருகிறாள். மகனும் மக்களும் கொண்டாடுகிறார்கள்.
ஆறு வருடங்கள் கடந்தோடுகின்றன. பிலிப்பைன்ஸில் அடுத்த தேர்தல் நடக்கிறது. எம்மி இப்போது தலைமை ஆசிரியையாக இருக்கிறாள். அதே வாக்குறுதிகள், அதே வார்த்தைகள், அதே கூப்பாடுகள் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கடுங் கோபத்தில் இதற்கு முடிவேயில்லையா என்று சொல்லி அசிங்கமாகத் திட்டுகிறாள் அரசியல்வாதிகளை. அவ்வளவுதான் திரைப்படம்!
இதுவரையிலும் பார்த்த, இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிற, இனிமேலும் பார்க்கப்போகிற வாக்குச்சாவடிக் களேபரங்களின் காட்சிகள் இதயத்தில் இருந்து எழுந்து வருகின்றன. எம்மியாக நடித்திருக்கும் மரியன் ரிவேரா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு சிறந்த நடிகரால் காகிதத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்க முடியும் என்று நீங்கள் நம்பினால், எம்மியும் சிறந்த நடிகைதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மரியன் ரிவேராவைப்பற்றி இயக்குநர் கிப் சொல்வதைக் பாருங்கள்.
”2007இல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டி சுமார் ஆறு கிலோ எடைகொண்ட இரும்புப் பெட்டி. அதற்குப் பதிலாக ரப்பரில் செய்யப்பட்ட பெட்டியைப் பயன்படுத்தலாம் என்று கேட்க, மறுத்துவிட்டார் மரியன் ரிவேரா. ஆறு கிலோ எடைகொண்ட அந்த இரும்புப் பெட்டியை மணிக்கட்டில் கட்டிக்கொண்டு நடந்தார், ஓடினார், சண்டை செய்தார். படப்பிடிப்பு முடியும்போது வீங்கிப் புண்ணாகிப் போயிருந்த அந்த மணிக்கட்டின் காயம்தான் மரியன் ரிவேரா மிகச்சிறந்த அர்ப்பணிப்பு நிறைந்த நடிகை என்பதற்குகான சாட்சியாகும்.”
தேர்தல் என்கிற பெயரில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும் ஜனநாயக கேலிக்கூத்தைப் பற்றி உண்மையாகவும், தைரியமாகவும் திரைப்படம் எடுத்ததற்காகவே இயக்குநர் கிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரைக்கலையை வெறும் பணம் சம்பாதிக்கும் துறையாக மட்டும் பார்க்காமல், சமூக அவலங்களைச் சொல்லவும், சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்தவும் இப்படிப்பட்ட இயக்குநர்கள் உலகமெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதுதான், என்பது மட்டும்தான் வன்முறை நிறைந்த, ஆபாசம் நிறைந்த நிறைந்த திரைப்படங்களுக்கு மத்தியில் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது.
கலைஞர்களே! தேர்தலுக்கு மட்டும் உயிர்த்தெழுந்து வரும் அரசியல்வாதிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கலைஞர்களே! லாபத்தை விழுங்குவதற்காக மட்டுமே வயிறு வளர்த்து வைத்திருக்கும் முதலாளிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நம்புங்கள், நம்பத் தொடங்கும்போதுதான் விதை வெளிப்படுகிறது. நம்பத் தொடங்கும்போதுதான் வாழ்க்கை வண்ணங்களால் நிறைகிறது. நீங்களும் உங்கள் கலைப்படைப்பும் உச்சத்தில் இருக்க வாழ்த்துகிறேன்!
- கட்டுரையாளர் ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர். தொடர்புக்கு: writer.josephraja@gmail.com