

‘என் கணவர்’ படத்தில் எஸ்.பாலசந்தர் - எஸ்.நந்தினி
அடிப்படையில் சினிமா காட்சிமொழியின் கலை. என்றாலும் அது கண்களால் மட்டுமல்ல; காதுகளாலும் உணரப்படுவது. ஒரு தட்டையான திரையில் நாம் காணும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளும், அதில் உலவும் கதாபாத்திரங்களும் கதையோட்டத்தின் வெளிப்புறம் என்றால், நம் கண்ணுக்குத் தெரியாத பின்னணி இசை, அதன் உள்புற ரத்த ஓட்டம் எனலாம்.
ஓர் இயக்குநரின் திரைமொழியைப் பொறுத்து, காட்சிகளில், கதாபாத்திர நடிப்பில் வெளிப்படுத்தாமல் விடப் படும் உணர்ச்சிகளை, வார்த்தைகளால் சொல்ல முடியாத மன அதிர்வுகளை, அமைதியான மனக் குரல்களைப் பார்வையாளரின் செவிவழியாக இதயத்துக்குள் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே பின்னணி இசை.
அதாவது, சிறந்த பின்னணி இசை என்பது திரை யில் கதாபாத்திர நடிப்பின் மூலம் காட்டப்படாத உணர்ச்சிகளையும் கதா பாத்திரங்களின் உள்மன ஓட்டங்களை யும் பார்வையாளர்களுக்குக் கடத்திக் கதையோட்டத்தை உணர வைக்கும்.
ஒரு கதாபாத்திரம் வெளியே சிரிக்கலாம்; ஆனால் அது உள்ளே உடைந்து கொண்டிருக்கலாம். காட்சி மொழியில் அதை வெளிப்படுத்த முடியாத புறச்சூழல் நிலவினால், ஒரு மெல்லிய வயலின் ஓசை அந்தக் கதாபாத்திரத் தின் உள்மன வேதனையை நமக்குச் சொல்லிவிடுகிறது.
வழிநெடுகப் பூக்கள் இறைந்து கிடக்கும், சற்று முன் இறுதி ஊர்வலம் சென்ற தடயங்களைக் கொண்ட ஒரு வெறுமையான தெருவைக் காட்டும் ஒரு ஷாட்டில், பின்னணி இசை சேரும்போது அதைக்காணும் கதாபாத்திரத்தின் அச்ச மாகவோ சோகமாகவோ மாற்றிவிடும். அதாவது, காட்சி என்ன சொல்கிறது என்பதைக் காட்டிலும், அதை நாம் எப்படி உணர வேண்டும் என்பதை நிர்ணயிப்பது பின்னணி இசைதான்.
இந்தப் பின்னணியில் நாம் புரிந்து கொண்டால், பின்னணி இசை ஒரு திரைப்படத்தின் அலங்காரம் அல்ல; அது திரைக்கதை ஆசிரியர், இயக்குநருக்கு இணையான ‘மறைமுக’க் கதைசொல்லி எனப் புரிந்துவிடும். இப்படிக் காட்சிகளுக்கு இடையிலான மௌனத்தைப் பேசும் ஒரு நல்ல பின்னணி இசை, பார்வையாளருக்குப் ‘பார்க்க’ மட்டும் அல்ல, ஒரு திரைப் படத்தின் ‘உள்ளே வாழும்’ திரை அனுபவத்தை உணர வைக்கிறது.
ஒன்மேன் ஷோ! - பாடல்கள் மட்டுமே திரையிசை எனத் தேங்கிக் கிடந்த 50களின் தமிழ் சினிமாவில், பின்னணி இசையை ஓர் இணைக் கதைசொல்லியாகத் தன் படங்களின் வழியாகத் தமிழ் பார்வை யாளர்களுக்கு உணரவைத்தவர் எஸ்.பாலசந்தர். இதை அவர் இசையமைத்து, நடித்து, இயக்கி, நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமான ‘என் கணவர்’ (1948) படத்தி லிருந்தே உணர முடியும்.