

‘கன்னடத்துப் பைங்கிளி’ சரோஜா தேவி முதல் இன்றைய ராஷ்மிகா மந்தனா வரை கன்னட சினிமா, தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வந்திருக்கிறது. அவர்களில் எத்தனையோ பேர் இங்கே புகழையும் பொருளையும் ஈட்டியிருந்தாலும், முதன் முதலில் கணக்கைத் தொடங்கியவரின் பெயர் எப்போதும் நினைவுக் கூறப்படும். கன்னட சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த முதல் கதாநாயகி எம்.வீ.ராஜம்மா.
யாரிந்த ராஜம்மா என்று கேட்பவர்களுக்கு ஒரு பிரபலமான உதாரணம்: தமிழ் சினிமாவில், கதாநாயகன் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படமான ‘உத்தம புத்திர’னில் (1940) பி.யூ.சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்தாரே அதே ராஜம்மாதான். வேறொரு மொழிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் ‘ராசி’யான கதாநாயகியாகச் சரசரவென்று வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றவர் மட்டுமல்ல; தன்னுடைய தமிழ்த் திரையுலகப் பயணத்தின் தொடக்கத்திலேயே ‘பெண் மையக் கதை’களில் நடித்த அதிர்ஷ்டமும் ராஜம்மாவுக்கு உண்டு. இவருடைய மற்றொரு ‘முதல்’ சிறப்பு, எடுத்த எடுப்பிலேயே மூன்று மொழிகளில் நடித்தது. ‘சம்ஸார நௌகா’ என்கிற கன்னடப் படத்தில் அறிமுகமான ராஜம்மா, இரண்டாவதாக ‘கிருஷ்ண ஜராஸந்தா’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார். மூன்றாவதாக ‘யயாதி’ என்கிற தமிழ்ப் படத்தில் நடித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு மூன்று மொழிகளிலுமே பிரபலமானாலும் எம்.வீ.ராஜம்மா அதிகமாக நடித்தது தமிழில்தான்!
சேலத்தின் புத்திரி
கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் ராஜம்மா பிறந்தது சேலத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலகிரி என்கிற மலையூரில். அந்தப் பெரிய கிராமத்தில் உள்ள சூலகிரி அணைக்கட்டு இன்றைக்குப் பிரபலமான ஒன்று. ஓசூர் தொழிற்பேட்டையின் ஒருபகுதி, இந்த ஊரை ஓட்டி அமைந்திருக்கிறது. கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இந்த ஊரில் இன்றைக்கும் கணிசமான அளவில் வசித்துவருகிறார்கள். அங்கே ஒரு ஏழைக் குடும்பத்தில், நஞ்சப்பா - சுப்பம்மா தம்பதியின் மூத்த மகளாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பியும் தங்கையும்.
வறுமையைப் போக்குவதற்காக நஞ்சப்பா பெங்களூருவில் குடியேறினார். அங்கே, சிக்பெட்டில் இருந்த ஆரிய பாலகி நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் ராஜம்மா. அங்கே 4-வது பாரம் (8ஆம் வகுப்பு) வரையில் பயின்ற ராஜம்மாவின் குரல்வளம் கண்டு பள்ளி நாடகத்தில் கிருஷ்ண வேடம் கொடுத்தார்கள். பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு வந்த மைசூர் யுவராணி, ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்துப் பாராட்டிப் பரிசளித்தார். அவரது பள்ளியில் சங்கீத ஆசிரியராக இருந்த சுப்ப ராவ், ராஜம்மாவுக்கு பயிற்சியளிக்க, அவரிடம் கற்பூரம்போல் பாடக் கற்றுகொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
ராஜம்மாவுக்கு 16 வயது நிறைந்தபோது மைசூரைச் சேர்ந்த வீரப்பா என்பவருக்கு மணம் முடித்து வைத்தனர். ராஜம்மாவின் முன்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் ‘எம்’ என்கிற எழுத்து மைசூரையும் ‘வீ’ என்கிற எழுத்துக் கணவரின் பெயரான வீரப்பாவையும் குறிப்பவை. வீரப்பா ஒரு தொழில்முறை நாடக நடிகர். மைசூர் ஸ்ரீ சகுந்தலா நாடக மண்டலியில் நடித்துவந்த வீரப்பாவுக்கு முதலாளி உரிய ஊதியத்தைக் கொடுக்காமல்போகவே குடும்பம் மிகவும் கஷ்டத்தைச் சந்தித்தது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்த கணவருக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்று கணவரை அழைத்துக்கொண்டு தனிக் குடித்தனம் போனார் ராஜம்மா.
வாழ்வளித்த சென்னை
இந்த நேரத்தில் கணவருக்குக் கைகொடுக்கும் விதமாக நாடக உலகில் காலடி வைத்தார் ராஜம்மா. கலா சேவகா நாடக மண்டலி, அன்றைய மதராஸ் பட்டனத்தில் ‘சம்ஸார நௌகா’ என்கிற நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தது. அதில் கதாநாயகியாக நடித்து வந்தவர் வேறொரு நாடகக் கம்பெனிக்குத் தாவிச் சென்றுவிடவே, அந்த நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாதவ ராவ் என்பவர், தன்னுடைய நண்பரான வீரப்பாவைத் தேடி வந்து ‘சம்ஸார நௌகா’வில் ராஜம்மாவை நடிக்க அழைத்து வரும்படி கேட்டார். வீரப்பா முதலில் மறுத்தாலும் குடும்ப நிலை கருதிச் சம்மதித்தார். நல்ல குரல் வளமும் பாடும் திறனும் கொண்டிருந்த ராஜம்மா, ‘சம்ஸார நௌகா’ நாடகத்தில் பி.ஆர்.பந்துலுவுக்கு ஜோடியாக நடித்தார். நாடகம் இன்னும் பிரபலமாகவே மதாராஸ் தேவி பிலிம்ஸ் கம்பெனி இதைக் கன்னடத்தில் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. அப்போது, அதில் நடித்த அத்தனை நடிகர்களையும் திரைப்படத்திலும் நடிக்கவைத்தார்கள். ராஜம்மாவின் அறிமுகப் படமான ‘சம்ஸார நௌகா’ அவரது நடிப்புக்கும் பாட்டுக்கும் நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது. ஆனால், படம் தோல்வி அடைந்தது. இதனால் உடனடியாக ராஜம்மாவைத் தேடி எந்த சினிமா வாய்ப்பு வரவில்லை. ஆனால், நாடக அனுபவம் அவரைக் கைவிடவில்லை.
மீண்டும் நாடகம்
முப்பதுகளின் சென்னையில், முகமது பீர் நடிக்கும் நாடகங்கள் என்றால் கூட்டம் அள்ளும். அவ்வளவு தத்ரூபாமான நடிகர். இவர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை நிறுவி, ‘சம்ஸார நௌகா’ நாடகத்தைத் தமிழில் நடத்த விரும்பினார். அந்த நேரத்தில் கன்னடத்தில் வெளியான ‘சம்ஸார நௌகா’ படத்தில் ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்து, அவரைத் தன்னுடைய நாடகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். தமிழில் நடத்தப்பட்ட ‘சம்ஸார நௌகா’ வுக்கு வரவேற்பு அள்ளவே, அடுத்தடுத்த நாடகங்களையும் அரங்கேற்றினார் முகமது பீர். ‘ஷாஜஹான்’, ‘பிரேம் லீலா’, ‘கௌதம புத்தர்’, ‘சதாரம்’ என வட இந்தியக் கதைகளை வெற்றிகரமான தமிழ் நாடகங்களாகக் கொடுத்தபோது மதராஸ் வாசிகள் கொண்டாடித் தீர்த்தார்கள். இந்த நாடகங்கள் அனைத்திலும் எம்.வி.ராஜம்மாதான் கதாநாயகி. இதனால், மதாராஸில் அவருடைய புகழ் பரவியது. இதைக் கண்ட மதராஸ் ஐயா பிலிம்ஸ் கம்பெனி, தாங்கள் தயாரித்த ‘கிருஷ்ண ஜராஸந்தா’ (1938) என்கிற தெலுங்குப் படத்துக்கு ராஜம்மாவை ஒப்பந்தம் செய்தார்கள். அதில், அன்று பிரபலமாக இருந்த தெலுங்கு நடிகர் கக்கையாவுக்கு ஜோடியாக ராஜம்மா நடித்தார். ‘சம்ஸார நௌகா’ பெற்றுக்கொடுத்த பெயரை ‘கிருஷ்ண ஜராஸந்தா’வில் தக்கவைத்துகொண்டார் ராஜம்மா. இந்தப் படம் ராஜம்மாவுக்கு முதல் வெற்றியாகவும் அமைந்ததுடன் சென்னையில் வசூல் வெற்றியையும் பெற்றது. முதலில் தாய்மொழினா கன்னடம், அடுத்து தெலுங்கு, மூன்றாவதாக தமிழ் மொழியில் ராஜம்மாவின் அறிமுகப்படும் அவருக்கு எப்படி அமைந்தது? அதன் பின்னணியையும் அவருடைய தமிழ்த் திரைப் பயணத்தின் தடங்களையும் இரண்டாம் பாகத்தில் (நிறைவுப் பகுதி) பார்ப்போம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள்: ‘தி இந்து’ஆவணக் காப்பகம்