

‘விக்ரம் வேதா’, ‘கைதி’, ‘சாணிக் காயிதம்’, ‘ராக்கெட்ரி’ என பத்து வருடங்களில் ஐம்பது படங்களைக் கடந்து இசையமைத்து வருகிறார் சாம் சி.எஸ்.
சமீபத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடருக்கு நாட்டார் இசை, மேற்கத்திய இசை ஆகிய இரண்டையும் கலந்து இவர் வழங்கிய பின்னணி இசை, ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியிருக்கிறது. அந்தத் தொடரின் எல்லா எபிசோட்களுக்குமான பின்னணி இசையை முன்னரே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
பொதுவாகப் பாடல்களுக்குத்தானே முன்னதாகவே மெட்டமைத்து இசையமைப்பார்கள். இது என்ன புதுவிதமாக இருக்கிறது என்று அவரிடமே கேட்டோம்.
“படம் எடுத்து முடிக்கப்பட்டதும் படத்தொகுப்புப் பணி முடிந்து, குரல் சேர்ப்பு முடிந்து வரும் பிரதியைப் பார்த்து, அதற்கு ஏற்ப இசையமைப்பது ஒரு முறை. ஆனால், நான் திரைக்கதையைப் படித்துவிட்டு, காட்சி வாரியாகப் பின்னணி இசையை முன்னரே இசையமைத்துக் கொடுக்கிறேன்.
உதாரணத்துக்கு ‘விக்ரம் வேதா’வின் திரைக்கதையைப் படித்ததும் விக்ரம் கதாபாத்திரம் மனத்திரையில் எழுந்தது. அதன் அறிமுகத்துக்கு, அதன் முக்கியமான ‘எமோஷனல்’ தருணங்களுக்கு என்று முன்னதாகவே இசையமைத்துக் கொடுத்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் இப்படி முன்னரே பின்னணி இசை அமைத்தால் என்ன என்று தோன்றியது.
‘கைதி’யில் அதை முழுமையாக முயன்று வெற்றி கண்டேன். இயக்குநரும் படக்குழுவினரும் பின்னணி இசையைக் கேட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். அப்படித்தான் ‘சுழல்’ தொடருக்காக 72 மாசிடோனிய வாத்தியக் கலைஞர்கள் வந்து லைவ் ஆக வாசித்துக் கொடுத்தார்கள். அவர்களுக்கு இணையாக நம்முடைய நாட்டார் இசைக்கலைஞர்களின் வாசிப்பும் இருந்தது.
‘கைதி’யில் டில்லி என்கிற கதாபாத்திரம் எப்படிப்பட்டது, அது நடந்து வந்தால் எப்படியிருக்கும், அதற்கு எந்த மாதிரியான இசையைக் கொடுக்கலாம் என்பதைக் காட்சியாக எடுக்கும் முன்பே கற்பனையில் விரித்துப் பார்க்க இலக்கிய வாசிப்பு எனக்கு உதவுகிறது.
இப்போது எனக்குத் தூங்கக்கூட நேரமில்லை. அவ்வளவு படங்களுக்கு இரவு பகலாக இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் நடுவில் காலையில் ஒரு மணி நேரமும் இரவு தூங்கும் முன்பு ஒரு மணிநேரமும் புத்தகம் வாசிக்கிறேன். வாசிப்புதான் எனது இசைக் கற்பனையை ஊற்றெடுக்கச் செய்கிறது.
பள்ளிக் காலத்தில் பாலகுமாரனிலிருந்து ஜெயகாந்தனுக்குத் தாவினேன். பிறகு, வைரமுத்து, அப்துல் ரகுமான் என்று கடந்து, அங்கிருந்து வண்ணதாசன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன், இமயம் என வாசிப்பு தொடர்கிறது. எனது சொந்த ஊர் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன் பட்டி.
நான் இளங்கலைப் படித்துக்கொண்டிருந்தபோது ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கவில்லை என்றால் நீ வேஸ்ட்!’ என்றார்கள். ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மெல்லமெல்லப் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினேன். அப்போது, பாண்டிய நாட்டுக்காரனான என்னை, சோழ நாட்டுக்குள் அழைத்துக்கொண்டுவந்துவிட்டார் கல்கி.
அப்படியொரு வர்ணனை, கதாபாத்திரச் சித்தரிப்பு! காவிரியும் கல்லணையும் என் கற்பனையில் பிரம்மாண்டமாக விரிய, அந்த ஊரில் போய் வாழ வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டது. காவிரிக் கரையில் சுற்றித் திரியவேண்டும் என்பதற்காகவே திருச்சி, புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்து எம்.சி.ஏ.படித்தேன்.
நாவல்களையும் சிறுகதைகளையும் வாசிக்கும் போது, கதாபாத்திரங்கள் மனத்திரையில் உயிர் பெறுவது மட்டுமல்ல, கதைக்களமும் விரிந்து.. மூளைக்குள் பின்னணி இசையும் சேர்ந்தே ஒலிக்கிறது. அந்த இசையின் ஒலிகளைப் புதிதுபுதிதாக உருவாக்கி, ரசிகர்களுக்குக் கதையின் களத்துக்குள் வாழும் உணர்வைக் கொடுக்க விரும்புகிறேன்” என்று உருகுகிறார் சாம்.