Argentina 1985: மறக்க முடியாத நீதி விசாரணை | சினிமாவும் அரசியலும் 41

Argentina 1985: மறக்க முடியாத நீதி விசாரணை | சினிமாவும் அரசியலும் 41
Updated on
4 min read

ஜந்தர் மந்தரில் தொடங்கி டெல்லியைக் கொஞ்சம் கொஞ்சமாக முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தைப் போல, ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு நாட்டின், ஏதாவது ஒரு நகரத்தில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

புரட்சிகர வழியிலான போராட்டங்களாகட்டும், ஜனநாயக வழியிலான போராட்டங்களாகட்டும் ஆளும் வர்க்கங்கள் அவற்றை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கிடையாது. சாத்தியமான எல்லா வழிகளிலும் அப்படிப்பட்ட போராட்டங்களை நசுக்கத்தான் துடித்துக் கொண்டிருக்கின்றன.

அதிகாரத்தின் கரங்களால் நசுக்கப்படும், ஆட்சியாளர்களின் கரங்களால் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டங்களிலும், மாபெரும் எழுச்சிகளிலும் நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாதம் எப்படி இருக்கிறது? காணாமல் ஆக்கப்படுதலும், படுகொலைகளும் பெருங்காயங்களும் எனக் கணக்கற்று நடக்கும் அரச பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது சாத்தியமா!

அப்படிப்பட்ட நீதிக்கான விசாரணைகள் எவ்வளவு கடினமானதாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் அர்ஜெண்டினாவில் நடந்த மிகமுக்கியமான நீதிக்கான விசாரணையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதிரியான திரைப்படங்கள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதால், எந்த வரலாற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வது, வெறுமனே திரைப்படத்தைப் புரிந்துகொள்வதற்காக மட்டும் உதவக் கூடியதல்ல.

ஒரு திரைக்கலைஞனின் சமூகப் பொறுப்பையும், அவனுடைய மானுட நேயத்தையும் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடியது. இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் சாண்டியாகோ மித்ரே தன்னுடைய தேசமான அர்ஜெண்டீனாவில் நடந்த மிக முக்கியமான நீதி விசாரணையை திரைப்படமாக்கியதன் மூலம் அர்ஜெண்டின மக்களுக்கு மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் நம்பிக்கையை நிறைத்திருக்கிறார்.

அர்ஜெண்டினாவின் வரலாற்றில் அழியாத இடம்பிடித்திருக்கும் அந்த நீதி விசாரணையின் பெயர், ‘ஜீண்டா ராணுவத் தலைவர்களின் விசாரணை.’ இந்த விசாரணை உலக வரலாற்றில் மிக முக்கியமான ராணுவ விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ராணுவ ஆட்சியாளர்களை, அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனநாயக அரசானது சிவில் நீதிமன்றத்தில் அவர்கள் செய்த குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கிய மிகப்பெரிய வழக்கு இதுதான். அவ்வளவு எளிமையான பயணமாக இல்லையென்றாலும்கூட, அதிகாரம் கையிலிருந்த மிதப்பில் மானுடத் திரளுக்கு எதிராக மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது முடிவில் திருப்திகரமாகத்தான் இருக்கிறது.

1976, மார்ச் 24 அன்று அர்ஜெண்டினாவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தக் கொடுமையான ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியினர், தொழிற்சங்கவாதிகள்,பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கடத்தப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர்.

மனித உரிமை அமைப்புகளின் கணக்கீட்டின்படி தோராயமாக 30,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. இந்த மானுடத்திரள் நினைத்துப் பார்க்கவே முடியாத கொடூரமான குற்றங்கள் அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாகச் செய்யப்பட்டன. ராணுவ ஆட்சியை எதிர்த்துக் கேட்க எந்தத் தைரியமும் இல்லாமல் இருந்தது. ஆனால் காலம் அப்படியே இல்லை. மாறத் தொடங்கியது.

1983இல் ராணுவ ஆட்சி முடிந்து அர்ஜெண்டினாவில் ஜனநாயகம் மலரத் தொடங்கியது. புதிய அதிபர் ரவுல் அல்போன்சின் பதவியேற்றவுடன் எடுத்த முக்கியமான சில முடிவுகளில் காணாமல் போனவர்களைப் பற்றி விசாரிப்பதுதென்பது முதன்மையானது. அதற்காகவே ஓர் ஆணையம் உருவாக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான சாட்சியங்களின் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டன. மீண்டும் நிகழக் கூடாது (Never Again) என்கிற பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை வழக்கின் மிக முக்கியமான ஆதாரமாகவும், அர்ஜெண்டின வரலாற்றில் மிக முக்கியமான வார்த்தைகளாகவும் மாறிப்போனது.

1985, ஏப்ரல் 22 அர்ஜெண்டினாவின் புவனஸ் ஐரஸின் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியது. அரசு தரப்பு வழக்கறிஞராக ஜீலியோ சீசர் ஸ்ட்ராசேரோ நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாளராக லூயிஸ் மொரேனோ நியமிக்கப்பட்டார். நீதிமன்ற விசாரணை எட்டு மாதங்கள் நடைபெற்றது. 800க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

ரகசியச் சிறைச்சாலையின் விவரங்கள், செய்யப்பட்ட சித்ரவதைகளின் விவரங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன. மேலும் ராணுவத்தினர் மின்சார அதிர்ச்சி கொடுத்ததையும், பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதையும், கண்களைக் கட்டிவிட்டு மாதக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்டிருந்ததையும், குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்ததையும், கைதிகளை விமானத்தில் இருந்து கடலில் தூக்கி வீசியதையும் நேரடி சாட்சியங்களின் வாயிலாக அறிந்து அதிர்ச்சியடைந்தது நீதிமன்றம்.

இனி ஒருபோதும் இப்படி நடக்கக் கூடாது (Never Again) என்கிற ஸ்ட்ராசேரோவின் இறுதி வாதம் அர்ஜெண்டினாவின் மனித உரிமைப் போராட்டத்தின் சின்னமாக மாறியது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.

தென் அமெரிக்காவின் மற்ற நாடுகளிலும், ஆப்ரிக்காவிலும் இந்த வழக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, குற்றம் செய்த அரச பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே 2022 ல் வெளியிடப்பட்டது இந்தத் திரைப்படம்.

”ஒரு சமூகத்தில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் நீதி அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்” என்கிற கேள்வியைத் தொடர்ந்து தன்னுடைய திரைப்படங்களில் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சாண்டியாகோ மித்ரே அர்ஜெண்டினாவின் மிக முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவர்.

அரசியல், நீதித்துறை, சமூக அநீதி போன்ற கருப்பொருள்களை நுணுக்கமாகத் திரைப்படமாக்குவதில் வல்லவர். 2000களில் உருவான புதிய அர்ஜெண்டின சினிமாவின் முக்கியமான படைப்பாளி. திரைப்படம் வெறும் பொழுது போக்காக அல்லாமல், சமூகத்தை ஆராயும் கருவியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாகச் செயல்படக்கூடியவர். சாண்டியாகோ மித்ரே தயாரித்து இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, மரியானோ லின்யாஸ் உடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார். திரைக்கதையின் முதல் வரைவை வாசித்த ரிக்கார்டோ டாரின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுடன், தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இணைந்துகொண்டார்.

வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம் 2022இல் அர்ஜெண்டினாவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம். விமர்சகர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றதுடன் மட்டுமல்லாமல், சிறந்த வெளிநாட்டு மொழிப்படப் பிரிவில் கோல்டன் குளோப் விருதையும் பெற்றது. இன்னும் பல முக்கியமான விருதுகளைப் பெற்ற இத்திரைப்படம், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரையும் செய்யப்பட்டது.

பெருந்தொற்றுக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் இணைய வழியிலேயே நடைபெற்றது. திரைப்படக் குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில்தான் நேரில் சந்தித்தனர். பழைய காலத்தை நினைவூட்டும் கதை என்றாலும், நவீன பார்வையாளனுக்கும் நெருக்கமாக உணரவைக்கும் சமகாலத்தின் காட்சிகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ஹாவியா ஜீலியாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்தான்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் பாராட்ட வேண்டிய இன்னொரு கலைஞர், கலை இயக்குநர் மிகேலா சாயே. தன்னுடைய அனுபவத்தை இப்படிச் சொல்கிறார்: “ஒரு கலை இயக்குநராக என் வேலை, பார்வையாளர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான். என் பணியே கதையைவிட முக்கியமாகத் தெரியக் கூடாது. மாறாக கதை இயல்பாகச் சொல்லப்படுவதற்கு அமைதியாக உதவ வேண்டும்.”

திரைப்படத்தின் விநியோகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள் கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்படுத்த, ஒருவகையில் குறைந்த திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகிறது. அதுகுறித்துப் படத்தின் திரைக்கதை ஆசிரியர் மரியானோ கூறுகையில், “சர்வதேச திரையரங்குகள் திரைப்படத்தைத் திரையிட மறுத்தது. எதிர்பாராவிதமாகத் திரைப்படத்திற்கு ஒரு புராணத் தன்மையை உருவாக்கியது. திரையிடப்பட்ட அரங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், மக்கள் நீண்ட வரிசையில் நின்று திரைப்படத்தைப் பார்த்தனர்”.

இந்தத் திரைப்படத்தில் அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் ஸ்ட்ராசேரோ நீதிமன்றத்தில் நீண்டதும் முக்கியமானதுமான தன்னுடைய கடைசி வாதத்தை எடுத்து வைப்பது திரைப்படத்தின் உணர்வுபூர்வமான தருணங்களில் மிக முக்கியமானது.

“இந்த விசாரணைக்கான ஒவ்வொரு தருணமும் மனித ஆன்மாவின் இருண்ட ஆழங்களுக்குள் இறங்கிய ஒரு பயணமாக இருந்தது. அங்கே மனித துயரம்,இழிவு, கொடூரம் ஆகியவை கற்பனை செய்ய முடியாத அளவிலும், புரிந்துகொள்ள முடியாத அளவிலும் இருந்தது. கடத்தல், சித்ரவதை, கொலை போன்றவற்றை அரசியல் நிகழ்வுகள் அல்லது போரின் தவிர்க்க முடியாத நிகழ்வுகள் என்று யாரும் நியாயப்படுத்த முடியாது. இங்கு சோதிக்கப்படுவது ராணுவத்தின் கண்ணியம் அல்ல. மாறாக அந்தக் கண்ணியத்திற்கு எதிரான செயலகள்தான்” என்று சொல்லிவிட்டு இறுதி உரையை இனி நிகழக் கூடாது (Never Again) என்று சொல்லி முடிப்பார்.

இயக்குநர் சாண்டியாகோவும், “இனி நிகழக் கூடாது (Never Again) என்பது ஒரு வசனம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் உறுதிமொழி. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நினைவூட்டும் சொல்” என்று சொன்னார்.

அற்புதமான உண்மை நிறைந்த அந்த உரை அர்ஜெண்டின ராணுவத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டின் ராணுவத்திற்கும் பொருந்தக்கூடியதுதான்.

இனி நிகழக் கூடாது இனி நிகழக் கூடாது (Never Again) என்று சொல்வதற்கு நம்முடைய நாட்டிலும் அரச பயங்கரவாதங்கள் நிகழத்தான் செய்கின்றன. நியாயமான போராட்டங்களை அரசுகள் கையாளுகின்ற காட்சிகளே அதற்குச் சாட்சியாக இருக்கின்றன. நீதிக்கான காத்திருப்பும், விசாரணைகளும் நிறையவே இருக்கத்தான் செய்கின்றன. இப்போதும்கூட குறையவில்லை நம்பிக்கை. விடியும் என்கிற நம்பிக்கையில்தான் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன!

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Argentina 1985: மறக்க முடியாத நீதி விசாரணை | சினிமாவும் அரசியலும் 41
Paradise Now: தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராகும் இதயங்கள் | சினிமாவும் அரசியலும் 40

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in