

தாய்லாந்து நாட்டின் வெகுஜன சினிமாவிலிருந்து பல பேய்த் திரைப்படங்கள் வெளிவந்து உலகெங்கும் வெற்றியடைந்திருக்கின்றன. இப்போதும் அங்கே பேய்ப் படங்கள் மிகவும் பிரபலம். அப்படியொரு தாய்லாந்துப் பேய்ப் படத்தை அப்படியே எடுத்துக்கொண்டு தமிழில் வெளியான படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
2004இல் வெளிவந்த ‘ஷட்டர்’ (Shutter) என்கிற படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படம் ஹாலிவுட்டில் 2008இல் முறையாக மறு ஆக்கம் செய்யப்பட்டது. உலகெங்கும் திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமான படம் இது.
துன் ஓர் ஒளிப்படக் கலைஞன். அவனை ஜென் காதலிப்பாள். ஒரு பார்ட்டி முடிந்ததும் இருவரும் காரில் வீட்டுக்குச் செல்வார்கள். ஜேன் காரை ஓட்டுவாள். செல்லும் வழியில் ஒரு பெண்ணின் மீது தவறுதலாக காரை மோதிவிடுவாள்.
பதறிப்போகும் ஜேனிடம் ‘கீழே இறங்காமல் இங்கிருந்து சீக்கிரம் தப்பித்துவிடலாம்’ என்று பதற்றத்துடன் அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்று விடுவான். இதன்பின்னர் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கத் தொடங்கும். துன் எடுக்கும் ஒளிப்படங்களில் சில முகங்கள் தென்படத் தொடங்கும்.
அதேசமயம் துன்னுக்குத் திடீரென்று தோள்களில் வலி ஏற்படத் தொடங்கும். உடனே மருத்துவரைச் சந்திப்பான். திடீரென்று அவனது எடை இரண்டு மடங்கு கூடிவிட்டதைத் தெரிந்துகொண்டு அதிர்ச்சி அடைவான். அதேநேரம் அவனது உடலில் வேறு எந்தப் பிரச்சினையும் இருக்காது.