

இசைக்கு மயங்கியவர் இங்கு திசைக்கு ஒருவர் இருப்பார். இசை எந்த வடிவில் இருந்தாலும் நாம் ரசிக்கத் தயங்கியதில்லை. அப்படி ஒரு விளம்பரத்தில் மெருகேறி, பின் திரையிசையில் சூப்பர் ஹிட் பாடலாக உருமாறிய இசைத் துணுக்கு எதுவெனத் தெரியுமா?
தமிழ்த் திரையிசையின் பல முடிசூடா மன்னர்களின் இசையமைப்பில் நம் மனம் விரும்பும் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த தருணத்தில் புதுவிதமான இசையில் நம் அனைவரது காதுகளிலும் கவனத்தை ஈர்த்த பாடல் இது.
முற்றிலும் புதுபரிமாணத்தில் தடம் பதித்து, டிஜிட்டல் இசையின் முன்னோடியாகத் திகழும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான முதல் திரைப்பாடல் அது. 1992இல் மணி ரத்னம் இயக்கத்தில் அப்போதே ‘பான் இந்தியா’வாக வலம்வந்த படமான ‘ரோஜா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடல்தான் அது. சரி, இந்தப் பாடலை எந்த விளம்பரத்திலும் நாங்கள் பார்த்ததில்லையே சாரி கேட்டதில்லையே என்று நீங்கள் நினைப்பது சரியே. ஆனால், அந்தப் பாடலில் சில நிமிடங்களே வந்தாலும் நம்மை முணுமுணுக்க வைத்த ‘ஏலேலோ... ஏலே ஏலேலோ... ’ என்று பரிசல் ஓட்டிவருபவரின் குரலாக ஒலித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த ‘ஏலேலோ’ என்கிற வரிகளே ஒரு விளம்பரத்தில் பூத்த கிராமிய மெட்டு.
80களின் இறுதியில் வந்த ஏஷியன் பெயிண்ட் விளம்பரம்தான் அது. இப்பொழுது ஞாபகம் இருக்கிறதா அந்த ‘ஏலேலோ’ எதிரொலியை? நினைவில் இல்லை என்றால் 90ஸ் கிட்ஸ் போல நீங்களும் இந்த விளம்பரத்தை யூடியூபில் (https://www.youtube.com/watch?v=Uvn171XY_3k) பார்த்து மகிழுங்கள்.
இசைப்புயல் இதோடு நிற்கவில்லை. ஒரு பனியன் கம்பெனி விளம்பரத்திற்குப் போட்ட மெட்டை இன்னொரு திரைப்படப் பாடலுக்கு நடுவிலும் போட்டிருக்கிறார். அதே டெய்லர், அதே வாடகை என்பதுபோல் அதே மணி ரத்னம் இயக்கத்தில் அதற்கடுத்த வருட படைப்பாக 1993இல் வெளியான ‘திருடா திருடா’ படத்தில் ‘தீ தீ தித்திக்கும் தீ’ என்று புஜம் புடைக்க வைத்த பாடல். அந்த பாடலில் ‘தகிட திகு தகிட தகிட திகு... தகிட தலாங்கு தக திமி தா...’ என்கிற வரிகளின் மெட்டு டான்டெக்ஸ் பனியன் விளம்பரத்தில் இடம் பெற்ற மெட்டு.