

படப்பிடிப்பில் அருள்நிதி, கணேஷ் விநாயகம், ஒளிப்பதிவாளர் சுகுமார்
கடந்த 2021இல் வெளியாகி விமர்சகர்கள், ரசிகர்களின் வரவேற்பை ஒருசேரப் பெற்ற படம் ‘தேன்’. இரண்டு தமிழ்நாடு அரசு விருதுகள், புதுச்சேரி அரசின் சிறந்த படத்துக்கான விருது என அங்கீகரிக்கப்பட்ட அப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியிருக்கும் படம் ‘அருள்வான்’.
அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து...
‘தேன்’ படத்தைப் போலவே ‘அருள்வான்’ படத்திலும் மலை வாழ் பழங்குடி மக்களின் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறீர்கள். இது எதிர்பாராமல் அமைந்ததா?
நான் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் பிறந்து, வளர்ந்தேன். சிறு வயதிலேயே அப்பா மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழிக்குக் குடிபெயர்ந்தோம்.
டெல்டாவில் பள்ளி, கல்லூரியில் படிக்கிற காலம் முதல் இப்போதுவரை ஆண்டுக்கு இரண்டு முறை மலையேற்றம் செய்வதைக் கடைப்பிடிக்கிறேன். ‘தேன்’ படம் வெளியான பிறகு திண்டுக்கல் மலைப் பகுதிக்கு ‘டிரெக்கிங்’ சென்றிருந் தேன். மனிதர்கள் நடந்து உருவாக்கிய ஒற்றையடிப் பாதையில் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தபோது எதிரே காடர் பழங்குடியின முதியவர் வந்தார்.
அவரிடம் ‘இங்கே ஊர் இருக்கிறதா?‘ என்று கேட்டபோது ‘என்னுடைய பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து இங்கே வசிக்கிறோம். 5 மைல் தூரம் மலையேறிப் போனால் ஊர் வந்துவிடும்’ என்றார்.
மூன்று ஆறுகளைக் கடந்து சின்னூர் என்கிற அந்தக் கிராமத்துக்குக் கஷ்டப்பட்டுப் போய்ச் சேர்ந்தபோது அங்கே 22 குடும்பங்கள் வசித்ததைப் பார்த்தேன்.
மின்சாரம் இல்லை; சாலைகள் இல்லை. ஆறுகளைக் கடக்க நடைப்பாலம் இல்லை. எல்லாவற்றையும்விட அங்கே கல்வியும் இல்லை. மழை, வெள்ளக்காலங்களில் 3 மாதம் ஆற்றைக் கடக்க முடியாது என்பதால், உலகத்துடன் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறது அந்தக் கிராமம். 22 வயதுப் பெண் ஒருவர் என்னருகில் வந்து, ‘அண்ணா நான் திண்டுக் கல்லுக்குப் போய் விடுதியில் தங்கி +2 படித்து முடித்துவிட்டேன்.
தொடர்ந்து படிக்க வசதி இல்லாததால் ஆன்லைன் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து வருகிறேன். ஆனால், இங்கிருந்தே தேர்வை எழுத இணைய வசதி இல்லை” என்றாள். அவரது நிலையை விளக்கி விகடன் இதழுக்கு ஒரு கட்டுரை எழுதினேன்.
அதைப்படித்த திண்டுக்கல், தேனி மாவட்ட ஆட்சியர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தானாக முன்வந்து ‘அந்தப் பெண்ணைத் தொடர்ந்து படிக்கவைக்கிறேன்’ என்று செலவுகளை ஏற்றுக்கொண்டார். இந்த உண்மை நிகழ்விலிருந்து ஒரு பொழுதுபோக்கு சமூகப் படமாக இதை உருவாக்கியிருக்கிறேன்.