

தமிழில் ‘ஹிப் ஹாப்’ இசையை அதன் முழு வீச்சுடன் கையாண்டு, சுயாதீன இசை ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. பத்து ஆண்டுகளுக்கு முன், ‘கிளப்புல மப்புல’ பாடல் மூலம் தனது சுயாதீன இசைப் பயணத்தைத் தொடங்கிய ஆதி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணிக் கதாநாயகன், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல தளங்களில் வெற்றிகளைக் குவித்து வருபவர்.
‘ஜல்லிக்கட்டு நம் அடையாளம். அடையாளம் இழந்தால் தாய் நாட்டிலும் நாம் அகதிகள்தான்!’ என்கிற முழக்கத்துடன் மெரினா புரட்சிக்கு முன் இவர் வெளியிட்ட ‘டக்கரு டக்கரு’ பாடல், ஆவணப்படத் தன்மையுடன் இளைஞர்களை உசுப்பியது. சினிமா, சுயாதீன இசை ஆகியவற்றுடன் தமிழ் மொழியையும் தமிழ் அடையாளங்களையும் ஆய்வு நோக்கில் எடுத்துக்காட்டும் ஆவணப்படங்களையும் தயாரித்து வெளியிட்டுவருகிறார்.
இவரது ‘தமிழி’ ஆவணப்படம், உலகத் தமிழர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது. இதற்கிடையில், தன்னைப் போன்ற சுயாதீன இசைக் கலைஞர்களை அடையாளம் காட்டுவதற்காக ‘அண்டர்கிரவுண்ட் ட்ரைப்’ என்கிற புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். அதையொட்டி அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
சினிமாவில் இயங்கிக்கொண்டே, தமிழ், தமிழர் பண்பாடு என அசராமல் செயல்படுவதற்கான சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?
நம் மொழியிடமிருந்துதான் அந்த சக்தி கிடைக்கிறது. எனது தாத்தா ஒரு தமிழாசிரியர். அப்பா ஒரு கவிஞர். ஆங்கிலக் கல்வி முறையில் படித்து வளர்ந்த எனக்கு, தமிழின் தொன்மையையும் அதன் உயர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் அவர்கள்தான். தொடக்கத்தில், தாய்மொழி மீது எல்லோருக்கும் இருப்பதைப்போல் உணர்ச்சிபூர்வமாகத்தான் எனது மொழிப்பற்றும் இருந்தது.
பின்னர் வயது கூடக்கூட உணர்ச்சிவசப்படுவதை விட்டுவிட்டு, தமிழ் மொழியின் தொன்மையை, தரவுபூர்வமாக, தகவல்பூர்வமாக இன்றைய தலைமுறையினருக்குக் காட்சிபூர்வமாகக் கொண்டுசென்று உணர்த்த விரும்பினேன். நம்மில் யாராவது ஒருவர் இதைச் செய்தே ஆகவேண்டிய பண்பாட்டுச் சிக்கல் மிகுந்த காலகட்டம் என்னைத் ‘தமிழி’ ஆவணப்படம் நோக்கித் தள்ளியது.
இந்த ஆவணப்படத் தொடருக்காக 3 ஆண்டுகள் நாடு முழுவதும் சுற்றித் திரிந்தோம்.பேராசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், பன்மொழி ஆய்வாளர்கள் பலரையும் பேட்டியெடுத்தோம். ‘தமிழி’ தொடரின் ஆழத்தையும் தேடலையும் அதன் எளிமையையும் பார்த்த கல்வியாளர்கள் பலர், அதைப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
அதனால் ‘தமிழி’யில் இடம்பெற்ற அத்தனை தகவல்களையும் தொகுத்துப் புத்தகமாக வெளியிட இருக்கிறோம். அடுத்து ஆதிச்சநல்லூர் அகழாய்வைத் தமிழக அரசு தொடங்கியதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதை ஆவணப்படமாகத் தயாரித்து முடித்திருக்கிறோம். அதுவும் விரைவில் வெளிவரும்.
சுயாதீன இசைக் கலைஞனாக உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தும் சினிமாவில் நடிக்க வந்தது ஏன்?
சுயாதீன இசைக் கலைஞனாக, நான் வாழ்க்கையைத் தொடங்கியபோது,. ‘சினிமாவில் பாட மாட்டேன், இசையமைக்க மாட்டேன்’ என்று பேட்டியெல்லாம் கொடுத்திருக்கிறேன். சுயாதீன இசை, தமிழில் ஒரு தனித் துறையாக வளரும் என்று அப்போது நம்பினேன். ஆனால், ஆண்டுகள் நகர்ந்தனவே தவிர அப்படி எதுவும் நடக்கவில்லை.
சரி.. சினிமாவில் இசையமைப்பாளராகி இணைகோடாகச் சுயாதீன இசையையும் பிரபலப்படுத்தலாம் என்று இறங்கியபோது, ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளரின் இடம் சிறு புள்ளி மட்டும்தான் என்பதை உணர்ந்தேன். அதன்பிறகுதான் நடிப்பு, எழுத்து, இயக்கம் என்கிற சாவி என் கையில் கிடைத்தது.
இதன் பிறகே சினிமா வியாபாரமும், இசைக்கான சந்தையும் எப்படி இயங்குகின்றன என்பது உட்பட சகல நுட்பங்களையும் சினிமா எனக்கு அனுபவப் பாடமாகக் கற்றுக்கொடுத்தது. 2012இல் தொடங்கி 2022 வரை இந்தப் பத்தாண்டுகள் என்னை நிலைநிறுத்திக்கொள்ள சினிமா உதவியது. அது சிறந்த அனுபவமும் போராட்டமும் மிகுந்ததாக அமைந்தது.
‘அண்டர்கிரவுண்ட் டிரைப்’ என்கிற உங்களுடைய புதிய நிறுவனம் எதற்காக?
இன்று சினிமாவில் எனக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், தகவல் தரவுகள், மார்க்கெட்டிங் நெட்ஒர்க் என எல்லாம் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, சுயாதீன இசையில் சாதிக்க வேண்டும் என்று வரும் புதியவர்கள் யாரும் நான் எதிர்கொண்ட பத்தாண்டுப் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களுக்குத் திறமையிருந்தால் போதும்.
அவர்களது ஆல்பத்தைத் தயாரித்து, நேரடியாக ‘மெயின் ஸ்டிரீ’முக்கு அவர்களைக் கொண்டுபோய் நிறுத்துவதற்காக ‘அண்டர்கிரவுண்ட் ட்ரைப்’ என்கிற இந்தச் சுயாதீன இசைக்கான தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறேன். ஆண்டுக்கு பத்து புதிய தமிழ் ஹிப் ஹாப் கலைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அறிமுகப்படுத்துவதுதான் நோக்கம்.
இணையத்தின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு சுயாதீன இசைக் கலைஞர்கள் நிறைய பேர் வந்திருந்தாலும், ரசிக்கத் தகுந்த பாடல்களைக் கொடுத்திருந்தாலும் பாடல்கள் புகழ்பெறும் அளவுக்கு அதை உருவாக்கிய கலைஞர்கள் மீது புகழ் வெளிச்சம் படுவதில்லையே ஏன்?
ஒரே காரணம்தான்; கடந்த பல ஆண்டுகளில் நூற்றுக்கணக்கில் வெளிவந்திருக்கும் சுயாதீன இசைப் பாடல்களில் பெரும்பாலானவை, சினிமாவில் வராத சினிமா பாடல்கள் போல் ஆகிவிட்டன. ‘ஸ்ட்ரீமிங்’ தளங்கள் முறைப்படுத்தப்பட்ட பிறகு, சுயாதீன இசைப் பாடலை வாங்கி, திரைப்படங்களில் சினிமா பாடல்களாகப் பயன்படுத்துவதும் நடக்கிறது.
சினிமா இலக்கணத்தின்படி காட்சிப்படுத்தப்படும் சுயாதீன இசைப் பாடல்கள் ‘சினிமாட்டிக்’ஆகத்தான் இருக்கும். அப்படிச் செய்யும்போது, அந்தப் பாடல்கள் தனித்துவத்தை இழந்துவிடுவதுடன், அதைப் படைத்த கலைஞர்கள் வெளிச்சத்துக்கு வருவதற்குப் பதிலாக, அந்தப் பாடலில் தோன்றும் சினிமா கலைஞர்களுக்கு அது போனஸ் புகழாகிவிடுகிறது.
சுயாதீன இசை என்பது, அதைப் படைப்பவன் தனக்குத் தோன்றும் கருத்துகளைத் தங்குதடையின்றி சொல்லும் வடிவமாக, அதன் காட்சிப் பதிவில் அவனே தோன்றி நிகழ்த்தும் ஒன்றாகவே உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சனுக்கான இடமும் வில் ஸ்மித்துக்கான இடமும் தனித்தனியாக இருக்கின்றன.
சுயாதீன இசையில் அதேபோன்ற நிலை இங்கேயும் வரவேண்டும் என்பதற்காகத்தான் அதைப் படைக்கும் கலைஞர்களை முன்னிலைப்படுத்த ‘அண்டர்கிரவுண்ட் ட்ரைப்’ என்கிற இந்த முன்முயற்சி.
வணிக சினிமாவுக்கு வெளியே, தமிழ், தமிழர், சுயாதீன இசை என உங்களது செயல்பாடுகள் எதையும் ‘கிளைம்’ செய்ய விரும்புவதில்லையே ஏன்?
எளிமையாகச் சொல்வதென்றால், வரலாற்றின் காலக் கோட்டில் நாமெல்லாம் காலத்தின் கழிவுகள். அவ்வளவுதான். இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கழித்து, நாமெல்லாம் யார் என்று யாரும் தெரிந்து கொள்ளப்போவதில்லை. வரலாற்றுக்கும் நாம் யார் என்கிற முகத்தின் தேவை அவசியமற்றது.
ஆனால், நம் காலத்தில், அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன செய்தோம் என்பது மட்டும்தான் காலம் கடந்தும் நினைவு கூரப்படும். அதில் நம் செயலே எஞ்சி நிற்கும். முகமோ பெயரோ அல்ல.