Paradise Now: தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராகும் இதயங்கள் | சினிமாவும் அரசியலும் 40

Paradise Now: தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராகும் இதயங்கள் | சினிமாவும் அரசியலும் 40
Updated on
4 min read

இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் தோழர்களில் பலர் எப்போதும் கேட்கும் கேள்வி, இப்படிப்பட்ட அரசியல் திரைப்படங்களை எப்படி, எங்கு தேடிக் கண்டறிகிறீர்கள் என்பதுதான். தேடலில் எவ்வளவு சுகம் இருக்கிறதென்பதைச் சொல்லவும் வேண்டுமா! ஒருவகையில் தேடிக் கண்டறிவது எளிதானதுதான். முதல் புள்ளியை வைத்துவிட்டால் போதும், கோலம் முடியும்வரை நடனமாடும் விரல்கள் போல, தேடத் தொடங்கிவிட்டால் போதும் பயணம் எல்லையற்றதுதான்.

இந்தப் பூமிப்பந்தில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் தோராயமாக 195 நாடுகள் இருக்கின்றன. அவற்றில் இன்னும் திரைப்படமே எடுக்காத நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதிலும் தொடர்ந்து அரசியல் திரைப்படங்களை உருவாக்கக்கூடிய நாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஏன் இந்த நாடுகளில் மட்டும் அதிகமான அரசியல் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன? இந்தக் கேள்விக்கு விடை தேடுவது, கிட்டத்தட்ட உலக அரசியலை உணர்ந்து கொள்வதற்குச் சமமானது.

மிகப்பெரிய புரட்சிகள் நடந்த நாடுகளில், புரட்சிக்கான தேவைகள் நிறைந்திருக்கும் நாடுகளில் அரசியல் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நீண்ட காலங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் நாடுகளில் சுதந்திரத்தை வலியுறுத்தி திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஆக்கிரமிப்பிற்கு எதிராக நெடுங்காலமாகப் போராடிக் கொண்டிருக்கும் நாடுகளில் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், விடுதலைக்கு ஆதரவாகவும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திரைப்படம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை சம்பந்தப்பட்டது. இந்தத் தொடரில் பாலஸ்தீனத்திலிருந்து வெளிவந்த திரைப்படங்களின் வரிசையில் இது நான்காவது திரைப்படம்.

இன்னும் நாடாகக்கூட அங்கீகரிக்கப்படாத நிலத்திலிருந்து உலகமே வியக்கக்கூடிய திரைப்படங்களை எப்படி உருவாக்குகிறார்கள் பாலஸ்தீனர்கள்? வாழ்வதே, ஏன் பிழைத்திருப்பதே போராட்டமாக இருக்கும்போது எப்படி அவர்கள் கேமராவைத் தூக்கிக் கொண்டு திரைப்படம் எடுக்கிறார்கள் என்கிற கேள்விகள் வெறும் திரைப்படம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஓர் இனத்தின் போராட்டம் சம்பந்தப்பட்டது. ஓர் இனத்தின் விடுதலை சம்பந்தப்பட்டது. விருதுகளுக்காகப் படம் எடுக்கவில்லை அவர்கள். யாருடைய அங்கீகாரத்திற்காகவும் படம் எடுக்கவில்லை அவர்கள்.

சுதந்திரத்திற்கான தேவையிலிருந்து திரைப்படங்களை உருவாக்குகிறார்கள் அவர்கள். விடுதலைக்கான வேட்கையிலிருந்து திரைப்படங்களை உருவாக்குகிறார்கள் அவர்கள். மாற்றத்திற்கான தேவை எங்கே இருக்கிறதோ, அங்கே மாற்றத்தை வலியுறுத்தி திரைப்படங்கள் வரத்தான் செய்யும்.

எங்கே அடக்குமுறை அதிகமாக நிலவுகிறதோ அங்கே அடக்குமுறைக்கு எதிரான திரைப்படங்கள் வரத்தான் செய்யும். தொடர்ந்து காயங்களை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் சமூகத்திலிருந்து வலிக்கிறது என்று சொல்ல வருவான் ஒரு கலைஞன். பாலஸ்தீனத்தின் வலி சொல்ல வந்த ஒரு கலைஞர்தான் இயக்குநர் ஹனி அபு அசாத்.

என்னுடைய திரைப்படங்கள் பதில்களைச் சொல்வதற்காக அல்ல. கேள்விகளை எழுப்புவதற்கானது என்று சொல்லும் இயக்குநர் தொடர்ந்து தன்னுடைய படங்களில் அரசியல் பிரச்சினைகளுக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் மனித உறவுகளை, தீவிரமான உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தியவர். பாலஸ்தீனத்தின் அகதிகளாக்கப்பட்ட குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்து, விமானப் பொறியியல் துறையில் பட்டம் பெற்று, வேலையும் செய்து கொண்டிருக்கும்போது, திரைப்படத்தின் மீது ஆர்வம் தொற்றிக்கொள்ள இயக்குநரானவர்.

பாலஸ்தீன சினிமாவின் முக்கியமான குரல்களில் ஒருவராகக் கருதப்படும் ஹனி அபு அசாத். தன்னுடைய Paradise Now, Omar ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஆஸ்கர் பரிந்துரை பெற்றதன் மூலம், பாலஸ்தீன சினிமாவை, பாலஸ்தீன பிரச்சினையை உலக அரங்கில் வலுவாக அறிமுகப்படுத்திய இயக்குநராக மதிக்கப்படுகிறார்.

2005இல் வெளியான இந்தத் திரைப்படம், இஸ்ரேலில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தத் தயாராகும் இரண்டு பாலஸ்தீன இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றியது.சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதை வென்றது. அபு அசாத்தும், பெரோ பெயரும் இணைந்து 1999 ஆம் ஆண்டிலேயே திரைக்கதையை எழுதத் தொடங்கினர்.

ஆனால் முழுமையான திரைக்கதையை முடித்து படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆனது. ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட தனது நண்பனைத் தேடும் கதையாக இருந்த திரைக்கதை, பின்னர் சயீத், காலித் என்கிற இரண்டு நண்பர்களின் கதையாக மாற்றப்பட்டது.

இந்தத் திரைப்படமும் தற்கொலைத் தாக்குதல் என்கிற மிகப்பெரிய அரசியல் பிரச்சினையை மனித அனுபவமாகப் பார்க்கத்தான் முயற்சிக்கிறது. கையெழுத்துப் போட்டுவிட்டு, கட்டளையைப் பிறப்பித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் தலைவர்கள், யார் செத்துத் தொலைகிறார்கள் ஒவ்வொரு போரிலும் என்கிற கேள்விக்கு விடை சொல்ல முடியுமா? ஒருவரைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, அவர் செய்வதை ஆதரிப்பது அல்ல” என்கிற அபு அசாத்தின் வார்த்தைகள் சிந்திக்கத் தூண்டுபவை.

“இந்தத் திரைப்படம் அரசியல் பிரச்சினை பற்றிய ஒரு கலைஞனின் பார்வை. அரசியல்வாதிகள் அதைக் கறுப்பு – வெள்ளை, நல்லது – கெட்டது என்று பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் கலை அதை ஒரு மனித அனுபவமாகப் பார்க்க விரும்புகிறது”

இயக்குநர் அபு அசாத்

இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடவில்லை. படக்குழுவினர் சந்தித்த சவால்கள் அதிகம். எல்லாவற்றையும் கேள்விப்பட்டால், இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழத்தான் செய்யும். இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் நாப்லஸ் நகரில்தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.

குறிப்பாக நாப்லஸ் நகரம் ராணுவ நடவடிக்கைகளும் ஆயுத மோதல்களும் நடைபெறும் இடமாக இருந்தது. எப்போது வந்துவிழும் ஏவுகணை எறியும் குண்டுகள் என்று தெரியாத படக்குழுவினர் கேமராவோடு இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் கண்ணிவெடி ஒன்று வெடித்திருக்கிறது. திரைப்படத் தளத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த கார்மீது இஸ்ரேல் ராணுவம் ஒருநாள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சில தொழில்நுட்பக் குழுவினர், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகச் சொல்லி, படப்பிடிப்பிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றனர். மேலாளர் ஒருவரைப் படப்பிடிப்பின் போது பாலஸ்தீன ஆயுதக்குழு கடத்திச் சென்றிருக்கிறது. போராடி மீட்டிருக்கிறார்கள் அந்த மேலாளரை. பின்னர் டெலகிராப் இதழுக்கு இயக்குநர் அளித்த பேட்டியில், "காலத்தைப் பின்னோக்கித் திருப்ப முடிந்தால், இந்தப் படத்தை மீண்டும் எடுக்க மாட்டேன். ஒரு திரைப்படத்திற்காக எல்லாருடைய உயிரையும் பணயம் வைப்பது மதிப்புடையது அல்ல" என்று சொன்னார்.

படமாக்கலில் மட்டுமல்ல, வெளியிட்டபின் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்ட போதிலும் சில பிரச்சினைகளைச் சந்தித்தது இந்தத் திரைப்படம். சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் பாலஸ்தீனத் திரைப்படம். ஆஸ்கர் அமைப்பைப் பொறுத்தளவில் அந்த நாட்டின் அரசாங்கம் அதிகாரபூர்வமாகச் சமர்ப்பிக்க வேண்டும். பாலஸ்தீனம்தான் அங்கீகரிக்கப்பட்ட அரசல்லவே!

இஸ்ரேலிய அதிகாரிகள் ஆஸ்கர் கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, பாலஸ்தீன ஆணையம் என்று மாற்றிக் குறிப்பிடுகிறது ஆஸ்கர் அமைப்பு. இயக்குநர் எதிர்ப்பு தெரிவிக்க, கடைசியில் பாலஸ்தீனப் பகுதி என்று குறிப்பிடுகிறது. இத்தனை பிரச்சினைகளையும் தாண்டித்தான் இந்தப் படம் எல்லாருடைய இதயங்களிலும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனத்தின் நாப்லஸ் நகரில் சிறுவயது நண்பர்களான சயீத், காலித் வசித்து வருகிறார்கள். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்த ஒர் ஆயுத அமைப்பு அவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. தாக்குதலுக்குச் செல்லவிருந்தாலும் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் இயல்பாக நடந்து கொள்கிறார்கள்.

மறுநாள் இஸ்ரேலியர்களைப்போல தங்களை மாற்றிக்கொண்டு, குண்டுகளைப் பொருத்திக்கொண்டு, திருமணத்திற்குச் செல்வதுபோலப் புறப்பட்டுச் செல்கிறார்கள். எல்லையைக் கடக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தின் பெயரில் துரத்தத் தொடங்க, காலித் தப்பித்து அமைப்பினரிடம் வந்து, குண்டுகளை அகற்றிக்கொள்கிறான். ஆனால், சயீத் காணாமல் போகிறான்.

பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பித்த சயீத், இஸ்ரேலியக் குடியேற்றப் பகுதிக்குச் செல்கிறான். பேருந்தில் வெடிக்கத் திட்டமிடுகிறான். அங்கே ஒரு குழந்தையைப் பார்த்தபின் மனதை மாற்றிக்கொள்கிறான். தன்னுடைய காதலியான சுஹாவைச் சந்தித்து வேதனையைப் பகிர்ந்துகொள்கிறான்.

அவனுடைய தந்தை இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாகக் கருதி பாலஸ்தீனர்களால் தூக்கிலிடப்பட்டதற்குக் காரணம் இஸ்ரேல்தான். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன் என்கிறான்.

தந்தையின் கல்லறை அருகே வெடிகுண்டோடு இருக்கும் சயீத்தைக் கண்டறிகிறார்கள் காலித்தும் சுஹாவும். இருவரும் அமைப்பிற்குத் திரும்புகிறார்கள். தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகச் சொல்கிறான் சயீத்.

மீண்டும் டெல் அவிவ் செல்கிறார்கள். சுஹாவின் மனிதநேயக் கருத்துகளால் மனம் மாறிய காலித் முடிவைக் கைவிடுகிறான். சயீத்தையும் வலியுறுத்துகிறான். அவனிடம் மாறுவதுபோல நடித்து ஏமாற்றி அவனை அனுப்பிவிட்டு, இஸ்ரேல் பகுதிக்குள் செல்கிறான் சயீத். கடைசிக் காட்சியில் இஸ்ரேல் வீரர்கள் தங்கள் குடும்பத்தோடு பயணம் செய்து கொண்டிருக்கும் பேருந்தில் உட்கார்ந்திருக்கிறான் சயீத்.

அவன் கண்களை நெருங்கிச் செல்கிறது கேமரா. அவன் கண்களில் நிலைகுத்தி நிற்கிறது கேமரா. திரை வெள்ளையாக மாறுகிறது. சில நொடிகளில் கறுப்பாக மாறுகிறது. அவ்வளவுதான், முடிவு உங்கள் கைகளில். “அரபு - இஸ்ரேல் நகரமான நசரேத்தில் அல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்திருந்தால் நானும் தற்கொலைத் தாக்குதலுக்கு ஒருவேளை தயாராகியிருப்பேன்” என்று சொல்லும் இயக்குநரின் வார்த்தைகள் தீவிரவாதத்தை ஆதரிப்பது அல்ல, அரச பயங்கரவாதத்தையும் அதற்கு எதிர்வினையான தீவிரவாதத்தையும் ஒருசேர கேள்விக்குட்படுத்துவதுதான்!

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Paradise Now: தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராகும் இதயங்கள் | சினிமாவும் அரசியலும் 40
Reds: காலத்தின் சாட்சியான பத்திரிகையாளன் | சினிமாவும் அரசியலும் 39

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in