War Machine: நொடி கூட சலிக்காத பரபர அனுபவம் | ஓடிடி திரை அலசல்
‘ரீச்சர்’ வெப் தொடர் மூலம் ஹாலிவுட் ரசிகர்களுக்கு பரிச்சயமான அலன் ரிட்ச்சன் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள படம் 'வார் மெஷின்’. ஹாலிவுட்டின் வழக்கமான மசாலா ஆக்ஷன் பாணி கதையில், நவீன அறிவியல் புனைவை மிக நேர்த்தியாக இணைத்து படு விறுவிறுப்பான அனுபவத்தை தந்திருக்கிறார் இயக்குநர்.
அமெரிக்க ராணுவத்தின் ஒரு ரகசிய பிரிவைச் சேர்ந்த ஒரு குழு, உலகின் மிகவும் ஆபத்தான ஒரு பகுதிக்கு ஒரு முக்கியப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறது. ஆனால் அங்கு அவர்கள் செய்யும் ஒரு பெரிய தவறால் வெளிப்படும் ஒரு ஆபத்தான இயந்திரம், அவர்களை துரத்தி துரத்திக் கொல்கிறது. எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வரும் அந்த இயந்திரம் எங்கிருந்து வந்தது? அதனிடமிருந்து ராணுவக் குழுவினர் தப்பித்தார்களா என்பதே ‘வார் மெஷின்’ படத்தின் கதை.
இயக்குநர் பேட்ரிக் ஹியூஸ் இந்த படத்தை வெறுமனே துப்பாக்கி சண்டைகளும், ரத்தம் தெறிக்கும் வன்முறையும் நிறைந்த ஒரு வார் திரைப்படமாக மட்டுமே கையாளாமால், அதில் மிக லாவகமாக அறிவியல் புனைவையும், கச்சிதமான எமோஷனலான பின்னணியையும் சேர்த்ததே இப்படத்தின் வெற்றி என்று சொல்லவேண்டும்.
பொதுவாக அறிவியல் புனைவுத் திரைப்படங்களில் இருக்கும் அதிகப்படியான சிக்கலான தொழில்நுட்ப விளக்கங்கள் எதுவும் இன்றி, சாமானிய ரசிகர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது ஒரு பெரிய பலம். ஆரம்பத்தில் சாதாரண வார் திரைப்படம் போல தொடங்கி போகப் போக ஜெட் வேகத் திரைக்கதையுடன் கூடிய ஒரு சயின்ஸ் பிக்சன் த்ரில்லராக மாறுகிறது படம். பரபரவென மிக வேகமாக நகரும் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பைத் தக்கவைக்கின்றன.
நாயகன் அலன் ரிட்ச்சன் ‘ரீச்சர்’ தொடரில் எந்தவித உணர்ச்சியும் காட்டாத ஒரு கதாபாத்திரத்தில் தான் ரசிகர்களுக்கு பரிச்சயம். ஆனால் இந்த படத்தில் தனது மிளிரும் நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் வியாபித்திருக்கிறார்.
அவரது ஆகிருதியான உடலமைப்பும், சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் வேகமும் அந்த கதாபாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை கூட்டுகிறது. உணர்வுபூர்வமான இடங்களை அவர் கையாளும் விதம், ஆக்ஷன் படங்களுக்கான டெம்ப்ளேட்டை உடைத்து அவரது முதிர்ச்சியான நடிப்பை வெளிக் கொண்டு வருகிறது.
தொழில்நுட்ப ரீதியாகப் படம் மிகவும் ‘ரிச்’ ஆக உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஓடிடியில் வெளியான படம் என்றாலும், இதற்கு படக்குழு போட்டுள்ள உழைப்பு அசாத்தியமானது. நிச்சயம் இப்படம் திரையரங்க அனுபவத்துக்கானது என்று சொல்லலாம்.
குறிப்பாக சிஜி, படத்தின் சவுண்ட் டிசைன் பார்ப்பவர்களுக்கு மிக தத்ரூபமான உணர்வை தருகின்றன. படத்தின் சில இடங்களில் திரைக்கதை சற்றே யூகிக்கக்கூடிய வகையில் நகர்வது ஒரு சிறு குறையாகத் தெரிகிறது. சில துணைக் கதாபாத்திரங்களின் பின்னணிகள் இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தால் அவர்களுடனான பிணைப்பு இன்னும் ஆழமாக இருந்திருக்கும்.
இத்தகைய சிறிய குறைகளை படத்தின் வேகம் மற்றும் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் முழுவதுமாக மறைத்துவிடுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 'வார் மெஷின்' ஒரு தரமான ஆக்ஷன் அனுபவத்தைத் தேடும் ரசிகர்களுக்கான மிகச்சிறந்த தேர்வு.
நீங்கள் ‘ப்ரிடேட்டர்’, ‘டெர்மினேட்டர்’ போன்ற படங்களின் தீவிர விசிறியாக இருந்தால் இப்படம் உங்களுக்கு ஓர் அறுசுவை விருந்து. நல்ல விறுவிறுப்பான த்ரில்லர்களை விரும்புபவர்களும் தாராளமான இதனை நம்பி பார்க்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.
