காதல் ரீசெட் ரிபீட்: திரைப் பார்வை - நினைவின் சுழற்சியில் சிக்கும் காதல்!

காதல் ரீசெட் ரிபீட்: திரைப் பார்வை - நினைவின் சுழற்சியில் சிக்கும் காதல்!
Updated on
3 min read

சிலருக்குக் காலம் ஒரு நேர்க்கோடு அல்ல, அது ஒரு வட்டம். சொல்லப்படாத காதலொன்றின் ஏக்கங்களையும் அதன்பொருட்டு அது பிரதிபலன் எதிர்பாராமல் கண்ணை இமை காப்பதுபோல் பொத்திப் பாதுகாப்பதையும் வாழ்வின் தவமெனக் கொள்ளும் ஒருவனை உணர்வதற்கு, அவளின் நின்றுபோன நினைவுச் சக்கரம் மீண்டும் சுழன்றால் எப்படி இருக்கும்?

அந்தச் சுவாரசியமான அம்னீசியா ‘கான்செப்டை’ மையமாக வைத்து ஒரு மென்மையான  முக்கோணக் காதல் கதையை ‘ரீசெட்’ செய்ய முயன்றுள்ள இயக்குநர் விஜய். இந்தக் காதல் விளையாட்டை இசையும் உணர்வும் கலந்து ஆடும் அவரின் முயற்சி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கியிருக்கும் ‘காதல்.. ரீசெட்.. ரீபிட்’ படத்தில் செல்லுபடியானதா? வாருங்கள் காண்போம்!

சித்தார்த்தின் (மதும்கேஷ்) காதல் என்பது அலாதியானது. 14 வயதில் அதிதி (ஜியா சங்கர்) சிறுமியாக இருக்கும்போது அவளது இசையார்வம் கண்டு அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். பள்ளியின் இசைப் போட்டியில் பங்குபெற அவளுக்குத் தெரியாமலே ஒரு ட்யூனை அவளது நோட்டில் இசைக் குறிப்புகளாக எழுதி வைக்கிறான் (இந்த ட்யூன் வேறொரு பொருத்தமான இடத்தில் மீண்டும் வரும்போது நாம் 80களின் மியூசிக்கல் மெலோடிராமா வகைத் தமிழ் சினிமா ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று எண்ண வைக்கிறார் இயக்குநர் விஜய்).

ஆனால், அவளிடம் காதலைச் சொல்ல அவன் விரும்பவில்லை. காலங்கள் ஒடிக் கரைந்தாலும் சித்தார்த்தின் ஒருதலைக் காதல் கரைவதில்லை. "அம்மா உனக்காக இருக்கிற மாதிரி.. நீ அவங்களுக்காக இருக்கணும்.. எப்பவும் அவங்களுக்கு நல்லதே நடக்கணும்ன்னு நினைக்கணும்" என்கிற தன் தாயின் அறிவுரையை வேதவாக்காகக் கொள்கிறான்.

இப்போது வளர்ந்த அதிதி, ஹரி என்கிற மியூசிக் பேண்ட் இளைஞனைக் காதலிக்கிறாள். எதிர்பாராத சூழ்நிலையில் ஸ்காட்லாந்து வரும் அவள் ஒரு விபத்தில் சிக்கி ‘'அன்டெரோகிரேட் அம்னீஷியா' (Anterograde Amnesia) என்கிற மறதி நோய்க்கு ஆளாகிறாள். விளைவாக அவளது ஒவ்வொரு நாளையும் ஒரு வெற்றுப் பக்கமாக மாற்றுகிறது. அவளுக்கு நேற்றைய நினைவுகள் இல்லை. அவளை நிழலாக தொடர்ந்து காக்கும் சித்தார்த்துக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய போராட்டம்.  அதன் முடிவில் அதிதி - ஹரி - சித்தார்த் மூவருக்கும் என்னவானது என்பது படம்.

சரியாக 22 ஆண்டுகளுக்கு முன் ஆடம் சேண்ட்லர் - ட்ரு பேர்ரி மூர் நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியான படம் ‘50 ஃபர்ஸ்ட் டேட்ஸ்’. இந்தப் படத்தின் தாக்கத்தில்  2012-இல் வெளியான மற்றொரு ஹாலிவுட் படம் ‘தி வாவ்’. இந்த இரண்டு படங்களுக்கும் ஓரிஜினல் தாத்தா 2004இல் வெளியான தென்கொரியப் படமான ‘ எ மோமென்ட் டூ ரிமம்பர்’ (A Moment to Remember). ஆக மொத்தம் இந்தப் படத்தின் கதாசிரியர்கள் என்று போடப்படும் மகாதேவ் - விஜய் இருவரும் தங்கள் மனசாட்சியை மறந்துவிட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்தப் படங்களின் பாதிப்பில் உருவான படம் என்று ஒரு வரி குறிப்பிட மனமில்லை. சரி விமர்சனத்துக்கு வருவோம்.

இசையை மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன் பிணைத்த விதத்தில் இயக்குநரைப் பாராட்டலாம். ‘உன் பார்வை..’ என்கிற பாடலை அப்படியே ராஜாவின் ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலின் (விஜயகாந்த் நடித்த ஆட்டோ ராஜா படத்துக்காக ராஜா போட்ட ட்யூன்! ராஜா அந்த ட்யூனை எங்கிருந்து உருவினார் என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள்.

பிறகு அதற்குத் தனி ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டியிருக்கும்) அப்பட்டமான காப்பியாக இசைத்து வைத்திருக்கிறார் ஹாரீஸ் ஜெயராஜ். இவ்வளவு பெரிய இடைவேளை எடுத்துக்கொண்டு இசையமைக்க வந்தவர் இவ்வளவு பழைய ட்யூன்களோடு வந்தது கொடுமை. என்றாலும் இசை கேட்கும்படியாக இருப்பதால் அவரை மன்னிப்போம்.

அதிதியின் குரலையும் அவளையும் காதலித்த ஹரி ஆடிசனுக்கு முன் அடிக்கும் திடீர் ட்விஸ்ட், அதிதி ஸ்காட்லாந்து செல்லும் அதே பிளைட்டில் சித்தார்த் எப்படி டிக்கெட் வாங்கினான் என்கிற 8வது உலக அதிசயம், பெண் மாபெரும் பெண்ணியவாதியாக இருந்தாலும் நகைகளைக் கழற்றி இறைஞ்சி இசைக்கும் தெருப் பாடகனின் தட்டில் போட்டுவிட்டுப் போவாள் என்கிற பொருந்தா ஃபாண்டஸி, அதிதி மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி விபத்துகளைச் சந்திப்பது,  தலையில் அடிபட்டு அம்னீசியாவுக்கு காரணமான இடத்திலேயே மீண்டும் அடிபட்டால் சரியாகிவிடும் என்கிற கற்காலத்தின் சிரங்கு சொறி லாஜிக் என படத்தின் உலக மகா ஓட்டைகளையெல்லாம் நம்மை மறக்கடிக்கும்படி செய்துவிடுகிறார்கள் மூன்று முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும்.

குறிப்பாக அதிதியாக வரும் ஜியா சங்கரிடம் தமன்னாவின் சாயல். நடிப்பும் நன்றாகவே இருந்தது. மற்ற இரண்டு ஹீரோக்களில் மதும்கேஷ் சித்தார்த் கதாபாத்திரத்தின் தொடர்ச்சியை உணர்ந்து நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அதுவே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போதுமானதாகவும் இருப்பதால் அவர் பார்டர் மதிப்பெண்ணில் பாஸாகிவிடுகிறார். ஹரியாக வரும் அர்ஜுன் அசோகன் அட்டகாசமாக நடித்திருக்கிறார். இடைவெளிகளை நிரப்பிய எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் மனதில் நிற்கிறார்கள்.

படத்தில் நச்சென்று மனதில் நிற்பது, எரிநட்சத்திரமாகத் தன் அம்மாவை வரித்துக்கொள்ளும் அதிதியின் தருணங்கள், சிறுவன் சித்தார்த்தின் கேரக்டர் ஆர்க், அதிதி செய்யும் அந்த வீடியோ பதிவு ஆகியவற்றைக் கூறலாம்.

காதல் என்பது வெறும் நினைவுகளின் தொகுப்பா? அல்லது ஆன்மாவின் ஆழத்தில் வேரூன்றிய ஓர் உணர்வா? மனித மூளை தற்காலிக நினைவுகளைச் சேமிக்க மறுக்கும் நிலையில், ஒரு இதயத்தால் எப்படித் தொடர்ந்து காதலிக்க முடிகிறது என்பதை ஒரு நெகிழ்ச்சியான - உணர்வுகளின் மத்தாப்பாகத் திரைக்கதையில் மாற்ற நல்ல களம் அமைந்தும் அதைக் கோட்டைவிட்ட இயக்குநர் விஜய்க்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சொல்வதைத் தவிர வேறு எப்படிச் சொல்வது? நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆழமான ஆயிரம் காதல் கதைகள் இருக்கிறது சார்.. அதை எடுங்க.. ஆடியன்ஸ் உங்கள் படத்துடன் ‘கணெக்ட் ஆவார்கள்!

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

காதல் ரீசெட் ரிபீட்: திரைப் பார்வை - நினைவின் சுழற்சியில் சிக்கும் காதல்!
வடம்: திரைப் பார்வை - மாடுகளின் சீற்றமும், மனிதர்களின் மறைமுக ஆட்டமும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in