Published : 06 May 2016 11:56 AM
Last Updated : 06 May 2016 11:56 AM

நடிகர், அனிமேட்டர், இயக்குநர்!- ’நிழல்கள்’ ரவி சிறப்பு பேட்டி

தென்னிந்திய மொழிகளைக் கடந்து இந்திப் படவுலகம் வரை முன்னேறி சுமார் ஐநூறு படங்களில் நடித்துமுடிந்துவிட்டார் ‘நிழல்கள்’ ரவி. தீராத தாகத்துடன் நடிப்பைத் தொடரும் அதேநேரம் சினிமா இயக்கத்தில் முதல்முறையாகக் களமிறங்குகிறார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கான தொலைக்காட்சி விளம்பரத்தில் ‘உலகம் உயிர்பெறும் உங்கள் மொழியில்’ என கணீரென்று குரல்கொடுத்திருந்த அவர், “இயக்குநர் ஆகும் செய்தியை உங்களிடம்தான் முதலில் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது” என வாஞ்சையுடன் பேச ஆரம்பித்தார். அவரிடம் உரையாடியதிலிருந்து…

கடந்து வந்த பாதையில் உங்கள் மனதுக்கு நெருக்கமான சில படங்கள் இருந்திருக்கும் அல்லவா?

ஒரேயொரு காட்சியில் வந்துபோகிற கதாபாத்திரம் என்றாலும் அது எனக்கு நெருக்கமானதுதான். எனக்குத் தகுதியான கதாபாத்திரங்களைத்தான் தொடர்ந்து கொடுத்திருக்கிறார்கள். என்றாலும் ஐநூறு படங்களில் ‘நிழல்கள்’, ‘நாயகன்’, ‘மறுபடியும்’, ‘நான் பிடிச்ச மாப்பிள்ளை’ என்று 50 படங்களைத் தனியே எடுத்துவிடலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து என்னைச் செதுக்கியவர் நடிகர் பாலாஜி.

வில்லன் நடிகர் என்ற இமேஜ் உங்கள் மீது படியாமல் போனதற்கு என்ன காரணம்?

எனது முகத்தை எப்படி வேண்டுமானும் மோல்ட் செய்துகொள்ளலாம் என்பதுதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். படம் முடியும்வரை இவன் நல்லவனா கெட்டவனா என்ற குழப்பத்திலேயே என் மீது கண்களைக் குவித்திருப்பார்கள் ரசிகர்கள். ஆனால் படத்தின் முடிவில் நான் கெட்டவனாக இருப்பேன். இதுபோன்ற கதாபாத்திரங்களை திரும்பத் திரும்ப நான் எத்தனைமுறை ஏற்று நடித்தாலும் ரசிகர்களுக்கு என் மீது அதே குழப்பம் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கும். இந்த அம்சம் எல்லா நடிகர்களுக்கும் அமைந்துவிடாது. என் பலம் இதுதா்ன். குணச்சித்திரம், ஹீரோ, வில்லன், திரும்பவும் ஹீரோ, திரும்பவும் வில்லன், மறுபடி குணச்சித்திரம் என்று நிழல் தன் ரூபத்திலும் மாறிக்கொள்வதுபோல எனக்கான பிம்பம் அமைந்துவிட்டது.

‘நிழல்கள்’ ரவி என்றாலே உங்கள் குரலே பாதி நடிப்பைத் தந்துவிடும். உங்கள் குரலால் உங்களுக்கு நடந்த நன்மைகள் என்ன?

எனது குரல்தான் எனக்கு முதல் வாய்ப்பையே வாங்கிக்கொடுத்தது. கோவையில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு நடிகனாவது என்ற முடிவுடன் சென்னை வந்துவிட்டேன். தி. நகரில் இன்று ரெட் ரோஸ் பில்டிங்காக இருக்கும் வீட்டில் அன்று ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் படப்பிடிப்பு. ‘நினைவோ ஒரு பறவை’ பாடல் காட்சியை பாரதிராஜா ஷூட் செய்துகொண்டிருந்தார். மனோபாலா, மணிவண்ணன், ரங்கராஜ் என்று ஏகப்பட்ட உதவியாளர்கள். உதவியாளர் ஒருவரை அருகே அழைத்து “ ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் விஜயனுக்குப் பொருத்தமாக இருக்கிறமாதிரி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் வேணும், தேடிப்பிடிங்க”ன்னு சொன்னார். இதைக் கேட்டுகொண்டிருந்த நான் உடனே இடையில் மூக்கை நுழைத்தேன். “சார் நான் நல்லா டப்பிங் பேசுவேன் சார்” என்றேன். அவரது உதவியாளர்களோ என்னடா இவன், நடிக்க வாய்ப்புத் தேடி வந்துட்டு டப்பிங் பேசறேன் என்று சொல்லி உள்ளே நுழையுறான் என்று ஆச்சரியப்பட்டார்கள். எனது ஆர்வத்தைக் கண்ட பாரதிராஜா “நாளை பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்துடுங்க” என்றார். நான் டப்பிங் தியேட்டரை முன்னே பின்னே பார்த்தது கூட கிடையாது.

மறுநாள் பிரசாத் ஸ்டூடியோ சென்றதும் சவுண்ட் என்ஜினியரிடம் அழைத்துச் சென்று எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் பாரதிராஜா வந்தார். அவரிடம் சவுண்ட் என்ஜினியர் “ எங்க சார் பிடிச்சீங்க இந்தப் பையனை?! நல்ல மெட்டாலிக் வாய்ஸ். கணீர்ன்னு இருக்கு.” என்றார். எனக்கு சந்தோஷத்துல கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. மறுநாள் பல காட்சிகளுக்கு டப்பிங் பேசிவிட்டேன். அதற்கும் அடுத்த நாள் சென்றபோது எனக்குப் பதிலாக இயக்குநரே டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். என்னடா இது! முந்தா நாள்தானே நமது குரலை மெட்டாலிக் வாய்ஸ் என்று பாராட்டிக்கொண்டிருந்தார்கள் என்று குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தேன். பிறகு மதிய உணவு இடைவேளையில் டப்பிங் அறையை விட்டு வெளியே வந்தார் பாரதிராஜா. என்னைக் கண்டதும் தோளில் தட்டிக்கொடுத்தபடி “விஜயன் மலையாள ஸ்லாங்கில பேசியிருக்கார். அதை மேனேஜ் பண்ணிப் பேசணும். அதனால நானே பேசிட்டேன். எனிவே.. நீங்க நம்ம படத்துல நடிக்கிறீங்க. படிச்சுட்டு வேலை தேடுற ஒரு பட்டதாரியோட கதை அடுத்த படத்துல நடிக்கத் தயாரா இருங்க” என்றார். இப்படித்தான் என் குரல் எதற்காக நான் சென்னைக்கு வந்தேனோ அதை நிறைவேற்றிக்கொடுத்தது. எனது குரலை மீண்டும் அங்கீகரிக்கும் விதமாக ‘பொம்மலாட்டம்’ படத்தில் நானா படேகருக்குக் குரல்கொடுக்க வைத்தார் பாரதிராஜா.

சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறை கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். ஒரே அச்சில் வார்த்ததுபோல் வரும் கதாநாயக சினிமாக்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

பாகவதர் காலத்திலேயே கதாநாயக சினிமா ஆரம்பித்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவுக்குக் கிடைத்த வெற்றியால்தான் அதை விட மறுக்கிறோம். கிட்டத்தட்ட குதிரைப் பந்தயம் மாதிரிதான் இது. தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் கதாநாயக சினிமாவை நீங்கள் என்றைக்கும் ஒழித்துவிட முடியாது. இங்கே கதாநாயன் வில்லனை மன்னிப்பதைவிட அடித்துக் கொன்றால்தான் ரசிகர்களுக்கு முழுப் படம் பார்த்த திருப்தி கிடைக்கும். ஆனால் இந்தித் திரையுலகம் அப்படியில்லை. அது மிகப் பெரிய சந்தையைக் கொண்ட திரையுலகம். அங்கே அமிதாப் பச்சன் ஒரு ‘சீனி கம்’ ‘பா’, ‘பிக்கு’ மாதிரி படங்களில் நடிக்கிறார். ஆமிர் கான், ஷாருக் கான், சல்மானும்கூட வித்தியாசமாக முயற்சித்து வெற்றிபெறுகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அப்படிப்பட்ட கலைஞனாக கமல் மட்டுமே இருக்கிறார். அஜித்துக்கு ஆரம்ப காலத்தில் அந்த ஆர்வம் இருந்தது. வரும் தலைமுறை நடிகர்கள் இதிலிருந்து விலகி வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். காரணம் கதாநாயகர்கள் செய்யும் அத்தனை சாகசங்களையும் தூக்கிச் சாப்பிடும்விதமாக தற்போது 3டி அனிமேஷன் கதாபாத்திரங்கள் வந்துவிட்டன. அவற்றுக்கு ஹீரோக்களைவிட அதிக அளவில் ரசிகர்கள் பெருகிவிட்டார்கள்.

அனிமேஷன் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் ஒரு அனிமேஷன் பள்ளியை நடத்தி வருகிறீர்கள் இல்லையா?

ஆமாம்! ஒரு கட்டத்தில் குழந்தைகளோடு அனிமேஷன் படங்களைப் பார்க்க ஆரம்பித்து அவற்றின் மீது தனிக் காதலே வந்துவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் அனிமேஷன் படங்கள் இத்தனை ஈர்ப்பதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோதுதான் அவற்றில் இருக்கும் கலை நேர்த்தியே காரணம் என்று புரிந்தது. அனிமேஷன் படங்கள் எப்படி உருவாகின்றன என்று தேடித்தேடித் தெரிந்துகொண்டேன். அனிமேஷனையும் கற்றுக்கொண்டு நானே அனிமேட்டராகவும் ஆகிவிட்டேன். உலகம் முழுவதும் ‘லைவ் ஆக்‌ஷன்’ படங்களுக்கு இருக்கும் சந்தையை விட இவற்றுக்கு அதிகம். வேலைவாய்ப்புகள் அனிமேஷனின் மட்டுமில்லை, கேமிங், பிராண்டிங், ஹெல்த், என்ஜினியரிங் என பல துறைகளில் தேவை இருக்கிறது என்று தெரிந்ததும் மிகக் குறைந்த கட்டணத்தில் அனிமேஷன் சொல்லித்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் தொடங்கியதுதான் அனிபிக்ஸ் அனிமேஷன் அகாடெமி. என்னை வளர்த்த திரையுலகத்துக்கு உருப்படியாக இதைச் செய்திருக்கிறேன் என்று நிறைவாக இருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் அனிமேஷன் சொல்லித்தந்து திறமைக்கேற்ப வேலை வாங்கிக்கொடுப்பதையும் நாங்களே செய்துவிடுகிறோம். இதுவரை 20 பேருக்கு வேலை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். அனிமேஷன், வி.எஃப்.எக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து சாஃப்ட்வேர்களையும் இங்கே சொல்லிக்கொடுக்கிறோம்.

படம் இயக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

மிகச் சிறந்த இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அவர்களது விதவிதமான பாணிகளை உள்வாங்கியிருக்கிறேன். நடிகன் என்ற ஒருநிலையோடு திருப்தி அடைந்துபோய்விடுவதில் எனக்கு விருப்பமில்லை. எனவேதான் திரைப்படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒரு நல்ல நடிகனால் சக நடிகர்களிடமிருந்து தரமான நடிப்பை வாங்கிவிட முடியும் என்று நம்புகிறேன். திரைக்கதை வேலைகள் முடியும் நிலைக்கு வந்துவிட்டன. மிக விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்க இருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x