Published : 15 Apr 2016 12:49 PM
Last Updated : 15 Apr 2016 12:49 PM

என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: நமீதா சிறப்பு பேட்டி

அதிரடி எடைக்குறைப்பு, அகோரி கதாபாத்திரம் என்று நமீதா பார்க்கவே புதிதாக இருக்கிறார். “கடந்துபோன நாட்களைப் பற்றிக் கவலையில்லை; இனி வரும் நாட்கள் எனக்கானவை” என அவர் இந்து தமிழுக்காக உற்சாகமாகப் பேசியதிலிருந்து ஒரு பகுதி

எதற்காக இத்தனை அதிரடியாக உடல் எடையைக் குறைத்தீர்கள்?

தமிழ் சினிமாவுக்கு நான் வந்தபோது மிகச் சரியான தோற்றத்தில் இருந்தேன். கடந்த 12 வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று ஐம்பது படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் தமிழ் மக்கள், முக்கியமாக ரசிகர்களாகிய என் ‘மச்சான்கள்’ என் மீது காட்டிய அன்புதான் இதற்குக் காரணம். சமீபத்தில் சேலம் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கே அரை மணிநேரத்தில் இருபதாயிரம் ரசிகர்கள் திரண்டு எனக்குக் கொடுத்த வரவேற்பால் திக்குமுக்காடிப்போனேன். நிபந்தனையற்ற இவர்களது அன்பின் காரணமாகவே என் எடை கூடியிருக்க வேண்டும். உடல் எடை கூடிய தோற்றத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.

ஒரு கட்டத்தில் “‘ஒபிசிட்டி’ என்ற எல்லைக்குள் நுழைந்துவிடாதீர்கள்; அது மிக ஆபத்தானது. தற்போது உங்கள் உயரம்தான் ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறது” என்று மருத்துவர் என்னை எச்சரித்தார். இதுதான் நான் உடல் எடையைக் குறைக்க முக்கியமான காரணம். தற்போது 21 கிலோ எடையைக் குறைத்து, இடுப்பின் சுற்றளவில் 10 அங்குலம் குறைத்திருக்கிறேன். நான் நடிக்க வரும்போது எப்படியிருந்தேனோ அப்படி மாறிவிட்டேன்.

இதற்கு, கடந்த எட்டு மாதங்களாக தினசரி 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. தேவையான அளவு எடையைக் குறைத்துவிட்டதால் உடற்பயிற்சிக்கான நேரத்தை 4 மணிநேரமாக முதலில் குறைத்தேன் தற்போது தினசரி 2 மணிநேரமாகக் குறைத்துவிட்டேன். எனது உணவுமுறையும் தலைகீழாக மாறிவிட்டது. விருப்பமான உணவுப் பொருட்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டுக்கொள்கிறேன். என் உயரத்துக்கு ஏற்ற எடைக்குத் திரும்பிய பிறகு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை என்னால் வர்ணிக்க முடியவில்லை.

தற்போது உங்கள் திட்டம் என்ன? கதாநாயகியாகத் தொடர்வதா அல்லது உங்கள் சக நடிகர் நண்பர் சத்யராஜ் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பதுபோல் நீங்களும் களமிறங்கலாம் என்று நினைக்கிறீர்களா?

இப்போதைக்கு கேரக்டர் ரோல்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. கதாநாயகி அல்லது இரண்டாவது கதாநாயகியாக நடிக்க விரும்புகிறேன். சத்யராஜ் சாருக்குக் கிடைப்பது போன்ற அற்புதமான கேரக்டர் ரோல்கள் என்னைப் போன்ற நடிகைகளுக்குத் தமிழ் சினிமாவில் என்றில்லை, இந்தியா சினிமா முழுக்கவே கிடைப்பதில்லை என்பதுதான் ரியாலிட்டி. இல்லாத ஒன்றைப் பற்றி ஏன் நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் மீது படிந்திருக்கும் ‘க்ளாமர் குயின்’ இமேஜ் மீது இன்னும் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது?

நான் நம்புகிறேன்... முழுமையான க்ளாமர் குயின் நான் மட்டும்தான்! ரசிகர்களுக்கு என் க்ளாமர் தோற்றம் மீது எவர்க்ரீன் ஈர்ப்பு இருக்கிறது. நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எனது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். எல்லோராலும் க்ளாமர் பண்ண முடியாது. என் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. க்ளாமர் காட்டினால் அது பார்வைக்கு உறுத்தாமல் இருக்க வேண்டும். நான் க்ளாமராக நடித்தால் வல்கராகத் தெரியவில்லை என்பது என் பெண் ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது. நான் ரசிகர்களைச் சந்திக்கும்போது வெறுமனே அவர்களோடு கைகுலுக்கிவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிடுவதில்லை. அவர்களுடன் உரையாடுவது பிடிக்கிறது. அப்போது என் க்ளாமர் பற்றி எனது மச்சான்கள் கவிதையே படிப்பார்கள். நானொரு கவிஞர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ட்விட்டர் இன்னும் சிறந்த உரையாடல் களத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. தற்போது முற்றாக என் பழைய தோற்றத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில் நான் கதாநாயகியாக நடிப்பதுதானே சரியாக இருக்க முடியும்.

தமிழ் சினிமா உலகம் உங்களையொரு க்ளாமர் பொருளாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

இருக்கலாம். ஆனால், தற்போது கடந்துபோன நாட்களையே ஏன் நாம் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். எல்லை மீறி யாரும் என்னைச் சித்தரித்துவிட முடியாது. இப்போது நான் புதுமுகம் கிடையாதே. இனி எல்லாவற்றையும் நல்ல கண்ணோட்டத்தோடு பார்ப்போம் என்ற இடத்துக்கு வந்திருக்கிறேன்.

உடல் எடையைக் குறைத்த பிறகு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறீர்களா?

ஆமாம். பரத் கதாநாயகனாக நடிக்கும் ‘பொட்டு’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். இது அமானுஷ்யம் கலந்த பேய்ப் படம். நான் துணிச்சலான பெண். ஆனால், பேயாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, என்னைக் கண்டு பேய்கள் நடுங்கும் ஒரு லீட் ரோலை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இதுவொரு பெண் அகோரி கதாபாத்திரம். இந்தப் படத்துக்காக ஸ்பெஷல் மேக்-அப் மூலம் கறுப்பு நிறத்துக்கு மாறுகிறேன். இந்த மேக்-அப்புக்காக மட்டும் பல லட்சங்களைத் தயாரிப்பாளர்கள் செலழிக்கிறார்கள். என் கேரக்டர் பல காட்சிகளில் சுருட்டு பிடிப்பது போன்ற சித்தரிப்பு இடம்பெறுகிறது. சுருட்டை உறிஞ்சும்போது மிகவும் கஷ்டப்படுகிறேன். அதன் கெட்ட வாசனையைப் பொறுத்துக்கொள்வது சிரமமாக இருக்கிறது. நாள் முழுவதும் சுருட்டுப் பிடிக்கும் அகோரிகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

உங்கள் வீடு முழுக்கச் செல்லப்பிராணிகள் ஓடிக்கொண்டிருக்கும் என்று கேள்விப்பட்டோம். அது உண்மைதானா?

ஆமாம். தற்போது செல்லங்கள் மட்டும்தான். நான் நாய்கள் என்று கூறுவதில்லை. முன்பு பச்சோந்தி ஒன்றை வளர்த்துவந்தேன். பிறகு, லவ் பேர்ட்ஸ். படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் லவ் பேர்ட்ஸ் நம்மைப் பிரிந்த துக்கத்தில் இறந்துவிடுகின்றன. ஆனால், செல்லங்கள் நம் வருகைக்காகக் காத்திருக்கும். தற்போது சாக்லேட், காரமெல், லட்டு என மூன்று செல்லங்களை (நாய்கள்) வளர்த்துவருகிறேன்.

திருமணம், காதல் இவற்றிலெல்லாம் உங்களுக்கு ஈடுபாடு கிடையாதா?

காதல் என்னிடம் நிறைய இருக்கிறது… ஆனால் அதை எடுத்துக்கொள்ள யாருமே இல்லை. காதல் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதைத் தேடி நான் போக மாட்டேன். காதல் என்னிடம் வந்து மண்டியிட வேண்டும் என்று நினைக்கிறேன். நடிப்பில் சாதிக்க வேண்டியது இனிதான் அதிகமாக இருக்கிறது. எனவே, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குத் திருமணம் பற்றி நான் யோசிக்கவே போவதில்லை.

தமிழகம் வந்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட ஹீரோயின்களின் வரிசையில் சேர்ந்துவிட்டீர்கள். அவர்களில் பலர் அரசியலில் இறங்கிக் கலக்கிக்கொண்டிருக்கிறார்களே?

அரசியலில் சரியான தருணத்தில் இறங்க விரும்புகிறேன். பெண்கள் முன்னேற்றத்துக்கும், குழந்தைகள் கல்விக்கும் முக்கியத்துவம் தரும் கட்சியில் இணைவேன்.

உங்கள் வாக்குரிமை உங்கள் சொந்த ஊரான சூரத்தில் இருக்கிறதா, இல்லை சென்னையிலா?

நான் முழுமையான தமிழ்ப் பெண்ணாக மாறிவிட்டேன். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்குரிமை எல்லாம் எனக்கு இங்கேதான். மே-16 அன்று வரிசையில் நின்று வாக்கு செலுத்துவேன்.

படங்கள் உதவி: நமீதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x