

கலாச்சாரப் பின்புலம், கதாபாத்திரங்களின் எதிர்பாராத் தன்மை ஆகியவற்றுடன் கிராமத்துக் கதைகள் சித்தரிக்கும்போது அவை நகரத்து திரை ரசிகர்களையும் கவர்ந்துவிடுகின்றன. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு, சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தாய்க் கிழவி’. கிராமத்தைப் பின்புலமாகக் கொண்ட ‘நேட்டிவிட்டி’ ஹீரோயிசப் படங்கள் என்றாலே அதில் வன்முறைதான் முதன்மை பெறும் என வலிந்து திணிப்பதில் நம்ம ஆள்களை அடித்துகொள்ள முடியாது.
அதேநேரம் அடக்கி வாசிக்கப்பட்ட வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் சக மனிதப் பேரன்பையும் உயிர்மநேயத்தையும் மையப்படுத்தும் கிராமியப் படங்கள் அவற்றின் திரையரங்க தருணங்களுக்காக ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்.
‘வடம்’ படம் சிவகங்கை மண்ணின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான வட மஞ்சு விரட்டின் ஆன்மா சிதையாமல், அதைத் தற்காலக் கிராமிய மனிதர்களின் ஈகோ மோதலோடு பிணைப்பதில் தடம் மாறாமல் பயணித்திருக்கிறதா என்று பார்க்கலாம்.
பொதுவாக, ஜல்லிக்கட்டு என்பது காளையை அடக்கும் வீரமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், 'வடம் மஞ்சு விரட்டு’ என்கிற ஜல்லிக்கட்டுப் பாரம்பரியம் கொண்டுள்ள உலகம் தனித்துவமானது. 20 அடி கயிற்றில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை, தன் எல்லைக்குள் நெருங்கும் எவரையும் சிதறடிக்கும் ஆவேசம் கொண்டது. இந்தப் போட்டியின் விதியே, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் காளையை நெருங்கி அடக்குவதுதான்.
இந்த 'வட்டம்' என்பது வெறும் கயிற்றின் நீளம் மட்டுமல்ல; அது ரத்னவேலு (நட்டி) போன்ற, ஜல்லிக்கட்டில் தாமோ, தன்னுடைய காளையோ ஒருமுறை கூட தோற்பதை ஏற்கமுடியாத வறட்டு கௌரவத்தை வரித்துக் கொண்ட மனிதனின் எல்லையும்கூட. கதையின் நாயகன் வெற்றி (விமல்), தனது ஜல்லிக்கட்டுக் காளையான பாண்டி முனியை ஒரு விலங்காகப் பார்க்காமல், தன்னுடைய ரத்தமும் சதையுமான சகோதரனாகப் பார்க்கிறான்.
இங்கேதான் மோதலே தொடங்குகிறது. ரத்னவேலுவின் 'தோற்கவே கூடாது' என்கிற அகங்காரத்திற்கும், வெற்றி தன்னுடைய காளையுடனான பாசத்துக்கும் இடையிலான இந்தப் போர், வெறும் மோதல் அல்ல; அது கிராமியக் கலாச்சாரத்தில் வேரோடிக் கிடக்கும் ஜல்லிக்கட்டுக் காளை உரிமையாளர் என்கிற அந்தஸ்து தரும் போதையில் மூழ்கிக் கிடக்கும் ஒருவன் உருவாக்கும் தன்முனைப்பு மிகுந்த மோதல்.
ஒரு கட்டத்தில் ரத்னவேலுவின் கௌரவம் காயப்படும்போது, அவர் விரிக்கின்ற சிலந்தி வலைப் பின்னலில் தம்மை அறியாமலே பல முக்கியக் கதாபாத்திரங்கள் சிக்குகின்றன. ரத்னவேலு - வெற்றி மோதலில் உள்ளே வரும் இந்தக் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல; இந்த மோதலின் முடிவு நாயகனையும் வில்லனையும் எந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியது என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் தொடக்கம் முதல் நம்மை ஈர்க்கத் தொடங்குவது கதை நடக்கும் ஊரின் காட்சிகளும் நிலப்பரப்பும். அங்கே வாழும் மனிதர்களின் வீடுகளும் மாடுகளும் சாமானிய, செல்வாக்கு மிகுந்த மனிதர்களும் நம்மை நெருக்கமாக உணர வைக்கிறார்கள். அப்படி உணர வைப்பதில் நடிகர்களின் நடிப்பு மட்டுமல்ல; டி.இமானின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.
நவீன இசைக் கருவிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, கிராமிய இசைக் கருவிகளைக் கொண்டு பெரிய மேஜிக்கைச் செய்திருக்கிறார் இமான். பின்னணி இசையில் ஒலிக்கும் தாரை தப்பட்டைச் சத்தங்கள், உடுக்கை, பம்மையையும் கூட அவர் காட்சிகளில் ஊடாட விட்டிருப்பது கதைக்களத்துக்குள்ளேயே நம்மைக் கூட்டிக்கொண்டு நிறுத்திவிடுகிறது.
அதேபோல், ‘வட மஞ்சு விரட்டு’ என்பது எப்படியிருக்கும் என்பதைக் காட்சிப்படுத்திக் காட்டிய விதத்தில் அதன் ‘ஆத்தண்டிசிட்டி’யைக் கொண்டுவந்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் கேந்திரன்.வி, ஒரு நவீனக் கிராமத்தை அதன் ஊறிய பழமையில் நனைத்துக் கொடுப்பதில் தன்னையொரு நல்ல ‘கிராஃப்ட்’ மேக்கர் எனக் காட்டியிருக்கிறார்.
அதேபோல், பெண் கதாபாத்திரங்களைக் கையாண்ட வகையிலும் இயக்குநரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இயக்குநருக்கு இமான் முதல் பலம் என்றால் அடுத்த இடத்தில். ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார். கதை நிகழும் கிராமத்துக்கே நம்மைக் கூட்டிப் போய்விடுகிறார். சிவகங்கைச் சீமையின் வெயிலின் உக்கிரத்தையும் வறட்சியும் ஈரமும் இரண்டரறக் கலந்த நிலப்பரப்பையும் அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.
வட மஞ்சுவிரட்டு காட்சிகளின் படமாக்கத்திலும் குறை சொல்ல ஏதுமில்லை. விமல் வழக்கமாக, சண்டைக்காட்சிகளில் மாஸ் ஆக்ஷன் நாயகனைப் போலப் பறந்து அடிப்பது, ஒன்ற டன் வெயிட்டை ஓங்கி இறக்குவது மாதிரியான அதீதங்களை விரும்பமாட்டார். தனக்கு எது பொருத்தமாக இருக்குமோ அப்படித்தான் நம்பகமான ஆக்ஷன் காட்சிகளில் தன் திறமையைக் காட்டுவார்.
இந்தமுறை இப்படத்தில் இடம்பெற்றுள்ள அட்டகாசமான இரண்டு சண்டைக் காட்சிகளில் அவர் தன்னுடைய மித வேகத்திலேயே எதிரிகளைப் பந்தாடினாலும், அதில் ஒரு நிதானத்தையும் ஸ்டைலையும் கடைப்பிடித்திருக்கிறார். விமலின் பாணியைப் புரிந்து, அவருக்குப் பொருத்தமான, ஆனால், புதுமையாகச் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஜி.என்.முருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
குறிப்பாக, ஒரு ஜல்லிக்கட்டுக் காளையின் வேகத்தையும் சீற்றத்தையும் விமலின் அடித்துத் தூக்கியெறியும் ஸ்டைலை இடைவேளைச் சண்டை, கிளைமாக்ஸ் சண்டையில் பிரதிபலிக்கும் விதமாக நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்.
நடிப்பில் எப்போதும்போல் வெள்ளந்தியான கிராமத்து இளைஞன் ‘டெம்பிளேட்’டை அப்படியே இதிலும் பிரதிபலித்திருக்கிறார் என்றாலும் அவரை நமக்குப் பிடிக்கும்படி செய்துவிடுவதில் தான் கெட்டிக்காரர் என்பதைக் காட்டிவிடுகிறார். இப்போதைக்குக் கிராமத்துக்குக் கதைக் களங்களுக்குப் பொருத்தமான இரண்டு நடிகர்கள் என்றால் விமலும் சசிகுமாரும்தான்.
கதையை முடிந்தவரை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கும் இயக்குநர், சில 'உப்புச்சப்பில்லாத' துணை வில்லன்களின் வருகை உருவாக்கியிருப்பது, ஆங்காங்கே திரைக்கதையின் தீவிர வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் மாதிரி ஆகிவிடுகிறது.
நாயகனுக்கும் வில்லனுக்குமான பிரதான மோதலே மிக வலுவாக இருக்கும்போது, தேவையற்ற 'பில்ட் அப்' காட்சிகளுக்காக வைக்கப்பட்ட குட்டி வில்லன்கள் படத்தின் ஓட்டத்திற்குத் தடையாக இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்திருந்தால், இந்தக் கட்டுக்கோப்பான திரைக்கதை இன்னும் கூர்மையாக இருந்திருக்கும். நாயகன், நாயகி, முக்கியத் துணைக் கதாபாத்திரங்கள் யாவரும் ஒருவித எதிர்பாராத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நாயகியின் கதாபாத்திரம் வெறும் காதல் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்படாமல், கதையின் திருப்புமுனையாக அமைந்திருப்பது இயக்குநரின் கமர்ஷியல் அணுகுமுறையைத் தாண்டி, கதை கோரும் ஒன்றாக அமைத்திருப்பது சுவாரசியம்.
நாயகியாக நடித்துள்ள ஷான்காஸ்ரீ குறையின்றி நடித்திருக்கிறார். மொத்தத்தில், 'வடம்' - வெறும் மாடுபிடிப் படமல்ல. அது மனிதர்களின் வறட்டு கௌரவம் எப்படி ஒரு தாம்புக் கயிறாக மாறி, அவர்களின் கழுத்தை இறுக்குகிறது என்பதைச் சொல்லும் ஒரு பண்பாட்டுப் பதிவு. மண்ணின் மைந்தர்களுக்கும், மனித உறவுகளின் சிக்கல்களை ரசிப்பவர்களுக்கும் இந்தப் படம் தரமான பொழுதுபோக்கு அனுபவம்.