Last Updated : 31 Jan, 2023 05:03 PM

 

Published : 31 Jan 2023 05:03 PM
Last Updated : 31 Jan 2023 05:03 PM

95-வது ஆஸ்கர் விருது: தி பன்ஷீஸ் ஆஃப் இனிஷெரின் – தனிமையின் ஓலம்

95-வது ஆஸ்கர் விருது

மனிதர்களின் வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. சிலருக்குத் தேடலே வாழ்க்கை; பலருக்கு இருப்பதைத் தொடர்வதே வாழ்க்கை. எது எப்படியாக இருப்பினும் இங்கே பிறப்பும் இறப்பும் அனைவருக்கும் பொதுவானவை என்பதால், வாழ்க்கைமுறையின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு இருக்க முடியாது என்பதே நிதர்சனம்.

இருப்பினும்நம் சமூக அமைப்பில் 'இருப்பதைத் தொடர்வது’ என்பது சாமானியர்களின் மனநிலையாகவும், 'தேடலைத் தொடர்வது’ என்பது சாதனையாளர்களின் மனநிலையாகவும் கருதப்படுகிறது. இந்தக் கருத்து எவ்வளவு அபத்தமானது என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கும் திரைப்படமே 'தி பன்ஷீஸ் ஆஃப் இனிஷெரின்’. புகழ்பெற்ற இயக்குநர் மார்டின் மெக்டோனா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் நான்காவது திரைப்படம் இது.

கதையின் களம்: அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் இருப்பதாக உணர்த்தப்படும் இனிஷெரின் எனும் கற்பனைத் தீவே இந்தக் கதை நடைபெறும் களம். 1920களில் அயர்லாந்து உள்நாட்டுப் போரின்போது இந்தக் கதை நடைபெறுகிறது. ஆனாலும் திரைப்படத்தில் போர்க் காட்சிகளே இடம்பெறவில்லை! அந்தத் தீவுக்கு அப்பால் உள்ள ஓர் ஊரில் அவ்வப்போது வெடிக்கும் வெடிகுண்டின் ஓசை மட்டும் படத்தில் இரண்டு, மூன்று முறை கேட்கிறது. இருப்பினும், போரின் இறுக்கமும் ஒருவித அமைதியின்மையும் இந்தத் திரைப்படம் முழுவதும் வெளிபடுகின்றன. திரைமொழியில் இயக்குநர் மார்டின் கொண்டிருக்கும் அபரிமித ஆளுமையால் சாத்தியப்பட்டிருக்கும் மாயாஜாலம் இது.

கதையின் நாயகர்கள்: பேட்ரிக், கோல்ம், சியோபன், டொமினிக் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றியே இந்தக் கதை நிகழ்கிறது. பொதுவாக மனிதர்கள் ஏதோ ஒரு குழுவில் இணைந்திருப்பதையே பாதுகாப்பாக உணர்வார்கள். தனக்கென ஓர் அடையாளத்தை நிறுவ முயலும் ஒரு சிலர் மட்டுமே இத்தகைய குழுவைவிட்டு விலகியிருக்க முயல்வர். இனிமையான மனிதராகக் கருதப்படும் பேட்ரிக், குழு மனப்பான்மையைக் கொண்டவர். அவரின் நெடுநாள் நண்பராக இருக்கும் கோல்ம், இசையில் தனக்கென அடையாளத்தை நிறுவ முயலும் லட்சிய மனிதர். பேட்ரிக்கின் சகோதரி சியோபன் அதிகம் வாசிப்பவர்; தனக்கென அழுத்தமான அடையாளத்தையும் சுய சிந்தனையையும் கொண்டிருப்பவர். பேட்ரிக்கின் மற்றொரு நண்பரான டொமினிக் எப்போதும் அன்புக்காக ஏங்கும் மனநிலையில் இருப்பவர். காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் அவருடைய தந்தையின் கண்டிப்புக்கும் வன்முறைக்கும் நித்தமும் பலியாகும் அப்பாவி இளைஞர்.

நட்பின் புறக்கணிப்பு: நேரத்தைச் சற்றும் வீணடிக்காமல் படத்தின் முதல் காட்சியிலேயே நம்மைக் கதைக்குள் இயக்குநர் அழைத்துச் சென்றுவிடுகிறார். பேட்ரிக் தன்னுடைய நண்பரான கோல்மை மது அருந்த அழைக்கச் செல்கிறார். நண்பரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியே வீட்டினுள் எட்டிப் பார்க்கிறார். கோல்ம் அவரைப் பார்க்க மறுக்கிறார். நண்பரின் அலட்சியத்துக்கான காரணம் தெரியாமல் குழப்பத்துடன் வீடு திரும்புகிறார். சியோபனிடம் நடந்ததைக் கூறுகிறார். ஒருவேளை உன்னை அவருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம் என்கிறார் சியோபன். சில நாள்களுக்குப் பிறகு கோல்மும் சியோபனின் கூற்றை உறுதிசெய்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம், 'எனக்குக் காலம் குறைவாக இருக்கிறது. இசைத்துறையில் நான் நிறைய சாதிக்க வேண்டும். சலிப்பூட்டும் உன்னுடைய சுவாரசியமற்ற பேச்சில் இனியும் என் நேரத்தை வீணடிக்க முடியாது’ என்பதாக இருக்கிறது.

கோல்மின் எச்சரிக்கை: கோல்மின் புறக்கணிப்பு பேட்ரிக்கை நிலைகுலையச் செய்கிறது. தன்னுடன் பேசுவதே காலவிரயம் என்று கோல்ம் கூறியதை ஏற்றுக்கொள்ள பேட்ரிக்கின் மனம் மறுக்கிறது. மறுநாள் மீண்டும் அவரிடமே செல்கிறார். இனியும் தன்னைத் தொந்தரவு செய்தால், ஒவ்வொரு முறையும் தனது விரல் ஒன்றை வெட்டிவிடுவேன் என்று கோல்ம் மிரட்டுகிறார். அதிர்ச்சியடையும் பேட்ரிக் அவரிடமிருந்து விரைவாக விலகிச் செல்கிறார். தங்கையிடம் சென்று புலம்புகிறார். கோல்மை மீண்டும் சந்திக்க முயலாதே என்று பேட்ரிக்கை அவர் எச்சரிக்கிறார். ஆனால், பேட்ரிக் மீண்டும் அன்று இரவு கோல்மைச் சந்திக்க முயல்கிறார். மறுநாள் காலை பேட்ரிக்கின் வீட்டு வாசலில் கோல்மின் ஒரு விரல் கிடக்கிறது. இன்னொரு முறை தன்னைத் தொந்தரவு செய்தால் தன்னுடைய நான்கு விரல்களையும் வெட்டிவிடுவேன் என்று கோல்ம் எச்சரிக்கிறார். ஆனாலும் அவரை மீண்டும் சந்திக்க முயல்கிறார் பேட்ரிக். மறுநாள் பேட்ரிக்கின் வீட்டு வாசலில் நான்கு விரல்கள் வீசியெறியப்படுகின்றன.

நிலைகுலையும் பேட்ரிக்: பேட்ரிக், கோல்ம் ஆகியோரின் மடமை சியோபனை வெகுவாகப் பாதிக்கிறது. சகோதரனைப் பிரிந்து வேறொரு நகருக்கு அவர் இடம்பெயர்கிறார். வாழ்க்கையில் அதுவரை தனிமையை உணர்ந்திராத பேட்ரிக்கை, தனிமையின் ஓலம் விடாமல் துரத்துகிறது. இந்தச் சூழலில், கோல்மின் விரலை விழுங்கும் பேட்ரிக்கின் வளர்ப்புக் கழுதை உயிரிழந்துவிடுகிறது. சமநிலையை இழக்கும் பேட்ரிக் கோல்மைப் பழிவாங்க முடிவுசெய்கிறார். கோல்மின் வீட்டைத் தீக்கிரையாக்குகிறார். அப்போது கோல்ம் வளர்க்கும் நாய் வீட்டு வாசலில் நிற்கிறது. நெருப்புக்கு நடுவில் கோல்ம் அமைதியாக அமர்ந்திருக்கிறார். மறுநாள் கோல்மின் நாயுடன் பேட்ரிக் அங்கே செல்லும்போது, கடல் அலைகளைப் பார்த்தபடி கோல்ம் நின்றுகொண்டிருக்கிறார். கோல்ம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், பேட்ரிக் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மரணத்தின் தூதுவராகக் கருதப்படும் பன்ஷீஸ் எனும் மூதாட்டி அவர்களைத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். கடலுக்கு அப்பாலிருந்து வெடிச்சத்தம் கேட்கிறது.

அச்சமூட்டும் தனித்துவம்: ஒரு வகையில் இங்கே அந்தக் கழுதையின் இறப்புக்கு பேட்ரிக்கே முதன்மையான காரணம். இருப்பினும், பேட்ரிக் கோல்மைப் பழிவாங்குகிறார். தனிமையை விரும்பிய ஒரே காரணத்துக்காக கோல்ம் தண்டிக்கப்படுகிறார். ஆனால், அதையும் மீறி கோல்ம் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். பேட்ரிக் தன்னுடைய தவறை இறுதிவரை உணரவில்லை. அதைக் கோல்மும் அறிந்திருக்கிறார். தனித்துவத்தை விரும்பும் மனிதர்களைப் பொதுச் சமூகம் ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை. அவர்களை ஒருவித அச்சத்துடனே சமூகம் அணுகுகிறது. இந்தத் திரைப்படத்தில் கால்ம் எதிர்கொள்ளும் பிரச்சினையும் அத்தகையதே.

உன்னத நடிப்பு: பேட்ரிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோலின் ஃபாரெல் வெளிப்படுத்தும் நடிப்பும் உடல்மொழியும் அந்தக் கதாபாத்திரத்தை நம் மனத்துக்கு நெருக்கமானதாக மாற்றுகின்றன. கோல்ம் பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரெண்டன் கிளீசன் சுய அடையாளத்தைத் தேடும் மனிதர்களின் ஏக்கத்தையும் பெருமிதத்தையும் நம் கண்முன் நிறுத்துகிறார். முக்கியமாக, இவர்கள் இருவரும் வெளிப்படுத்தும் நடிப்பே, எந்த மதிப்பீடுமின்றி அந்தக் கதாபாத்திரங்களை நாம் ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருக்கிறது.

பேட்ரிக், கோல்ம் ஆகியோருக்கு இணையான கதாபாத்திரங்களாக டொமினிக், சியோபன் ஆகிய கதாபாத்திரங்களின் உருவாக்கம் உள்ளது. டொமினிக் பாத்திரத்தில் நடித்திருக்கும் பாரி கியோகன் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சியோபனின் கதாபாத்திர உருவாக்கமும் வலுவாக இருக்கிறது. குறிப்பாக, வயதில் சிறியவனாக இருக்கும் டொமினிக், சியோபனிடம் தன்னுடைய காதலைத் தயக்கத்துடன் தெரிவிக்கும்போது, அதை மிகுந்த கண்ணியத்துடன் சியோபன் மறுக்கும் காட்சி நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அந்தக் காட்சியில் இருவரும் வெளிப்படுத்தும் நடிப்பு நம் மனத்தைவிட்டு அவ்வளவு எளிதில் அகலாது.

நம்முள் நிகழ்த்தும் உரையாடல்: வசனங்கள் எதுவுமின்றி மனித நுண்ணுணர்வுகளை ஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்துவது மிகவும் கடினம். இந்தத் திரைப்படம் உணர்வுகளை மட்டுமல்லாமல்; அதன் அடிநாதமாக விளங்கும் எண்ண ஓட்டங்களையும் காட்சிகளின் வழியே நம்முள் கடத்துகிறது. இந்தப் படத்துக்கு கார்ட்டர் பர்வெல் அளித்திருக்கும் பின்னணி இசை, கதாபாத்திரங்களின் உணர்வுகளாக ஒலிக்கிறது. பென் டேவிஸின் நேர்த்தியான ஒளிப்பதிவு நம்மை அந்தத் தீவுக்கே அழைத்துச் செல்கிறது.

பகட்டோ பிரம்மாண்டமோ இன்றி, ஒரு சிறிய தீவில் வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளை மட்டும் கொண்டு, ஓர் உன்னத திரை அனுபவத்தை இயக்குநர் மார்டின் மெக்டோனா நமக்கு அளித்திருக்கிறார். ஒரு நல்ல திரைப்படம் என்பது படம் பார்த்த பிறகு நமக்குள் உரையாடலை நிகழ்த்த வேண்டும். இந்தப் படமும் நமக்குள் உரையாடலை நிகழ்த்துகிறது. ஆனால், அந்த உரையாடல் நமது வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைக்கும் விதமாக உள்ளது.

இரண்டு நண்பர்களின் பிரிவின் மூலம் மனித மனத்தின் முரண்களை அலசும் இந்தத் திரைப்படம், இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 9 பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x