

பெளத்தம் எனும் பெரு மதத்தை உலகத்துக்குக் கொடுத்தது போலவே, சதுரங்கம் எனும் விளையாட்டையும் இந்தியா கொடுத்துள்ளது.
அதில், பல புதிய அணுகுமுறைகள், விதிகளைப் புகுத்தி இன்றைய நவீன செஸ் விளையாட்டாக மேம்படுத்தியவர்கள் மேலை நாட்டினர். ஆனால், அதன் வலுவான அடிப்படையை உருவாக்கியவர்கள் நாம் என்பதில் பெருமைப்பட்டுக்கொள்ளும் தருணம் இது.
தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், மல்யுத்தம், குத்துச் சண்டை ஆகியவற்றைக் கதைக்களமாகக் கொண்ட விளையாட்டுத் திரைப்படங்கள், காட்சி அனுபவத்தைக் கொடுப்பதில் பார்வையாளர்களை ஏமாற்றுவதில்லை. அதற்குக் காரணங்கள் உண்டு.
பிரபலமான விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி அவை ‘பயோபிக்’ படங்களாக வெளிவருவது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரம், புனையப்பட்டத் திரைக்கதை எனில், இங்கே பட்டியலிட்டுள்ள விளையாட்டுகளில் கதாபாத்திரங்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் ஆடுகளம் பெரிதாக இருப்பதால் காட்சிமொழிக்கான எல்லை விரிவடைந்துவிடுகிறது.
ஆனால், செஸ் விளையாட்டை மையமாக் கொள்ளும் படங்களுக்கு, ஆடுகளம் வழியாக உருவாக்க வேண்டிய காட்சிகளில் துள்ளலையும் துடிப்பையும் ஒரு எல்லையைத் தாண்டி படமாக்குவது பெரும் சவால்! சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் முடிந்துவிடக் கூடிய ஆட்டங்கள் வந்துவிட்டாலும், விளையாட்டு நிகழும் செஸ் கட்டம் மிகச் சிறியது.
இருவர் மட்டுமே ஆடக்கூடிய ஆட்டத்தின் நகர்வுகளை வியூகத்துடன் மேற்கொள்ள வீரர்கள் எடுக்கும் கால அவகாசம், காட்சிமொழிக்கு பெரும் சவால்! வீரர்களின் நகர்வுகளில் இருக்கும் நிதானத்தை ‘டைம் லேப்ஸ்’ உத்தி மூலம் தொடர்ந்து சமாளிக்க முடியாது. அப்படிச் செய்வதும் செஸ் கட்டத்தையே காட்டிக்கொண்டிருப்பதும் பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை உண்டு பண்ணக்கூடியவை.
இந்த இக்கட்டைச் சமாளிக்க, செஸ் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சித்தரிக்கும்போது திரைக்கதைக்கான ‘நாடகத் தன்மையை’ கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது.
தவிர, செஸ் விளையாட்டை, மனித வாழ்க்கையின் உருவகமாகப் பார்க்கும் சிந்தனை மரபு, இந்த நாடக மாக்கத்துக்குப் பிடிமானம் தருகிறது. இந்த பின்னணியில் இருந்து செஸ் சினிமாக்களை அணுகுவது, தடங்கலற்ற திரை அனுபவத்தைக் கொடுக்கலாம்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளில் உருவாக்கப்பட்ட ‘ஆஃப் பீட்’ செஸ் படங்கள் சுவாரஸ்யம் குன்றாதவை. இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தப்படும் 5 செஸ் சினிமாக்கள் இறுதியான பட்டியல் அல்ல. உள்ளடக்கம், படமாக்கம், திரை அனுபவம் ஆகியவற்றுடன் செஸ் விளையாட்டுக்குத் திரைக்கதையில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அளவுகோலாகக் கொண்ட, ‘ஆஃப் பீட்’ தெரிவுகளாக இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
லைஃப் ஆஃப் எ கிங்
ஓர் உண்மைக் கதையின் அடிப்படையில், ‘பயோபிக்’ தன்மையுடன் கடந்த 2014இல் வெளியான அமெரிக்கப் படம் ‘லைஃப் ஆஃப் எ கிங்’ (Life of a King).
இளமையில் செய்த குற்றத்துக்காக இருபதாண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டு வெளியே வருகிறார் 45 வயது யூஜின் (கியூபா குடிங் ஜூனியர்). முன்னாள் சிறைவாசி என்கிற சமூகத்தின் பார்வை, விடுதலைக்குப் பிறகான அவரது வாழ்க்கையைக் கடினமாக்குகிறது.
பல போராட்டங்களுக்குப் பிறகு வாஷிங்டன் டி.சி. உயர்நிலைப் பள்ளியில் பாதுகாவலர் வேலையில் சேர்கிறார். அங்கே பதின்மத்தின் இறுதியில் இருக்கும் பல மாணவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துதல், குற்றவுலகினருடன் தொடர்புகொள்ளுதல் என மடைமாறிச் செல்ல முயல்கின்றனர். சிறு வயதில் தன்னை ஆற்றுப்படுத்தவும் வழிகாட்டவும் ஆள் இல்லாமல் போனதுபோல் இந்த மாணவர்கள் போய்விடக் கூடாது என எண்ணும் யூஜின் அதுபோன்ற மாணவர்களைக் காப்பாற்ற ஒரு வியூகம் வகுக்கிறார்.
கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து செஸ் கிளப் ஒன்றைத் தொடங்குகிறார். சிறையில் கற்றுக்கொண்ட செஸ் நுட்பங்களை, வழி தவறும் மாணவர்களுக்கு அங்கே கற்றுக்கொடுப்பதன் மூலம், வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் அவர்கள் கண்டறிய உதவுகிறார்.
அவர் பயிற்சி அளித்த மாணவர்களில் ஒருவனான தஹிம், அமெரிக்காவின் கிராண்ட்மாஸ்டர் சாம்பியனிடம் கௌரவமாகத் தோல்வியடைந்து பாராட்டுகளைப் பெறுவதுதான் படம். பல தரமான கதைப் படங்களின் எழுத்தாளரும் இயக்குநருமான ஜேக் கோல்ட்பெர்கர் இயக்கிய படம்.
சர்ச்சிங் ஃபார் பாபி ஃபிஷர்
அது 1972ஆம் வருடம், செப்டம்பர் முதல் நாள். அன்றுதான் ஐஸ்லாந்தில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடந்தது. அதில் அமெரிக்காவின் பாபி ஃபிஷர், அதற்குமுன் செஸ் உலகச் சாம்பியனாக இருந்த ரஷ்யாவின் போரீஸ் பாஸ்காய் என்பவரைத் தோற்கடித்தார்.
8 வயதில் ஒரு பொதுப் பூங்காவில், வீடற்ற ஒரு அகதி மனிதருடன் செஸ் விளையாட்டின் விதிகளே தெரியாமல் தன்னுடைய முதல் காய் நகர்த்தலைச் செய்த பாபி ஃபிஷரின் வெற்றிக் கதை, கடினமான, கரடு முரடான இளமைப் பருவத்தைக் கொண்டிருந்தது. செஸ்ஸின் மரபார்ந்த விளையாட்டு வியூகங்களைப் புறந்தள்ளி விளையாடத் துணிந்தவர் ஃபிஷர்.
தனக்கு முறையாக செஸ் சொல்லிக் கொடுத்த ஆசிரியருடன் முரண்பட்டு, பின்னர் தனக்கான ஆடுமுறையை, தானே எப்படிக் கண்டறிந்து உலக சாம்பியனாக உயர்ந்தார் என்பது வரையிலான அவரது வாழ்க்கைதான் படம். ஸ்டீவன் ஸேலியன் இயக்கத்தில், ஹாலிவுட்டின் தலை சிறந்த நடிகர்கள் பங்குபெற்று வாழ்ந்த ‘சர்ச்சிங் ஃபார் பாபி ஃபிஷர்’ (Searching for Bobby Fischer), செஸ் சினிமாக்களின் எந்தப் பட்டியலிலும் தவிர்க்க முடியாத ஒன்று.
தி லூஷின் டிஃபென்ஸ்
காதலையும் செஸ் விளையாட்டையும் இணைத்து, ஒரு காவியம் படைக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் டச்சு பெண் இயக்குநரான மார்லின் கோரீஸ். 1920களில் இத்தாலியில் கதை நடக்கிறது. செஸ் விளையாட்டில் பல சாதனைகள் படைத்த முப்பது வயது அலெக்ஸாண்டர் இவானோவிச் லூஷின், மனத்தளவில் பல காயங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஒரு சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வடக்கு இத்தாலிக்கு வருகிறார். அங்கே தன் வயதையொத்த நடாலியா எனும் பெண்ணைக் கண்டு காதலில் விழுகிறார். காதலும் செஸ் போட்டிகளும் அலையும் கரையுமெனத் தழுவிக்கொண்டு கரைபுரள, இறுதிப் போட்டியில் லூஷினுக்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கிறது.
தனக்குச் செஸ் சொல்லிக்கொடுத்த ரஷ்ய ஆசிரியர் லியோ வேலன்டினாவுடன் விளையாட வேண்டிய நெருக்கடி உருவாகிறது. இந்த உக்கிரமான போரில் லூஷின் இழந்தது காதலையா, வெற்றியையா என்பதுதான் படம். 2000இல் வெளியாகி வசூல் சாதனை படைத்தது இந்தச் செஸ் காதல் காவியம்.
டேஞ்சரஸ் மூவ்ஸ்
சோவியத் ரஷ்யா - அமெரிக்கா ஆகிய இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் விண்வெளி, தொழில்நுட்பம், விளையாட்டு என பல துறைகளில் பனிப்போர் உச்சம் தொட்டிருந்த தொண்ணூறுகளின் நடுப்பகுதி அது. ஜெனிவாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
அதன் இறுதிப் போட்டியில் எதிரும் புதிருமாக இரண்டு ரஷ்ய சாம்பியன்கள் மோதிக்கொண்டார்கள். இயல்பாகவே யுத்த மனோபாவம் கொண்டிருக்கும் இந்த விளையாட்டில், ஒரே நாட்டையும், இனத்தையும் சேர்ந்த சகோதரர்கள் என்கிற உணர்வு இருவருக்குமே உள்ளூர இருக்கிறது.
ஆனால், அவர்கள் சார்ந்து நிற்கும் சித்தாந்தம், செஸ் களத்தில் அந்த உணர்வைக் கொன்றொழித்து, போட்டியில் அவர்களை மூர்க்கம் கொள்ள வைக்கிறது. அப்படி என்னதான் சித்தாந்த யுத்தம் இருவருக்கும்?
மூத்தவரான அகிவா, கம்யூனிசத்தின் தீவிர ஆதரவாளர். முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டினால் மட்டுமே உலகிலிருந்து வறுமை மறையும் என்று நம்புகிறவர்.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் இளையவரான பாவியஸ் ஒரு முன்கோபி. சோவியத் ரஷ்யாவின் ஒடுக்குதல்களிலிருந்து தப்பிக்க, மேற்குலக நாடுகளில் சுற்றித் திரிந்தவர். அங்கெல்லாம் அடையாளச் சிக்கலை எதிர்கொண்டு ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டவர்.
அகிவா - பாவியஸ் இடையிலான இறுதிப் போட்டியில், இருவருடைய சித்தாந்தங்களும் எவ்வாறு மோதி உடைகின்றன என்பதே பிரெஞ்சு மொழியில் ரிச்சர்ட் டெம்போ எழுதி, இயக்கியிருந்த ‘டேஞ்சரஸ் மூவ்ஸ்’ (Dangerous Moves) திரைப்படம். நகம் கடித்தபடி ரசிக்க வைக்கும் பரபரப்பான இப்படம், சுவிஸ் நாட்டின் சார்பில் ஆஸ்கரில் போட்டியிட்டுச் சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான விருதை 1984இல் வென்றது.
குயின் ஆஃப் கேட்வே
ஏழைகளும் ஒடுக்கப்பட்டவர்களும் தங்கள் பூர்விக நிலத்திலிருந்து மாநகருக்கு வெளியே தூக்கியெறியப்பட்டு, ‘கேட்வே’ என்கிற பின்தங்கிய பகுதியில் வசிக்கிறார்கள். அங்கே தான் நம்முடைய 10 வயது நாயகி ஃபியானோ தனது தாய், தம்பிகளுடன் வசிக்கிறாள். குடும்பத்தின் வறுமையை வெல்ல, தாய் சுத்தம் செய்து தரும் மக்காச்சோளத்தைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்றுவருகிறாள்.
குழந்தைத் தம்பியை பராமரிக்கத் தாய்க்கு உதவுகிறாள். கல்வி அவளுக்கு எட்டாமல் கண்ணாமூச்சி காட்டுகிறது. அங்குள்ள சிறார்களுக்குக் கால்பந்தும் செஸ்ஸும் சொல்லித்தரும் ராபர்ட் கடெண்டோ என்கிற ‘மிஷனரி’ இளைஞரைச் சந்தித்தபிறகு ஃபியானோவின் உலகம் மாறுகிறது.
செஸ் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் ஃபியானோ, மெல்லமெல்லக் கவனம் பெற்று, கடுமையான ஒடுக்குதல்களைத் தாண்டி, வலிகளுக்கும் கண்ணீருக்கும் நடுவில் உகாண்டா தேசத்தின் தேசிய சாம்பியன் என்கிற மகுடத்தை வென்றெடுக்கிறாள். சினிமாவுக்கான ஜோடனைகளோ மிகையோ இல்லாமல் உருவான இந்தப் படத்தை, இந்தியாவின் பெருமைக்குரிய பெண் இயக்குநர்களில் ஒருவரான மீரா நாயர் இயக்கியிருக்கிறார்.
ஈ.எஸ்.பி.என். பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றை அடிப்படையாக வைத்து, வில்லியம் வீலர் திரைக்கதை எழுத, வால்ட் டிஸ்னி தயாரிப்பில் கடந்த 2016இல் வெளியான படம் இது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பாருங்கள். உங்கள் கண்கள் எங்கும் நகராதபடி ‘செக்’ வைக்கும்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in