ஸ்டார் டைரி: எம்.வீ.ராஜம்மா | உச்ச நட்சத்திரங்களின் திரைத் தாய்! பகுதி 2
கண்களை நிறைக்கும் தோற்றப் பொலிவும் காற்றினை வருடும் இனிய குரலும் கொண்டிருந்த எம்.வீ.ராஜம்மா, கணவரின் வேண்டுகோளை ஏற்று நாடக உலகிலும் பின்னர் திரையுலகிலும் அடிவைத்தார். கன்னடத்தில் அறிமுகமாகி, தெலுங்கில் தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது படத்திலேயே தமிழ் திரையுலக்கு வந்தார். சென்னையின் பேசும்பட கம்பெனியான மோகன் மூவிடோன், அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கனை இந்தியாவுக்கு அழைத்து வந்த எம்.எல்.டான்டனை இயக்க வைத்து ‘யயாதி’ என்கிற தமிழ்ப் படத்தை கல்கத்தாவில் தயாரித்தது. அதில், பி.யு.சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்த ராஜம்மாவைத் தமிழ் மக்களுக்குப் பிடித்துப் போனது. பி.யு.சின்னப்பா - ராஜம்மா ராசியான ஜோடியாகிப்போனார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘உத்தம புத்திரன்’ படத்தில் இன்னும் அழகான தோற்றத்தில் மீண்டும் பி.யு.சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்த பிறகு எம்.வீ.ராஜம்மாவின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது.
சமூகப் படத்தில் அங்கீகாரம்
“அளவான உயரம், அழகான கண்கள், நடிப்பில் என்ன ஒரு நளினம்! கன்னட வாசனை கொஞ்சமாக அடித்தாலும் தமிழைச் சேதாரம் செய்யாமல் பேசுகிறார்” என்று வியந்த டி.கே.எஸ். சகோதரர்கள், ‘இவர்தான் நமது படத்தின் கதாநாயகி என்று முடிவுசெய்து ராஜம்மாவை ஒப்பந்தம் செய்தார்கள். மூன்று மாதங்களைக் கடந்து மேடை ஏறிக்கொண்டிருந்த அவர்களுடைய ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தைத் திரைப்படமாக்கித் தரும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள். இந்தப் படத்தின் தயாரிப்புக்கு நிதியுதவி செய்து திரையுலகில் காலடி வைத்தார் எஸ்.எஸ்.வாசன். டி.கே.எஸ்.சகோதரர்கள், ராஜம்மாவுக்கு ஒரு நிபந்தனை விதித்தார்கள். “கோவை பிரிமியர் சினிடோன் ஸ்டுடியோவில் பகல் முழுவதும் படப்பிடிப்பு. இரவில் கோவை ராஜா கலையரங்கில் எங்களது ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தை நடத்துகிறோம். எங்கள் நாடகத்தை ஒருமுறை நீங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் எங்கள் நாடகத்தில் கதாநாயகியின் வேடத்தில் நடிப்பவரைவிட நீங்கள் சிறந்த நடிப்பைத் தரவேண்டும்” என்றார்கள். ‘உத்தம புத்திரன்’ வெற்றிக்குப் பிறகு பட முதலாளிகள் ராஜம்மாவை கால்ஷீட்டுக்காக மொய்க்கத் தொடங்கியிருந்த நேரத்தில் இப்படியொரு நிபந்தனை விதித்தால் அவருக்குக் கோபம் வராத என்ன?
“நான் முகமது பீர் நாடகக் கம்பெனியில் 10 நாடகங்களுக்கு மேல் நடித்தவள். அப்படியிருக்கும்போது நான் இன்னொரு பெண்ணின் நடிப்பைப் பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா?” என்று முறுகிக்கினார் ராஜம்மா. பிறகு மறுக்க முடியாமல் நாடகத்தைப் பார்க்க வந்தார். ‘குமாஸ்தாவின் பெண்’ணாக நடிப்பில் வெளுத்துக் கட்டினார் அந்தக் கதாநாயகி. மிரண்டுபோன ராஜம்மா, “உங்கள் கதாநாயகி அளவுக்கு என்னால் நடிக்க முடியாது, மன்னித்துவிடுங்கள். அவர் அளவுக்கு வசனம் பேச முடியும் என்று தோன்றவில்லை. அன்புகூர்ந்து ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிடுங்கள். நான் கிளம்புகிறேன்” என்று கெஞ்சினார். ஆனால் டி.கே.எஸ். சகோதரர்கள் விடுவதாக இல்லை. “அந்தக் கதாநாயகி திரையில் நடிக்க பட முதலாளி ஒப்புக்கொள்ளமாட்டார். ஏன் தெரியுமா? கதாநாயகியாக நடித்தவர் எங்கள் குழுவின் ஸ்திரீ பார்ட் நடிகரான ஏ.பி.நாகராஜன்” என்றனர். ராஜம்மா அசந்தே போனார்! ‘குமாஸ்தாவின் பெண்’ (1941) வெளியாகி வெற்றிபெற்று வசூலைக் குவித்தது. எஸ்.எஸ்.வாசனை சினிமாவில் தீவிரமாக ஈடுபட வைத்ததுடன், ராஜம்மாவுக்குப் ‘பெண் மைய’க் கதைகள் தேடி வரும்படியும் செய்தது.
முதல் பெண் தயாரிப்பாளர்
‘குமாஸ்தாவின் பெண்’ படத்தைத் தொடர்ந்து ‘மதனகாமராஜன்’, ‘அனந்த சயனம்’, ‘விஜயலட்சுமி’ எனப் பல படங்களில் நடித்த ராஜம்மாவை வைத்து, கன்னடத்தில் ‘பிரஹலாதா’ படத்தை இயக்கினார் தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக மாறியிருந்த கே.சுப்ரமணியம். அதில், கயாது கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். அந்தப் படம் வெளியான கையோடு, ‘ஸ்ரீ விஜயா பிலிம்ஸ்’ என்கிற சொந்தப் பட நிறுவனத்தைத் தொடங்கி, ‘ராதா ரமணா’ என்கிற தன்னுடைய முதல் தயாரிப்பைக் கன்னடத்தில் தயாரிக்கத் தொடங்கினார். அதில், பி.ஆர். பந்துலுவுடன் ஜோடியாக நடித்தார். ஜோதீஷ் சின்ஹா இயக்கிய அந்தப் படம் திட்டமிட்டத்தைவிடத் தயாரிப்புச் செலவு பெருகிக்கொண்டே செல்ல, பல தடைகளைத் தாண்டிப் படத்தை முடித்து வெளியிட்டார். ‘ராதா ரமணா’ வரலாறு காணாத வெற்றியைப் பெற்றதுடன் ராஜம்மாவுக்குக் கன்னட சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர் என்கிற பெருமையையும் தேடித் தந்தது.
சூப்பர் ஸ்டார்களின் திரைத் தாய்!
இதன் பிறகு, 1948இல் சிட்டாடல் தயாரித்து வெளியிட்ட ‘ஞானசௌந்தரி’யில் ரசிகர்களின் உள்ளத்தை உருக வைத்தார் ராஜம்மா. பின்னர் பேரறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதிய ‘வேலைக்காரி’யில் நடித்தபோது பெரிய கவனம் கிடைக்கவில்லை. ஆனால், எம்.கே.டி, பி.யு.சின்னப்பாவுக்கு இணையாகப் புகழ்பெறத் தொடங்கியிருந்த டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியாக ‘பாரிஜாதம்’, ‘லைலா மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து 15 ஆண்டுகள் கதாநாயகியாக நடித்த ராஜம்மாவின் திரைப் பயணத்தில், ‘கேமரா மேதை’ கே.ராம்நாத் இயக்கத்தில் வெளியான ‘தாய் உள்ளம்’ மைல் கல்லாக அமைந்தது.
பி.யு.சின்னப்பா, எம்.கே.டி. காலம் முடிந்து எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் உச்ச நடிகர்களாக உருவானபோது குவிந்த கதாநாயகிகளின் படையெடுப்பால் இரண்டாவது கதாநாயகி வேடங்களுக்குத் தள்ளப்பட்டவர், பின், 30 வயதுக்கு முன்பே அம்மா வேடங்களுக்கு அமர்த்தப்பட்டார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் தொடங்கி, சரோஜாதேவி, ராஜசுலோச்சனா, தேவிகா, ஜெயலலிதா வரை 60 மற்றும் 70களின் உச்ச நட்சத்திரங்களுக்கு ராஜம்மா ஏற்ற அம்மா வேடங்கள் அத்தனை பொருத்தமாக இருக்கும். அலுக்காமல் 30 ஆண்டுகள் அம்மா வேடம் போட்டவர், அறிமுகப் படத்தில் தொடங்கிக் கவர்ச்சியான ஆடைகள் அணியாமல் கண்ணியமான கதாநாயகியாக முத்திரை பதித்தவர், அம்மா கதாபாத்திரங்களுக்குத் தன்னுடைய உருக்கமான நடிப்பால் மகத்துவமும் சேர்த்தவர்.
‘கர்ணன்’ படத்தில் குந்தி தேவியாக மகனின் உடலை மடியில் போட்டுக்கொண்டுக் கதறிய இவருக்கு, தமிழ்ப் பார்வையாளர்கள் தங்களுடைய மனங்களில் நிரந்தர சிம்மானம் கொடுத்திருக்கிறார்கள். கன்னடத்தில் வெளியான ‘ஸ்கூல் மாஸ்டர்’ படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காகத் தேசிய விருதுபெற்ற எம்.வி.ராஜம்மா 1999-ல் தனது 78ஆவது அகவையில் மறைந்தார்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள்: தி இந்து ஆவணக் காப்பகம்
கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க இதோ இணைப்பு: https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/804588-life-story-of-m-v-rajamma.html
